சிவராமின் கொலையின் பின்னணி - அதற்குக் கொடுக்கப்பட்ட முக்கியம் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு விடயமாகும். ஒரு பத்திரிகையாளர் கொல்லப் பட்டபோது இனமத வேறுபாடின்றி இலங்கையில் ஏனைய ஊடகவியலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடியது ஒரு நிம்மதியான செய்தி தான். தமிழ்ப் பாராளுமன்ற வாதிகளும் தின்ற சோற்றுக்கடனுக்காக என்பது போல் தாங்களும் தங்கள் பங்குக்கு இக்கொலையைக் கண்டித்தார்கள். வடகிழக்கில் மாணவர்களும், பொது சேவை மையங்களும் இக்கொலைக்கெதிராக களத்தில் இறங்கிக் குரல் கொடுத்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் தமது மிக உயர் விருதான “மாமனிதர்’’ விருதை சிவராமுக்குக் கொடுத்தது மட்டுமல்லாது அவரது உடல் அடக்கம் செய்யும் நிகழ்விலும் பங்கு கொண்டு கௌரவித்தார்கள். முக்கியமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் அணி அரசியல் துறைத்தலைவி தமிழினி சிவராமின் வீட்டுக்குச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி இரங்கல் உரையும் நிகழ்த்தினர்.

சிவராம் கொல்லப்படும்வரை, மாமனிதராக்கப்படும் வரை அவரைக்கண்டு கொள்ளாத (சிவராம் என்றால் இதற்கு முதல் யார் என்று தெரியாத சில அய்ரோப்பிய தமிழ் ஊடகங்கள் கூட) பத்திரிகைகள் பக்கம் பக்கமாக அவரைப் பற்றி எழுதி அவரை திருநிலைப்படுத்தின. அதேவேளை தமது பங்குக்கு சிங்களப் பேரினவாதிகள் அவரை - பயங்கரவாதி எனவும் கொலைகாரன் எனவும் விசம் கொட்டித் தீர்த்தார்கள். முக்கியமாக ஈழத்தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான இனவாதத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட ஜாதிக ஹெலஉறுமயவின் செயலாளர் நாயகம் ஒமல்பே சோபித்தேரர் (ஒரு பௌத்த துறவி) “Sivaram was a terrouist journalist” என அறிக்கைவிட்டார்.

சிவராமின் கொலையில் அனைத்துத்தரப்பினர்களும் மாரடித்துக் கொள்வதின் பின்னணி மிகவும் இருள் வெளியானது. இலங்கையில் சிவராம் போன்ற பல பத்திரிகையாளர்கள் ஈழப்போராளிகளாலும் அரசு படைகளாலும் மிக மோசமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்; இனியும் கொல்லப்படமாட்டார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. சிவராம் கொல்லப் பட்டபோது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் ஏனைய பத்திரிகையாளர்களின் கொலையின்போது கொடுக்கப்படவில்லை. கொல்லப்பட்ட ஏனைய பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு சர்வதேச ரீதியாக ஏன் நிதி திரட்டப் படவில்லை.

