கவிதை நூலொன்றுக்கு அவ்வளவு இணக்கமில்லாத ‘சேகர் சைக்கிள் ஷாப்' என்று தலைப்பிட்ட இந்த தொகுப்புக்காக விக்ரமாதித்யன் அனுப்பியிருந்த கவிதைகளின் ஆச்சரியப்படுத்தும் எண்ணிக்கை. ஏறத்தாழ முந்நூறுக்கும் அதிகம். அவற்றிலிருந்து தொகுப்புக்கான கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் சலுகையையையும் அளித்திருந்தார். எந்தப் புத்தக உருவாக்கத்துக்கும் அடிப்படையான செயல் இதுவாகவே இருக்கும். அதன் சாத்திய வடிவந்தான் இந்த நூல். ஆனால் இதிலிருந்து விக்ரமாதித்யனின் கவிதைஇயல் குறித்த சில கருத்துக்களுக்கு வந்து சேர முடிந்தது என்பதுதான் எனக்குச் சாதகமாக அமைந்த அம்சம்.

தமிழில் கவிதை எழுதுபவர்களில் மிக அதிகமாக எழுதுபவரும் மிகச் சரளமாக எழுதுபவரும் மிக இயல்பெழுச்சியோடு எழுதுபவரும் விக்ரமாதித்யன் என்பது இந்த எண்ணிக்கைப் பெருக்கத்திலிருந்து கண்டடைந்த முதல் செய்தி. கவிஞனாகவன்றி தனக்கு வேறொரு பொது அடையாளமில்லை என்பதை இருப்பின் வாயிலாகவும் எழுத்தின் வாயிலாகவும் நிறுவுவது மட்டுமல்லாமல் அதைத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டுமிருக்கிறார் என்பது அடுத்த செய்தி.

கவிதை வாசகனாக மனதில் நிற்கும் சில வரிகளை, வாழ்க்கையின் பிரத்தியேக தருணங்களில் துக்கத்தோடு முணுமுணுக்கவும் மகிழ்ச்சியோடு உச்சரிக்கவும் கழிவிரக்கத்தோடு அரற்றவுமான சில வரிகளை விக்ரமாதித்யன் எனக்குக் கொடுத்திருக்கிறார்.

‘செளந்தர்யக் கூச்சம் சாப்பாட்டுக்குத் தரித்திரம்', ‘கரடி சைக்கிள் விடும்போது நம்மால் வாழ்க்கையை அர்த்தப்படுத்த முடியாதா?' ‘சுயமைதுனத்துக்கும் வேண்டும் ஒரு முகம்', ‘நெஞ்சு படபடக்கிறது / நீர்வீழ்ச்சியென்று / அருவியை / யாராவது சொல்லிவிட்டால்,' ‘தரித்திரத்தில் கெட்டது ருசி', ‘வீடு பத்திரமான இடம் / புலிப்பால் கொண்டுவரப்போனான் அய்யப்பன்' போன்ற வரிகள் வாழ்வின் வெவ்வேறு சஞ்சாரங்களில் அந்த நேரத்து உணர்வுக்குத் தோதாக மனதில் அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. சமகாலக் கவிதை வாசகனின் அனுபவமும் வேறாக இராது என்றும் தோன்றுகிறது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் விக்ரமாதித்யன் நவீன தமிழ்க்கவிதையில் புறக்கணிக்க முடியாத ஆளுமை. கவிதையின் பாடுபொருட்கள் பற்றிய கருத்தை ஒதுக்கிவைத்துப் பார்த்தால் இவரளவுக்கு இயல்பெழுச்சியுடன் எழுதியவர்கள் குறைவு. விக்ரமாதித்யனின் கவி ஆளுமையின் முதன்மையான கூறு இந்த இயல்பெழுச்சி. இதிலிருந்தே சரளமும் எண்ணிக்கையும் உருவாகின்றன. இதன் விளைவாக நவீன காளமேகமாக இவரை உருவகிக்கலாம் என்ற குதர்க்கமான யோசனையும் எழுகிறது.

