(ஓஷோ ரஜினீஷ் அவர்களுக்கு சமர்ப்பணம்)

ஒரு பக்கம் சாய்த்து ஏந்திய மதுக்கிண்ணத்தின்
ததும்பும் விளிம்பின் வளைவாக
மஞ்சள் வளர்நிலா வானில் மெல்லேறுகையில்
பரவசம்
இரவின் சிரசுக்குள்
நட்சத்திரங்களாக துளிர்த்தது

மெர்க்குரி விளக்குகள் கிடத்திய
கருநீள் நிழல்கள் மேல்
பொருட்படுத்தாது விரைகின்றன
வாகனங்கள்
வண்ணச் சொட்டுகளாக

முன்னெப்போதும் அறிமும் இராத
நரன்கள் நாரிகள்
சேர்ந்தும் பிரிந்தும் பின் கலைந்தும்
ஒருவரையொருவர்
கைகள் பற்றி குலுக்குகின்றனர்
கட்டி அணைத்து திளைக்கின்றனர்
உண்ணவும் அருந்தவும்
உபசரித்து அழைக்கின்றனர்

சுரந்து வழிந்தோடும்
அன்பினில் பிரதிபலித்து ஒளிர்கிறது
சமிக்ஞை விளக்குகள் நிறங்கள்

மதுவின் புனித நதியில் முங்கிக் குளித்து
இவர்கள் ஞானஒளி சூடிய
அன்றிரவின்
விடியல் தொடங்கலில்
வோட்கா மெல்லப்படர்ந்து கவிந்தது
யெங்கும்
வெண்பணி மூட்டமென
*

மஞ்சள் மதுவின் ஒளிக்கைகள் நெருடலில்
ஆல்பத்தின் ஏடுகள் மெல்லப் புரள்கிறது

பெருவழிச்சாலையின் வாகனங்களாகி
விரைகிறது
பருவம்தொடங்கி சேகரமான
வண்ண நிழல்கள்

விதைவெடித்து இலைதுளிர்த்த
காமத்தின் அவாவை எரித்து
மீந்த ஈரம்
பனிக்கால விடியலை
அல்லது கோப்பையில் நிரம்பிய வெண்ணிற வோட்காவை
நினைவில் மிதக்க விடுகிறது

மதுவின் புனிதப் பெருநதியிலிருந்து
கிளைபிரிந்த
தன் மைதுன நதியில்
மிதந்துபோனது எனது காலங்களின் ஆல்பம்.
*

மது சீசாவின் கண்ணாடி காம்பில் பூத்து
விரிந்தது மஞ்சள் நிற மலரொன்று
பொங்கி மலர்ந்தசைந்த ஈர மலரினிதழ்கள்
வழிந்து உதிர
காணாது அணைந்தது நுரைமைச் சுடர்
ஒடிந்துதிர்ந்த
நறுமணங்களின் சிறகுத் துணுக்குகள்
துடித்தசைகின்றன
முகங்களின் முன்புறத் திடலில்
*

பியர் சீசாவின் பொன்கழுத்தில் பரவி மிளிரும்
நுரை அட்டிகையை
மெல்ல அணிகளை கையில்
அது உன்னுடன்
காதலும் நறுமணமும் கலந்த
நறுவாச மொழியில் பேசும்

வளையினடியில் பொதிந்திருக்கும் பந்து
அடைந்து தேங்கும் நீரின் முதுகிலேறி
மேலே வருவதுபோல
அருந்தும் மதுத்துளிகளின் சிறகிலமர்ந்த
உன் அன்பின் வீழ்படிவு
வெளிப்பறந்து வட்டமிடும்

சிதறிய மது ஈரத்தில்
விழுந்த விதை விரிக்கப்போகும் நிழலுக்காக
காத்திரு காத்திரு...
*

மதுச் சாலை போகும் வழியில்
என் பார்வையில் படநின்றது
மஞ்சள் சிறு பூப்பூக்கும்
காட்டுச்செடி

பிறந்த சிசுவின் உள்ளங்கையாக
விரிந்த குற்றிலைப்பரப்பில்
சிறு விரல்களாக நீண்டிருக்கும்
வெண்முட்கள்
காற்றின் விரல் பிடிக்க
தாழ்ந்தும் உயர்ந்தும் அலைகிறது

ஒற்றைப் பூ மட்டும் இதழ் விரித்திருக்கும்
கிளை நுனியில்
மறுநாளைக்கான சிறு மதுக்கிண்ணத்தை
குமிழ்த்திருக்கும் குறு மொட்டாக

நீர் வறண்ட கோடையில்
நிழலற்ற பாதை வெளியில்
நான் பார்க்கிறேன்
கோரிக்கை ஏதுமற்று
குறுமஞ்சள் பூப்பூக்கும் காட்டுச்செடியை
மதுச்சாலை போகும் வழியில்
*

ஒருநாள்
ஊரற்ற பெயரற்ற
ஒரு தீர்க்க தரிசி வந்தான்

அவன் கைவசமிருந்த
புனித நூலில்
வரிகள் படங்கள் அட்சரங்கள்
எதுவும் இல்லை

கண்களால் அல்ல
நாசியால் வாசியுங்கள் என்றான்
தூய வெண்பக்கங்களில்
தெளித்த மதுவின் வாசம்
நெருக்கமாக அச்சாகி இருந்தது

நுகர்ந்தவர் யாவரின்
உடலில் பசுங்கிளைகள் சொரிந்தன
பூக்களும் கனிகளும்.

Pin It