இலங்கையில் ஜனாதிபதியாக பிரேமதாஸா ஆட்சி செய்த காலத்தில் பிரபல்யம் மிக்க பத்திரிகையாளர் ரிசார்ட் டி சொய்சா மிக மோசமான முறையில் அரச படைகளால் கொல்லப்பட்டு நிர்வாணமாக வீசியெறியப்பட்டார். இந்தக் கொலையின் பின்னணி, கொலைகாரர்கள் பற்றிய விபரம் அனைத்தும் தெரிந்தும், இக்கொலை நடந்து சுமார் பதினைந்து, வருடங்களாகியும் யாரும் தண்டிக்கப்படவில்லை. நீதி கிடைக்கவில்லை. இலங்கையின் வடகிழக்கில் ஈ.பி.ஆர்.எல்.எப். அதிகார காலத்தில் பத்திரிகையாளர் திருச்செல்வத்தைத் தேடிச் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எஃ இயக்கத்தினர் திருச்செல்வம் கையில் அகப்படாத நிலையில் அவரது ஒரே மகனான அகிலன் என்பவரைக் கொன்று வீசினார்கள். இந்திய இராணுவத்துடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டி காங்கேசன்துறை (ஊறணி) பத்திரிகையாளர் முடியப்பு செல்வராஜா விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். நிர்மலராஜன் என்னும் பத்திரிகையாளர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாசம் ஈ.பி.டி.பி. இயக்கத்தலைவர்களால் கொல்லப் பட்டார். மட்டக்களப்பில் அய்யத்துரை நடேசன் என்னும் பத்திரிகையாளர் விடுதலைப்புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா குழுவினரால் 2004 ஆம் ஆண்டு மே மாதம் கொல்லப்பட்டார். பாலநடராஜ அய்யர் எனப்பட்ட பத்திரிகையாளர் 2004 ஓகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார். மட்டக்களப்பில் சதாசிவம் கமலநாதன் என்னும் பத்திரிகையாளர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். இப்படி எமக்குத் தெரிந்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் போக தெரியாது கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேரோ?

இலங்கையின் தலைநகரமான கொழும்பின் மிக முக்கிய இடமான பம்பலப் பிட்டியில் வைத்து சிவராம் கடத்தப்பட்டுள்ளார். அவர் கடத்தப்படும் போது அவருடன் பத்திகையாளர் குசல் பெரேராவும், தொழிற்சங்கவாதி ரவி குமுதேசும் உடனிருந்திருக்கிறார்கள். அவர் கொல்ப்பட்ட கொடூரம், அவரது உடல் வீசப்பட்ட இடத்தின் முக்கியத்துவம் ஆகியவைகளைக் கணக்கிலெடுப் போமாயின் இக்கொலையின் பின்னணியில் மிகவும் பலம் வாய்ந்த சக்தி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது அப்படிப்பட்ட பலம் வாய்ந்த சக்தியின் (அரச தரப்பா?) பின்னணியில் சிவராம் கொல்லப்பட்டிருப்பாராயின்; அவ்வளவு முக்கியத்துவமான மனிதராக சிவராம் இருந்திருக்கிறாரா என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். அப்படி அவர் இருந்திருப்பாராயின் எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தவராக சிவராம் இருந்தார்; பத்திரிகையாளர் என்பதுக்கப்பால் அவரின் செயற்பாடுகள் என்னவாகவிருந்தது என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கண்டேயாக வேண்டும்.

சிவராமின் கொலை இலங்கை அரசின் இரகசியப் பொலிஸ் குழுவால் செய்யப்பட்டது என ஆரம்பத்தில் பேசப்பட்டதுடன் கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டது. பின்பு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப் பட்ட கருணா குழுவால் சிவராம் கடத்திக் கொல்லப்பட்டார் என சொல்லப்பட்டது. இறுதியில், மாலைதீவு அரசை 1988 ஆம் ஆண்டு கவிழ்க்க முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகம் சிறிஸ்கந்தராசா (இவர் PLOT இயக்கத்தின் முன்னாள் தளபதி) மற்றும் மூவருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவரும் இவருடன் கைது செய்யப்பட்ட இன்னொருவரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது சிறிஸ்கந்தராசாவை அடையாள அணிவகுப்புக்கு இடுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம் மற்றவருக்கும் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லையெனக் கூறி அவரை விடுதலை செய்தது. ஆனால் 2005.07.05 திகதி நடந்த அடையாள அணிவகுப்பில் சிறிஸ்கந்தராசாவை அடையாளம் காட்ட, சிவராம் கடத்தப்பட்டபோது உடனிருந்த குசல் பெரேராவும், ரவி குமுதேசும் தவறிவிட்டார்கள். அப்படியாயின் சிறிஸ்கந்தராசாவின் கைது தவறானதா? அல்லது இருநபர்களும் சந்தேக நபரை அடையாளம் காட்டப் பயப்படுகிறார்களா? அல்லது அடையாளம் காட்ட வேண்டாம் என எச்சரிக்கப் பட்டார்களா என்றும் குழப்பம் இக்கொலையின் பின்னணியிலுள்ள முக்கிய கேள்வியாகும்.