வாழ்க்கை, இலக்கியம் இரண்டும் வேறுவேறு. ஆனால் ஒன்று. இந்த புதிரான சமன்பாட்டை தன் இருப்பிலும் எழுத்திலும் ஒரே சமயம் தீர்த்துக்கொள்ள முயல்கிறவர் இவர். இரண்டும் ஒன்றையொன்று முரண்பட்டும் ஒன்றையொன்று வழிநடத்தியும் நகர்கிற அபாயகரமான விளையாட்டாகத் தொடர்கின்றன. விளையாட்டில் அடையும் வெற்றிகள் பற்றி விக்ரமாதித்யன் தம்பட்டமடித்துக் கொள்வதில்லை; தோல்விகள் குறித்துப் புலம்பாமலுமில்லை. வாழ்வின் அவலங்களைக் கவிதையிலும் கவிஞனாக இருப்பதன் சிக்கல்களை வாழ்வின் தருணங்களிலும் உணர்கிற ஆகத்தொகை இவரது இருப்பு. இதுவே தனது விதி என்றும் ஏற்றுக்கொள்கிறார். அவரவர் குணாம்சம்தானே அவரவர் விதி.

தமிழிலக்கிய மரபில் நாடோடி மனத்துடன் அலைந்த பாணர்களின் வாழ்க்கையோடு தான் ஒப்பு நோக்கிப் பேசப்பட விக்ரமாதித்யன் உள்ளூற ஆசைகொண்டிருப்பாரோ என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு. தமிழ்க் கவிதை மரபின் இடையறாத தொடர்ச்சியாகத் தன்னை நிறுவிக்கொள்ளும் நியாயமான உரிமைகோரல் இதற்குக் காரணமாக இருக்கலாம். நவீன தமிழ்க் கவிதை மேற்கத்திய பாதிப்பின் விளைவு என்று குறிப்பிடப்பட்டாலும் அது தமிழ்மனமும் வாழ்வும் சார்ந்தது என்று எழுதத் தொடங்கிய காலம் முதல் வாதாடி வருபவரான விக்ரமாதித்யன் அவ்வாறு ஆசைகொள்வதும் இயல்பானது.

விக்ரமாதித்யன் ஏறத்தாழ மூன்றரைப் பதிற்றாண்டுகளாகக் கவிதை எழுதி வருகிறார். இது அவரது பதினைந்தாவது தொகுப்பு. பெரும்பாலும் சிற்றிதழ்களிலேயே வெளிவந்தவை அவரது கவிதைகள். நூறுகளின் மடங்கான எண்ணிக்கையில் இருக்கும். கவிதை குறித்து தீவிர அக்கறையில்லாத சமூகத்தில் இவ்வளவு எழுதிக் குவித்திருப்பது கவிஞனாக வரித்துக்கொண்ட இருப்பைச் சுட்டிக்காட்டுவதாகவும் பழிவாங்கும் செயலாகவும் கருதலாம். அதேசமயம் இந்த விசாலமான எண்ணிக்கையே விக்ரமாதித்யன் கவிதைகள் மீதான முதல் விமர்சனமாகவும் அமைகிறது.

நவீன கவிஞர்களில் மிகுந்த இயல்பெழுச்சியுடன் எழுதக்கூடிய சிலரில் விக்ரமாதித்யன் ஒருவர். அதை நிறுவும் வகையில் எழுதியிருப்பவரும் எழுதிவருபவரும் கூட. இந்த இயல்பெழுச்சியை தனக்கே குந்தகமாக ஆக்கிக் கொண்டிருப்பவரும் அவர்தாம். கவிதைக்கான உந்துதலின் பொறியெழுந்ததும் அது அனுபவமாகக் கனன்று சுடர் கொள்வதற்குள் ஊதி எரித்துத் தீர்க்கிறார்; அல்லது புகைந்து கரையச் செய்கிறார். இது அவரது கவிதை மனநிலையில் தவிர்க்கவியலாத ஒன்று என்பதை அவரது கவியுலகை உணரும் சீரிய வாசகன் அறிய முடியும். கூறியது கூறலும் மிகைபடக் கூறலுமாக அவர் கவிதைகள் தென்படுவதன் காரணமும் இதுவாக இருக்கலாம். இதைக் கடந்தும் அவரால் எழுத முடியும் என்பதற்கான சான்றுகளாக உள்ள கவிதைகளும் அதிகம். இவைதாம் விக்ரமாதித்யனை தமிழில் பொருட்படுத்தத் தகுந்த கவிஞராக நிலைநிறுத்துகின்றன.

