போர்த்தியிருந்த பனிப்போர்வையைப் பெரிய சிவப்புத் தகடாய் கீழ்திசையிலிருந்து எழுந்து வந்த சூரியன் சுருட்டிக் கொண்டிருந்தான். போட்டியில் கலந்து கொண்டிருந்தவர்கள் தலா ஒவ்வொரு புறாவைக் கைகளில் வைத்துக் கொண்டிருந்தார்கள் வரிசையாக... அவர்களிச் சுற்றிக் கூட்டம் கூடியிருந்தது. அது ஒரு பெரிய மைதானம்... இன்னும் சில நிமிடங்களில் புறாக்களைப் பறக்கவிடப் போகிறார்கள்.

புறாக்கள் பறப்பதைப் பார்க்க நீலாவும் கூட்டத்தில் ஒருத்தியாய் நிற்கிறாள். நானும் புறாக்கள் பறப்பதைப் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். நாளை மாலைக்குள் கல்லூரிக்கு பணம் கட்டியாக வேண்டும். என் அப்பா இன்றைக்குக் கொடுத்து விடுவதாகச் சொல்லியிருக்கிறார். பிளஸ் டூ வில் திட்டமிட்டுப் படித்தபடி இப்போது பிஎஸ்ஸி ஜூவாலஜியில் தான் சேர இருக்கிறேன். பணம் கட்டியாக வேண்டும். விலங்கியல் பட்ட வகுப்பு மாணவனென்றால் அதற்கேற்றவாறு போக வேண்டாமா. இரண்டு செட் பேண்ட் சர்ட் எடுக்க வேண்டும் நல்லதாய் ஒரு ஜோடி ஷ வாங்க வேண்டும். அப்பா எப்படியும் பணம் தந்துவிடுவார். நினைத்துக் கொண்டே நடக்கிறேன்.

கொஞ்ச தூரம் நடந்த பின் நின்று மேலே பார்க்கிறேன். புறாக்கள் உயரே உயரே பறந்து போகின்றன என் உடலெங்கும் பரவசம் படர்கிறது. அப்பா எப்போது மில் வேலையிலிருந்து நின்றாரோ அப்போதிருந்தே புறாக்கள் வளர்க்க ஆரம்பித்து விட்டார்.

காலையில் கூண்டிலிருந்து வெளியே வந்து வாசலில் உட்காரும் புறாக்கள் ராகியையும் கம்பையும் கொத்தித் தின்னும் அழகை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டிருக்கலாம். கவலை எல்லாம் பறந்து போகும். க்ரூரூ... க்ரூரூ என்று அவைகள் எழுப்பும் குரல் கேட்க ரம்யமாய் இருக்கும்.

அப்பா கர்ணப்புறா, சாதாப்புறா என்றில்லை எல்லாப் புறாக்களையும் எங்கிருந்தோ கொண்டு வந்து விடுவார்.

புறாக்கள் மீது அவர் காட்டி வரும் அன்பு என்னையும் தொற்றிக் கொண்டது. கர்ணப்புறாவை வானில் பறக்க விட்டுக் குட்டிக்கரணம் அடிக்கிற அழகை ரஸிப்பார்.

வேர்க்கடலையை தோலுடன் முழுசாய்க் கொத்தி முழுங்கித் தொண்டைக்குள் வைத்தபடி மெதுமெதுவாய் ஜீரணிப்பதைப் பார்க்கிற போதுதான் அவைகளின் உடலமைப்பைப் பற்றிப் படிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுப் போனது. என் அப்பா தனக்குத் தெரிந்தவாறு புறாக்களின் வகை பற்றிச் சொன்னாலும் நான் தேடித் தேடிக் கிடைத்த நூலிலிருந்து படித்துத் தொ¢ந்து கொண்டேன்.

நீலகிரி காட்டுப்புறா, செம்பழுப்புப் புறா, செஞ்செதில் தவிட்டுப்புறா, சிறிய தவிட்டுப்புறா, புள்ளிப்புறா, செந்தவிட்டுப் புறா, பட்டைக் கழுத்துப் புறா, பஞ்சவர்ணப்புறா , ஆரஞ்சு மார்பு பச்சைப்புறா, சாம்பல் நெற்றிப்பச்சைப் புறா, மஞ்சள் கால் பச்சைப் புறா, பச்சை அரசப்புறா, மலை அரசப் புறா..