இலங்கையில் தினமும் தமிழ் இளைஞர்கள் கொல்லப்படுகிறார்கள். முக்கியமாக வட கிழக்கு மாகாணத்தில் துரோகி என்னும் பட்டம் சூட்டப்பட்டு பல இளைஞர்கள் (மாற்றுக் கருத்தாளர்கள்) விடுதலைப்புலிகளால் கொல்லப் படுகிறார்கள். இவர்களில் முக்கியமானவர்கள் ஏனைய முன்னாள் விடுதலை இயக்கங்களின் போராளிகளாகும். இவர்களில் பலர் அரசியலிலிருந்து விலகி பொதுவாழ்வில் அய்க்கியமானவர்கள். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இளைஞர்கள் கொடூரமாக அழிக்கப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணா என்பவரின் ஆதரவாளர்களான இளைஞர்கள் இலங்கை எங்கும் தேடித்தேடி அழிக்கப்படுகிறார்கள். அதே போல் ஆங்காங்கு ஒரு சில விடுதலைப்புலிகளின் போராளிகளும், ஆதரவாளர்களும் அழிக்கப்படுகிறார்கள். கொலைகள் எங்கு நடந்தாலும் யாரால் செய்யப்பட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதொன்று. தனிமனித கொலைகள் என்றும் பிரச்சனைக்கான தீர்வாகாது. எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் வேறு வேறு இயக்கங்களில் போராளிகளாக இருந்து இப்போது பொது வாழ்வில் போய் விட்டவர்களை வெறியுடன் இன்றும் விடுதலைப்புலிகள் கொன்று வருகிறார்கள்.

அரசியல் கொலைகளை, மனித விரோத செயல்களை அராஜகப் போக்குகளைக் கண்டிக்க வேண்டிய அடையாளம் காட்டவேண்டிய ஊடகங்கள் (சிங்கள - தமிழ்) பக்கசார்பாக பிரச்சனையில் எண்ணை ஊற்றி, அனைத்தையும் நியாயப்படுத்தி எழுதும் மோசமான போக்கை வெட்கமின்றி செய்து வருகின்றன. குறிப்பாக தமிழ் ஊடகங்கள் ஒரு கொலை நடக்கும் பொழுது அக்கொலையை புலிகள்தான் செய்தார்கள் என்று தெரிந்தும் இனம் தெரியாதவர்களால் கொலை செய்யப்பட்டார் என்றும், புலிகளால் யார் கொலை செய்யப்பட்டாலும் கொல்லப்பட்டவர் அரச படைகளுக்கு சார்பானவர் என்றோ; முன்னாள் துரோகக் கும்பலைச் சேர்ந்தவர் என்றோ; இராணுவ முகாமிலிருந்து செயற்பட்டவர் என்றோ எழுதி தமது புலி விசுவாசத்தைக் காட்டிக் கொள்கின்றன. என்றோ இயக்கத்தை விட்டு வெளியேறி வறுமையின் கொடுமை தாங்க முடியாது ஒரு தேநீர்க் கடையில் மிகக்குறைந்த சம்பளத்தில் தேநீர் கலக்கும் வேலையில் ஈடுபட்ட ஒருவர் அண்மையில் மட்டக்களப்பு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டுள்ளார். 2005.07.05 ஆம் திகதி செய்தி ஒன்றின்படி ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான மகாலிங்கம் என்பவர் அவரது சிகை அலங்கார கடையில் வைத்து பொலநறுவையில் கொல்லப்பட்டுள்ளார். இவை போன்ற சம்பவங்கள் எவ்வளவு கொடுமையானது. இதை எந்த ஊடகங்களாவது கண்டித்ததா? சிவராம் கொல்லப்பட்ட போது விடுதலைப்புலிகள் உள்ளிட்டு இந்த தமிழ் ஊடகங்களையெல்லாம் சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டார்கள். விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள் சார்பாக எந்த ஊடங்களாவது எவரிடமாவது முறையிட்டு நீதி கேட்டதா?