சமகாலத் தமிழ் வாழ்வின் சிக்கல்களும் அதில் அகப்பட்டுத் திணறும் மனசின் கோலங்களும் விக்ரமாதித்யனின் பாடுபொருட்கள். அதை வெளிப்படுத்தும் முதன்மையான தொனி கழிவிரக்கம் சார்ந்தது. அவரது மொழியில் வரையறுத்தால் நொய்மை'யானது. ‘இவனும் கவிதையில் புலம்புவதாக / எல்லோரும் சொல்கிறார்கள் / புலம்புகிறாற் போலத்தான் / இருக்கிறதோ இருப்பு?' என்ற கேள்வியின் வெவ்வேறு சஞ்சாரங்களை அவரது கவியுலகின் எல்லா இடங்களிலும் காணலாம். இந்த நொய்மையின் மறுபக்கமான சினம், சஞ்சார பாவங்களை மாற்றுவதும் புரியும். இவையெல்லாம் விக்ரமாதித்யனின் கவியுலகை அணுகும்போது தென்படும் ஆரம்ப அடையாளங்கள். இந்த அடையாளங்களைக் கடந்தே அவரது கவியுலகை நெருங்க முடிகிறது.

எதார்த்தமானது, சமகாலத்தன்மையுடையது என்ற இரண்டு வரையறைகளால் விக்ரமாதித்யனின் கவியுலகை அடைந்துவிடலாம். இவ்விரு வரையறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக இணைந்திருப்பதையும் குறிப்பிட வேண்டும்.

விக்ரமாதித்யனின் கவிதைகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பகுக்கலாம். தனி வாழ்க்கை சார்ந்தவை, சமூகம் அரசியல் சார்ந்தவை, கவிஞர் புழங்கும் இலக்கிய உலகம் சார்ந்தவை. இவை தனித்தும் ஒன்றுக்குள் ஒன்று கலந்தும் சார்ந்தும் முரண்பட்டும் இயங்குகின்றன. இதனால் உருவாகும்நிலைகுலைவும் தத்தளிப்பும் இதிலிருந்து விடுபட மேற்கொள்ளும் தொடர்முயற்சிகளுந்தாம் விக்ரமாதித்யனின் இருப்பும் இயக்கமும்.
இதை வேறொரு கோணத்திலும் பார்க்கலாம்.

‘நான்' என்ற தன்மைக்கூற்றுடன் கவிதைகளில் அறிமுகமாகும் நபர் தனக்கு முன்னுள்ள பெரும் மரபில் தன்னைத் தேடிக்கொண்டிருப்பவன்; மொழியின் பாய்ச்சலுக்கு இசைய நகர விரும்புகிறவன்; லெளகீக வாழ்வின் சாதாரண, அசாதாரண நடவடிக்கைகளை ஒரே கண்ணோட்டத்துடன் அணுகுபவன்; காலத்தின் ஏதோ ஓரிடத்தில் நின்றுவிட்ட சரித்திரம் அங்கே முடிவதில்லை அதற்கப்பாலும் தொடர்கிறது என்று அறிந்திருப்பவன்; இந்த குணாம்சங்கள் அவனை அதிருப்தியுள்ளவனாக்குகின்றன. இந்த குணாம்சங்களை பொருட்படுத்தத் தேவையில்லாதவை என்று நம்பும் சமூக உறவுகளில் அவன் விலக்கப்பட்டவனாகிறான். தனியனாகிறான். இதை உள்ளுணர்ந்திருப்பவர் விக்ரமாதித்யன். ‘எதற்கும் விசுவாசமாக இருக்கக் / கடமைப்படவில்லை கலைஞன் / யாரிடமும் நன்றியுணர்வு கொண்டிருக்க வேண்டிய / கட்டாயம் எதுவுமில்லை கவிஞன்' என்று சொல்லவும் துணிவிருக்கிறது அவருக்கு. அதே சமயம் கலைஞனுக்கோ கவிஞனுக்கோ பிரத்தியேக சலுகை எதையும் வழங்க அவன் புழங்கும் உலகுக்கு அவசியமுமில்லை. இந்த முரண்நிலையே விக்ரமாதியனிடம் கழிவிரக்கத் தொனியாகிறது. முன்சொன்ன மூன்று பிரதேசங்களிலிருந்தும் அவர் பெறுவது கசப்புக் கனிகள் மட்டுமே.

எதார்த்த தளத்திலேயே உழலும் கவிமனம் விக்ரமாதித்யனுடையது. பேச்சு மொழிக்கு மிக நெருக்கமான கூறல்முறை அவருக்கு வாய்த்திருப்பதுபோல பிற நவீன கவிஞர்களுக்கு அரிதாகவே கைகூடுகிறது. ஒருசொல், ஓர் ஒலிக்குறிப்பு, ஒரு படிமம் அல்லது ஓர் உருவகம் - இவற்றை மையமாகக் கொண்டு அதிர்வலைகளை உண்டாக்கிக் கவிதை வடிவத்தை எட்டி விடுகிறார். அந்த மையம் அனுபவம் சார்ந்ததாக அமையும்போது கவிதையும் அல்லாதபோது வெறும் கூற்றாகவும் ஆகிவிடுகிறது.