இத்தனை வகைப் புறாக்களையும் என் அப்பா எப்படிக் கொண்டு வந்தார் என ஆச்சாரியப்பட்டுப் போவேன்.

புறாவிற்குப் புறா... தன் குரலில் வேறுபாடு, அத்தனையும் கேட்கும் போது ஏற்படும் பரவசம். ஆண்புறா கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதை விடக் கொஞ்சம் சிறிதாக இருக்கும் பெண் புறாவைக் குக்கூ... குக்கூ... குக்கூ என்று அழைத்தவாறே வட்டமிட பெண்புறா குக்... குக்.. குக் என்று குரல்

கொடுத்துச் சம்மதம் தொ¢விப்பதை ஒரு கவிஞன் பார்த்தால் ஒரு பெரிய காதல் காவியமே எழுதி விடுவான்.

அவ்வப்போது புறாக்களை வாங்க வருபவர்களிடம் அப்பா... புறாக்கள் வளர்ந்த விதம் பற்றியும் வளர்க்கும் விதம் பற்றியும் சொல்வதைக் கேட்டால் ஆச்சர்யப்படுவார்கள். பெற்ற குழந்தையைப் பேணி வளர்ப்பது போலல்லவா சொல்கிறார்.

போட்ட இரையைத் தின்னாமல் இருந்தாலோ, தட்டில் ஊற்றிவைத்தத் தண்ணீரைக் குடிக்காமல் இருந்தாலோ என் அப்பா துடித்துப் போவார்.

புறாவைப் பிடித்து வயிற்றைத் தடவிப் பார்ப்பார், வாயைத் திறந்து பார்ப்பார் மருந்துக் கடைக்குப் போய் மருந்து வாங்கி வா என்று என்னைத் துரிதப்படுத்துவார். கொஞ்சம் லேட்டானுலும் போச்சு. கத்தித் தீர்த்துவிடுவார்.

மருந்தைப் புறாவுக்கு ஊட்டி விட்ட பிறகு திரும்ப அது குணமடைந்து பழைய நிலைக்கு வரும் வரை ஒரே டென்ஷனாக இருப்பார்.

பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் புறா மீது குஞ்சிலிருந்தே தனிக்கவனம் செலுத்திப் பார்ப்பவர். பொரித்த கடலை, பாசிப்பயிறு, பொட்டுக்கடலை, சுண்டக்கடலை, பாதாம் பருப்பு, பிஸ்தா என வகை வகையாகத் தீனிகளைப் படைப்பார். தாய்ப்புறா தன் குஞ்சுகளுக்குத் தன் வாயிலிருந்து அவைகளின் வாய்களுக்கு ஊட்டி விடும் காட்சியை ‘பாரடா’ என்று என்னைக் கூப்பிட்டுக் காண்பிப்பார்.

பந்தயம் நடக்கிற நாளில் அப்பா அதிகாலை 4.00 மணிக்கே எழுந்து விடுவார். கூண்டிலிருந்து பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் புறாவை வெளியில் எடுத்துத் தயார் பண்ணுவார். கொஞ்சமாய் ராகியைத் தின்னப் போடுவார். பந்தயத்தில் கலந்து கொள்ள என்ன நிபந்தனைகள் இருக்கிறதோ அத்தனையையும் இவர் கடைப் பிடிப்பதோடல்லாமல் மற்றவர்களையும் கடைபிடிக்க வைப்பார். காலை 6.50 மணிக்கு சீல் வைத்து 7.00 மணிக்குப் பறக்கவிட்டிருக்கிறார்கள்.

போட்டியில் பத்து ஜோடிப் புறாக்கள் வானில் பறந்து கொண்டிருக்கின்றன.