சுமார் பத்து வருடங்களுக்கு முதல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் பட்டியலில் முக்கியமாக கணிக்கப்பட்டவர் PLOT (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) இயக்கத்தைச் சேர்ந்த சிவராம். அப்பொழுதும் அவர் சிறந்ததொரு பத்திரிகையாளராகவே இருந்தார். அவரது சிறந்த அரசியற் கட்டுரைகள் சபாலிங்கத்தால் Eluding peace என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிடப் பட்டது. அப்போதெல்லாம் இன்று ஒப்பாரி வைக்கும் தமிழ் ஊடகங்கள் அவரை ஏன் கண்டு கொண்டதில்லை. சிவராமின் கொலையில் நாங்கள் மிகவும் வேதனைப்படுகிறோம். அவர் இறுதி வரை எங்களது மிக அன்பான நண்பராகவிருந்தவர். அவருக்காக நாம் படும் வேதனை நேர்மையானது; பலன் எதிர்பாராதது. அதேபோல் நாம் எல்லாக் கொலைகளின் போதும் வேதனை கொள்கிறோம். அன்மையில் (2005.05.05) திருகோணமலை நகர சபையின் முன்னாள் தலைவர் பி. சூரியமூர்த்தி கொல்லப்பட்டார். இக் கொலையை எந்த தமிழ் ஊடகங்களாவது கண்டித்ததா? குறைந்தபட்சம் அனுதாபமாவது தெரிவித்ததா? விடுதலைப்புலிகள் சார்பானவர்கள் கொல்லப் படும் போதெல்லாம்; அல்லது விடுதலைப்புலிகளால் கண்டனம் செய்யப்படும் கொலைகள் நடந்த போதெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சோக நாடகம் போட்டுக் காட்டி நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்த ஊடகங்கள் தங்களை நேர்மையான பத்திரிகையாளர்கள் என்று எப்படி வெட்கமின்றி நெஞ்சு தட்டுகிறார்கள்.

பத்திரிகையாளர்கள் என்றவுடன் எல்லோரும் நேர்மையானவர்கள், பக்க சார்பில்லாதவர்கள் என்னும் நினைப்பு இலங்கையிலும், புகலிடத்திலும் பொய்த்துப் போய் பல வருடங்களாகிவிட்டது. சிவராம் கொல்லப்பட்டபோது ஒப்பாரி வைத்த இந்த தமிழ் ஊடகங்கள் பாலநடராச அய்யர் கொல்லப் பட்டபோது எங்கே தலை செருகி படுத்துக்கிடந்தன’ இந்தவித போக்கைக் கொண்ட தமிழ் ஊடகங்கள் சந்தர்ப்பவாத புத்தியுடன் தம்மை விடுதலைப் புலிகளுக்கு விசுவாசமாக காட்டிக் கொள்ளுவதென்பது மிக மோசமான பச்சை வியாபார தந்திரோபாயம் என்பது அப்பட்டமான உண்மையே.

தேசத்தின் பெயரிலும், இனத்தின் பெயரிலும், மதத்தின் பெயரிலும் சாதியின் பெயரிலும் அப்பாவி மக்கள் மீது வெறியர்கள் மேற்கொள்ளும் கொலைகளையும், கொடூரங்களையும் நேர்மையுள்ள மனிதகுலம் மௌனத்துடன் பார்த்திராது.

- சி.புஸ்பராஜா

Pin It