விக்ரமாதித்யன் கவிதைகளின் சிறப்பியல்புகளாக சிலவற்றை பின்வருமாறு தொகுக்கலாம் என்று கருதுகிறேன்.
முற்றிலும் நிகழ்காலத் தமிழ் வாழ்க்கையின் நடுத்தட்டு மனநிலையைச் சார்ந்தது விக்ரமாதித்யனின் உணர்ச்சி மண்டலம். மதிப்பீடுகளை எதிர்க்கும். அதே சமயம் அவற்றைக் கைவிட முடியாமல் தடுமாறும். புதுமையை தழுவிக்கொள்ளும். அதைச் சந்தேகத்துடன் விசாரித்துக்கொண்டிருக்கும். உறவுகளின் வெறுமையைக் குறித்துத் தெளிவுகொண்டிருக்கும். வெறுமையை இட்டு நிரப்ப அர்த்தங்கள் தேடிக் கொண்டிருக்கும். இந்த பின்னப்பட்ட மனசை முழுமையாகக் கவிதையில் சித்தரித்திருப்பவர் விக்ரமாதித்யன்.

எளியதும் சீரியதுமான தமிழ்ச் சொற்களால் கவிதையாக்கம் சாத்தியமாகிறது. அபூர்வமாகவே அவரது மொழியில் முடிச்சுகளும் திரிபுகளும் இடம்பெறுகின்றன. பேச்சு வழக்கிலிருந்தும் இலக்கியவழக்கிலிருந்தும் சொற்களைத் தேர்ந்தெடுக்கிறார். கலாச்சார அடையாளங்கள் சார்ந்ததாகக் கவிதை அமையும்போது அவருடைய மொழிக்கு மெருகு கூடுகிறது. தேரைப் பற்றியோ திருநாளைப் பற்றியோ பிடித்த இலக்கியப் பாத்திரம் பற்றியோ பேசக் கிடைக்கிற சந்தர்ப்பங்களில் மேலும் மெருகேறுகிறது.

நவீன கவிதை கலாச்சார அடையாளங்களைத் துறந்து மரங்களையோ நதியையோ இடத்தையோ வருணிக்கும்போது விக்ரமாதித்யன் அவற்றின் பிரத்தியேகத்தன்மையுடனேயே பேச விரும்புகிறார். குற்றால அருவியும் தென்காசியும் திருப்புன்கூரும் பிறவும் அவற்றின் கலாச்சாரப் பின்னணி விலகாமல் கவிதைக்குள் வருகின்றன. நவீன சாதனங்களும்கூட அவரது இந்தப் போக்கில் பிரத்தியேகத் தன்மை தொலையாமல்தான் இடம்பெறுகின்றன. ‘வட்டப்பானைக் கடையில் மார்கோ சோப் கேட்டால் ஹமாம் எடுத்துக் கொடுப்பார்' என்று வரும் வரிகள் இதற்கு உதாரணம்.

விக்ரமாதித்யன் கவிதை சமகாலத்தியது என்கிறபோதே அவருக்கு இயல்பான ஒரு சுதந்திரம் வசமாகிறது. நிகழ்கால அரசியல், கலாச்சாரம், கலை, இலக்கியம் எல்லாத் துறைகளிலும் நடப்பு எதார்த்தங்களை எடுத்தாளத் தோதாகிறது. சிற்றிதழ் இலக்கியச்சூழல் உட்பட எதுவும் கவிதையில் விலக்கப்படுவதில்லை. நவீன கவிதையில் இடக்கரடக்கலுக்கு அவசியமற்ற வெளிப்படையான போக்குக்கு கலாப்ரியாவும் விக்ரமாதித்யனும் முன்னுதாரணங்கள் என்று எண்ணுகிறேன். மன விகாரங்கள், காமம் ஆகியவற்றை மேற்பூச்சுகளில்லாமல் சொல்லலாம் என்று தைரியமளித்தவர்கள் இவ்விருவரும். போதையின் உற்சவத்தையும் வீழ்ச்சியையும் விக்ரமாதித்யன் கூடுதல் இணைப்பாக்கினார். இரந்து கெடும் தனது சுயம் பற்றி எழுதுவதிலும் அவருக்குத் தயக்கம் இருப்பதில்லை.

