ஒரு யானையின் கனவில் ஒரு யானை இருந்தது. நிலம் நோக்கிய அதன் தும்பிக்கை நரம்புகள் கருகும்போதெல்லாம் அதற்கு தன் கனவு ஞாபகம் வந்தது. தாகம் கொண்ட தும்பிக்கை உயர்த்தி நாலாபுறங்களிலும் தன் கனவினைத் தேடியது. நீர்நிலைகள் ஏதுமின்றி கட்டிடங்களாக மாறிவிட்ட அதன் கனவுக் காட்டினில் யானையின் பாடல் மிக அற்புதமாயிருந்தது. அதன் நடையில் மெல்லிய நடனம் தேக்கிவைத்தபடி கிளை முறித்து தின்றது. பசி தீர்ந்ததும் தும்பிக்கை வளைத்து மரத்துக்குத் தந்த முத்தத்தினைக் கனவில் கண்ட யானையின் கண்களில் நீர் வழியத் தொடங்கியது. அந்த மரத்தினைக் காணவில்லை. பதிந்திருந்த முத்தத்தை இரண்டு துண்டாக வெட்டி யாரோ விறகாக்கி எரித்திருந்தார்கள். எரிந்த முத்தம் உணர்ந்த யானைக்கு தாகம் அதிகமானது. மரம் தேடி, கிளை தேடி, நீர் தேடி, முத்தம் சுமந்தபடி அந்த யானை அக்காட்டைவிட்டு நீங்கியது.

யானை நீங்கிய காட்டில் ஒரு மண்புழு இருந்தது. அந்த மண்புழுவுக்கு ஒரு கனவு இருந்தது. கனவின் ஈரமண்ணில் தன் உடலை நெளித்து நெளித்து பயணம் செய்த அம்மண்புழு இப்போது தன் பெயரை நினைத்து அருவறுப்பு கொண்டது. என் மண் எங்கே என்ற கேள்வியின் பாரம் முதுகில் அழுத்த, நகர முடியாமல் தவித்தது. நீரற்று வெடிப்புற்ற நிலத்திலிருந்து வெளியேறத் துடித்தது. நெகிழ்ந்து கொடுத்து பாதை காட்ட மறுத்த இறுகிய மண் அந்த சின்னஞ்சிறிய உயிரை சிறை வைத்தது. ஏதோ ஒரு மண்வெட்டி விழுந்து மண்புழுவினை இரண்டாக வெட்டி இரு வேறு திசைகளைக் காட்டியது. கனவு நிலம் காணாமல் இரண்டு துண்டுகளுமே தேடலைத் துவங்கின. பாதி உடல் முறுக்கி ஊர்ந்தது. பயணப் பாதையில் அதன் உடல் உரசிய மர வேர்களைத் தழுவித் திரும்பியது. அதற்கு தன் காதல் ஞாபகம் வந்தது. கனவுக்குள் கனவாக கலவி புரிந்த கணத்தில் மண்புழு தன் நிலத்தைத் துறந்தது. தூக்கி எறியப்பட்ட ஈரம் தொலைந்த மணல் நிறைந்த லாரியில் நீண்ட தொலைவு பயணப்பட்டது பாதிப்புழு. மீதி உடலை இழுத்து மெல்ல நகர்ந்து தொட்ட மரவேர் உறிஞ்சிக் கொண்டிருந்த பிணச்சாறு கண்ட மண்புழு அதிர்ந்தது. மௌனமாய் கண்ணீர் கசிய வேரின் மீது உடல் சாய்த்து விம்மத் தொடங்கியது. மண்புழுவின் அழுகை அந்நிலத்தை விட்டு வெளியெங்கும் கேட்கவில்லை.