போட்டி ஆரம்பித்த பிறகு வேறு எந்தப் புறாக் கூண்டையும் திறக்கக் கூடாது... போட்டியில் பறக்கவிட்ட பத்து ஜோடி புறாக்கூண்டுக்காரர்கள் அவரவர் வீட்டுமுன்னாலிருந்து வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பந்தயக் குழுவினரால் நியமிக்கப்பட்ட பன்னிரண்டு பேர் புறாக் கூண்டுக்காரர்களோடு சேர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நான் பத்து போட்டியாளர் வீடுகளுக்கும் என் அப்பா சொல்லியிருந்த படி ரவுண்டு அடித்தபடியே இருந்தேன். சொல்லப்பட்ட விதிகளின் படியே எல்லாம் நடந்து கொண்டிருந்தது. பத்து ஜோடி புறாக்களும் வீடு வந்து சேரும் வரை வேறு எந்தக் கூண்டையும் திறக்கக் கூடாது. மாலை நேரம் காலையில் கூடிய கூட்டம் இப்போதும் ஆவலுடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. ‘மனுஷங்களுக்குள்ளெ தாபோட்டி பொறாமையிருக்குதுன்னா இதையே பறவைகளுக்கிடையேயும் வளர்த்தறாங்க... பறவைகளெ வெச்சு இவுங்க காசு பார்க்கறாங்க...

சேவக்கட்டுநெலத்துலே நடக்குது... புறா பந்தயம் வானத்துலே நடக்குது...

கிளிகளே வெச்சு சோசியம் பார்க்குறாங்க. ஐந்தறிவு, நாலறிவு படைச்ச பிராணிகளெ வதைக்றதுக்குத்தா மனுஷனுக்கு ஆறறிவெக்குடுத்துதோ கடவுளு....’

“சரியாச் சொன்ன... ஒரு விலங்கையோ பறவையையோ பார்த்தான்னா இதுகளே நமக்குத் தோதா எப்புடிப் பயன்படுத்தலாம்ன்னு திட்டம் போட்டுர்ற மனுஷெ“ திரண்டிருந்த கூட்டத்தில் இரண்டு பேர் பேசுவதைக் கேட்டவாறே அவ்வப்போது காலையில் பறக்க விடப்பட்ட புறாக்கள் திரும்ப வருகிறதா என்று இடது கையை கண்களுக்குப் பாதுகாப்பாய் வைத்தவாறே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜோடி புறாக்கள் உயரே பறப்பது தொ¢கிறது... கீழ் நோக்கிப் பறந்த வண்ணம் இருக்கின்றன. அடையாளம் இட்டபடி உட்காராமல் இடம் மாறி உட்கார்ந்தால் போச்சு... நிர்ணயத்த நேரத்திற்குள் வராமப் போனாலும் தோற்றதாகக் கருதப்படும்... ஆனால் எதுவும் தோற்கும் நிலையில் இல்லாமல் குறித்த நேரத்திற்குள் வந்து கொண்டிருக்கின்றன.

பறக்கவிடப்பட்ட புறாக்களுள் ஒரு ஜோடியைத் தவிர மீதி எல்லாம் வந்து உட்கார்ந்து விட்டனவே எங்கே அந்த ஜோடிப்புறா? வானத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கேயோயிருந்து பறந்து கொண்டிருந்த ராசாளிப்பருந்து திடீரென்று தாழ்வாகப் பறந்து வந்து கீழ் நோக்கிப் பறந்து கொண்டிருந்த ஜோடிப்புறாக்களில் ஒன்றைப் பாய்ந்து கவ்விக் கொண்டு இன்னொன்றையும் தன் பெருத்த உடம்பால் அடிக்கிறது. அடித்த அடியில் வாயில் கவ்விச் சிக்கியிருந்த புறா கீழே விழ... அடி வாங்கிய இன்னொரு புறாவும் இரக்கைகள் பலமிழந்து வேகமாகக் கீழ் நோக்கிப் பாய்ந்து விழுகிறது.

தரையில் வந்து விழுந்த புறாக்களை நோக்கிக் கூட்டம் விரைகிறது. கூட்டத்தோடு கூட்டமாய் நானும் ஓடி வருகிறேன். சிறகுகள் படபடவென்று அடித்துக் கொண்டிருக்கிறது எங்கிருந்து வந்தாளோ நீலா... ஒரு சொம்பு நிறைய தண்ணீர்... என்னிடம் கொடுக்கிறாள்.