விக்ரமாதித்யனின் கவிதையுலகை அணுகி அறிந்தவை இவை. இவற்றின் சில அடிப்படைகள் மீதான மாற்று அபிப்பிராயங்களும் எனக்கு உண்டு. கவிதையின் பாடுபொருட்களில் அவரது தேர்வு பெரும்பாலும் ஏமாற்றம் அளிப்பவை. அதிகமான எண்ணிக்கை கொண்டது அவரது கவிதையுலகம் என்பதால் இந்த பெரும்பான்மை குவியலில் கிடக்கும் கூழாங்கல்போல சாதாரணமாகத் தென்படுகிறது. ஆனால் நெருக்கமான பார்வையில் அதே கூழாங்கல் மற்றவற்றைக் காட்சியிலிருந்து மறைத்துவிடுகிறது. எப்போதும் கவிஞன் என்ற அகங்காரத்துடனேயே அவரது பார்வை. அது அவருக்கு உள்ளேயிருக்கும் பாமர வியப்புகளையோ குழந்தைமைப் பரவசத்தையோ ஞானியின் அமைதியையோ முட்டாளின் மகிழ்ச்சியையோ வெளிப்படுத்தத் தடையாகவே இருப்பதாகப்படுகிறது. போதைநிலையில் கூட ‘நான் கவிஞன் குடித்திருக்கிறேன்' என்று சலுகை கோருபவராகவே இருக்கிறார்.

மொழிசார்ந்தும் உணர்வு சார்ந்தும் நவீனமானவர். எனினும் அவரது கவிதையாக்க முறையில் மரபான மதிப்பீடுகளுக்கு அழுத்தமான இடமுண்டு என்று தோன்றுகிறது. உறவுகள், குடும்பம், சமூகம், மதம், கலாச்சாரம் ஆகியவை பற்றி பழைய மதிப்பீடுகளின் மறுபரிசீலனையற்ற தொடர்ச்சியைக் கவிதைகளில் காணக்கூடும். ஆண்டாளையோ காரைக்கால் அம்மையாரையோ திருநாவுக்கரசு சுவாமிகளையோ எடுத்தாளும்போது அவர்களது மொழியின் வீச்சினாலோ கவிதைச் செறிவினாலோ ஈர்க்கப்படுவதைக் காட்டிலும் அவர்கள் மீதான பக்திக்கே ஆட்படுகிறார். இலக்கிய அரசியல் பற்றி அவர் எழுதியுள்ள கவிதைகளிலும் பழைய மதிப்பீடுகளின் எச்சம்.

எனினும் இந்த மனப்பாங்கு வேறு சில சமகால எதார்த்தங்களைக் கேள்வியின் கூர்முனைகளில் நிறுத்தியிருக்கிறது. அங்கயற்கண்ணி மீனாட்சியானதும் கொற்றவை துர்க்கையானதும் ஆதிசிவன் பரமேஸ்வரனானதும் எவ்விதம் என்ற கேள்விகள் பண்பாட்டு அரசியலை அம்பலப்படுத்துபவை. நகர நாகரிகத்தோடுள்ள ஒவ்வாமையும் இதே கூர்மை கொண்டது.

பெண்கள் குறித்த விக்ரமாதித்யன் கவிதைகளிலும் மரபான அகங்காரமே தென்படுகிறது. தேவி ஸ்துதி - கணிகையர் ஒழுக்கம் என்ற இரண்டு எல்லைகளுக்குள் ஒடுங்கிவிடுகின்றன மோகமும் காமமும், பெண்ணுறுப்புகள் ஆணின் வேட்கையை நிறைவு செய்யும் உபகரணங்களாகவே சித்தரிப்புப் பெறுகின்றன. காமத்தின் புனிதப் பெருவெளியில் இரு உயிர்கள் கலந்து பரஸ்பரம் இனம் காணும் ஒரு கவிதைக்கணம் கூட இல்லாத உலகம்.

விக்ரமாதித்யனின் கவிதையுலகில் நான் வேறுபடும் திசைகள் இவை. எனினும் சக கவிஞனாக விக்ரமாதித்யன் எனக்குத் தவிர்க்கப்படக் கூடாதவர். எனக்குள் எங்கோ அவரது கவிதையின் சாரமான கூறு உயிர்த் தன்மையோடு இயங்கக் கூடும். இல்லையெனில் ஒரே மொழியில் பொதுத்தளத்தில் எப்படிச் செயல்பட முடியும்? இல்லையெனில் அவரெப்படி "போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன் வந்து நிற்கிறான் விக்ரமாதித்யன்' என்று உரிமை பாராட்டிக்கொள்ள முடியும்?

Pin It