பிணச்சாறு உறிஞ்சி வாழும் வேர்கொண்ட மரத்தின் கனவில் ஒரு மரம் இருந்தது. இலைகளும் கிளைகளுமாய் பூச்சொரிந்து கொண்டிருந்தது. அகலமாயிருந்த அதன் நிழலில் ஏகப்பட்ட காதல்களும் முத்தங்களும் இறைந்து கிடந்தன. சதா கீச்கீச்சென்ற பறவைகளின் குரலில் மரம் வெயிலோடும் மழையோடும் தோழமைகொண்டு பேசியது. கிளையாட்டி விளையாடிய காற்றின் பாடலுக்கு தலை அசைத்தது. கனவு கலைந்த மரத்தில் எதுவுமேயில்லை. அங்கங்கே ஒட்டிக்கொண்டிருந்த இலைகள் உதிர விருப்பமின்றி மரத்திலேயே சருகாகிக்கொண்டிருந்தன. பச்சையம் நீங்கியிருந்த மரத்தின் உடலில் துளிக் கருணையுமில்லை. வெளுத்திருந்த மரக்கண்களில் ஏறி இறங்கிய சாரை ஒன்றின் பிசுபிசுப்பில் அது அழுதுகொண்டிருந்தது. வெற்றுக் கிளைகளை வானம் நோக்கி ஏந்தியிருந்தது மரம் ஒரு துளியினைத் தானம் கேட்டபடி. துளியின் கர்ப்பம் ஒரு மழையிடம் இருந்தது.

அம்மழையின் கனவில் ஒரு மழை இருந்தது. தூறலாகவும் சாரலாகவும், ஆக்ரோஷமாகவும் தன்னைக் கொண்டாடிக்கொண்டிருந்த மழை தன் கர்வத்தில் பூமி முழுவதும் நனைத்து சிரித்தது. மழையின் சந்தோஷம் மழையாகவே இருந்தது. குடை பிடித்தவர்களிடம் கோபித்துக்கொண்டது. நனைந்தவர்களை ஆசிர்வதித்தது. கூரைத் துளையினுள் தன்னை நுழைத்தது மழை. கூரையினில் இருந்தவர்கள் அம்மழையை சேமிக்கத் துவங்கினார்கள். மழை பெய்து கொண்டேயிருந்தது. நின்ற மழையின் கண்களில் காகிதக் கப்பல்கள் மிதந்தன. கனவு நீங்கிய மழை வானமெங்கும் தன் ஊமை மேகங்களை தேடியது. நிமிர்ந்து வானம் பார்த்த மனிதர்கள் மழையின் மீது தங்கள் சாபத்தினை எறிந்தார்கள். அனல் தாங்காமல் மழை எரியத் தொடங்கியது. நிலம் வெறுத்து வேர்த்தது மழை. இடியின் தாளம், மின்னலின் கண்சிமிட்டல் எல்லாம் மழையின் கனவில் புகைப்படங்களாக வந்து போயின. வானம் விட்டு இடம் பெயர யோசித்து மழை அதிர்ந்தது. வானமோ தன் வலிக்கான வார்த்தைகள் தேடி மௌனமாயிருக்க நிசப்த வானத்தின் கனவில் ஒரு வானம் இருந்தது.

அத்தனை சுத்தமான நீலம் மட்டும் பரவிய மிக நீளமான அகலமான ரகசியமான வானம். எந்தவிதக் குறுக்கீடுமில்லாமல் தன் கடிகாரத்தில் சூரியனையும் நிலாவையும் நகர்த்தி வைத்து ரசித்துக்கொண்டிருந்தது. இரவில் நட்சத்திரங்களுடன் சதுரங்கம் ஆடியது. மூன்று நட்சத்திரங்களை நேர்கோட்டில் வைத்தது. மனிதர்கள் நேர்கோட்டு விண்மீன்களை வைத்து எழுதத் தொடங்கிய கவிதைகளை நினைத்து மகிழ்ந்தது. விளையாட்டில் வெட்டுப்பட்ட நட்சத்திரத்தினை சலிப்புற்று உதறியது வானம். கோபமாய் வானம் விட்டு சரிந்த நட்சத்திரமும் மனிதர்களின் கண்களில் கவிதையாகவும் கதையாகவும் ஆனது. பகலில் சற்றே கண் அசந்த வானம் திடுக்கிட்டு விழித்த கணத்தில் அதன் ஆக்ஸிஜன் காணாமல் போயிருந்தது. தன் உடம்பில் விழுந்த மிகப் பெரிய துளையைக் கண்டு பதறியது. கர்ப்ப மேகங்களைத் தேக்கி நின்ற வானத்தின் கர்வத்தில் இப்போது புகை படிந்திருந்தது. சிக்னல்களில் உறுமிப் பரவிய கரும் புகை வானத்தின் வாசலை அடைக்கத் துவங்கியது. நொடிக்கொரு தரம் நிறம் மாறத் துவங்கிய வானத்தின் சந்தோஷக் கோள்களில் மனிதன் கால் பதித்தான். நீர் தேடினான். பின் குப்பை கொட்டத் தொடங்கினான். வானம் அழுக்கானது. எப்போதும் கடலில் தன் முகம் பார்த்துப் புன்னகைக்கும் ஆகாயம் கடலினை வெறுக்கத் தொடங்கியது. கடலும் வானமும் இணையும் இடத்தில் வானத்தின் விரிசல் அதிகமாக கடல் கொந்தளித்தது. வானத்தின் நுனிவிரல் பிடித்து தளும்பிக் கொண்டிருந்த கடலின் கனவில் ஒரு கடல் இருந்தது.