புறாக்களின் வாயைத் திறந்து தண்ணீரைப் புகட்ட முயர்சிக்கிறேன்.

உள்ளே செல்லாமல் வழிகிறது. எல்லோரும் ச்ச் கொட்டிக் கொண்டே பரிதாபமாகப் பார்க்கிறார்கள்.

மரித்துவிட்ட புறாக்களுக்குச் சொந்தக் காரர்கள் ஓடி வந்து கதறி அழுகிறார்கள். கூட்டத்தினரிடையேயும் விசும்பல் கேட்கிறது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை. கால்கள் நடங்குகின்றன. வியர்வை உடலெங்கும் தெப்பமாக வழிகிறது.

மறுநாள் காலை...

“ சரவணா எழுந்திருடா... இன்னுமா தூங்கறே... காலேஜ்க்குப் போயி பணம் கட்ட வேண்டாமா. இன்னிக்குத்தா கடைசி தேதின்னு சொன்னெ நம்மொ ஜோடி புறாதான் ஜெயிச்சுது... எழுந்திரு...” அப்பா என்னை எழுப்புகிறார்.

தூங்கியிருந்தால் தானே விழிப்பதற்கு. விடிய விடிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புறாக்கள் தானே மனசை ரணப்படுத்தித் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தது. இவருக்குத் தெரியாதா... புறாக்கள் மீது இவ்வளவு பாசம் கொண்டிருந்த அப்பா கீழே வீழ்ந்து துடித்துச் செத்த புறாவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தான் ஜெயித்து விட்டோம்... பணம் கிடைத்துவிட்டது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறார்.

“என்னப்பா...” அதுதா தெரியுமே... என்றவாறே புரண்டு படுத்தவன் மறுபடியும் புரண்டு எழுந்தேன் கண்களைக் கசக்கியவாறே.

“அப்பா... அந்தொப் பணத்தொ அவுங்களுக்குக் குடுத்துருங்க. ஆமாப்பா செத்துப் போச்சுதே அந்தொப் புறாக்களுக்குச் சொந்தக்காரருக்குக் குடுத்துருங்க... நமக்கு வேண்டாம்... பிளாஸ்டிக் கம்பெனிலே வேலைக்கு

வரச் சொல்லீருக்காங்கொ. அதுக்குப் போறெ... அப்படியே போய் மாலை நேரக்காலேஜிலே சேர அப்ளிகேஷன் குடுத்துட்டு வந்தர்றெ...” என்று சொல்லியவாறே அப்பாவின் முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் மறுபடியும் படுத்துக் கண்களை மூடினேன்.

“நீங்கொ மாலை நேரக் கல்லூரியிலா சேரப் போறீங்க” என்றவாறே மனக்கண் முன்னால் வந்து நின்றாள் நீலா.

ஒரு மாதம் கழிந்திருந்தது- அதே மைதானம் காலை 7.00 மணி... கூட்டம் கூடியிருந்தது. “ஏண்டி நீலா... உன் ஆளு... காலேஜிலெ சேரலயாமெ...? என்னொ பண்ணறதா உத்தேசம்...”

“ஆமா அதையே கேட்கிறெ.... பி.எஸ்.ஸி ஜூவாலஜி கெடச்சத உட்டுட்டா... அப்பா குடுத்த பணத்தை வாங்கிப்போகாமெ... ஈவினிங் காலேஜிலையும் சேர்ந்த மாதிரி தெரியல. ஏதேதோ தர்ம நியாயம் பேசீட்டு...

பெரிய சிபிச் சக்கரவர்த்தினு நெனப்பு இவனையெல்லா நம்புனா...

அவ்வளவுதா... இவனப்போயி...”லாவும் அவள் சிநேகிதி பெரிய நாயகியும் பேசிக் கொண்டது தெளிவாகக் கேட்கிறது. பறக்கவிடப்பட்ட பத்து ஜோடிப் புறாக்களும் வானில் உயரே உயரே பறந்து போகின்றன. மேலே வானில் பறந்து போகிற புறாக்களை பார்க்கப் பிடிக்காமல் நடந்து கொண்டிருக்கிறேன்.

Pin It