மீன்கள் துள்ளி விளையாடின அக்கனவில். சர் சர்ரென படகுகள் விரைந்தன, கடலின் உடலில் கதைகள் எழுதியபடி. அலைகளையும் கடலையும் குறித்து எழுதிய பழந்தமிழ்ப் புராணங்களை யாரோ கரையில் நின்று வாசிக்க பெருமிதத்தில் விம்மிய கடல் தமிழின் பாதம் நனைத்து திரும்பியது. அடர்த்தியான வெயிலை உள்வாங்கி சேமித்து புணர்ந்து தன் உப்பு நீங்கிய களைப்பில் தன்னை விடுவித்த கடலின் பெருமூச்சு வானம் சென்று சிறு சிறு மேகங்களாக கர்ப்பம் காக்கத் தொடங்கியது. தன் நடு உடலில் சலனமற்று இருந்த கடலின் நிம்மதியான உறக்கத்தில் குண்டு விழுந்தது. கடல் தன் நிறம் மாற்றியது. அதன் உடலை தோட்டாக்கள் துளைத்திருந்தன. பிணங்கள் வீழ்ந்தன. உறக்கமின்றிப் போன கடல் கரை நோக்கி உந்தித்தள்ளியது உடல்களை. மலையிலிருந்து பெருகி கூழாங்கல்லில் பாடல் இசைத்துக்கொண்டு தன்னுடன் வந்து இணைந்த நதிகளெல்லாம் இப்போது பிளாஸ்டிக் குப்பைகளையும் மனிதக் கழிவுகளெல்லாம் கொண்டு வந்து சேர்த்தன. கடல் அழுகிப் போனது. அழத் தொடங்கியது. ஒருபுறம் தோட்டாக்கள் சிதறிய உடல்கள், மறுபுறம் தன்னிடம் கலக்கும் அழுக்கு எனக் கடல் கோபம் கொண்டது. ஆழ்கடலில் அதன் கோபம் திமிறியது. வெடித்துக் கதறியது ஒரு நாள். தான் இன்ன செய்கிறோம் என அறியாத கடல் நகரம் விழுங்கியது. அதன் கண்ணில் கோபம் மட்டுமே இருந்தது. ஒரு பிணம் கண்டு பதறிய கடல்தான் அன்று பிணம் தின்று வாழ்ந்தது. கரையெங்கும் பிணந்தின்னிக் கழுகுகளை அனுமதித்தது. ஆனாலும் அந்தக் கடலின் காதலில் ஓர் அழகிய பறவை இருந்தது.

அந்தப் பறவையின் கனவில் ஒரு பறவை இருந்தது. அது மிகத் தூய்மையான வானத்தில் வட்டமிட்டு சிறகுகள் அசைக்காமல் கடலுக்கும் வானத்துக்கும் நடுவில் மிதந்தபடி தன் சாம்பல் நிற நிழலை கண்ணாடிக் கடலில் கண்டு களித்தது. கடலிடம் மட்டும் தன் கனவைச் சொன்ன அந்தப் பறவை சன்னதக் கடல் நீங்கி நகர் நுழைந்து சிறகுகள் ஒடுக்கி பறந்து அலைபேசி உயரங்களை லாவகமாகக் கடந்து மிகப்பெரிய அப்பார்மெண்ட் கட்டிடங்கள் தாண்டி சிறகுகள் வலி நீங்க அந்த அறை ஜன்னலில் அமர்ந்தது. ஜன்னல் தாண்டி அந்த ஒற்றை அறையில் இருந்த படுக்கையில் ஒரு மனிதன் படுத்திருந்தான்.

அவனிடம் ஒரு கனவு இருந்தது. கடைசிவரை அவன் விழிக்கவே இல்லை.

***

Pin It