வீட்டில் அந்தப் பொருட்களை அவைகளுக்குரிய இடத்தில் போட்டு விட்டு , பெருக்கி சுத்தம் செய்து , தேவையான சமையல் சாமான் வாங்கி சமைத்து , குடி தண்ணீர் பிடித்து , எனப் பம்பரமாகச் சுழன்றதில் உடல் அசதியில் தள்ளாடியது கவிதாவுக்கு. பின்னே வீடு மாறுவது என்பது சுலபமான வேலையா என்ன? அதுவும் சென்னை போன்ற பெரு நரகத்தில் சாரி! தப்புத் தப்பு பெரு நகரத்தில்?அம்மா ஞாபகம் வர கொஞ்சம் அழுகை வந்தது? ஃபோன் செய்து பேசினால் என்ன? என்ற ஆவலை அடக்க முடியாமல் சுழற்றினாள் ஃபோனை. அம்மா எடுத்தாள்.

"என்ன? எல்லாம் செட் பண்ணிட்டியா? அக்கம் பக்கத்தவங்களை சினேகம் பிடிச்சிக்கோ! உனக்கு எதுவும்னா அவங்க தான் உடனே உதவிக்கு வருவாங்க! நான் எங்கியோ 600 கிலோ மீட்டர் தள்ளி இருக்கேன். "என்ற அம்மாவிடம் பொதுவாகப் பேசி விட்டு வைத்தாள்.மனம் அம்மாவின் சொற்களை அசை போட்டது."அக்கம் பக்கத்தவங்க! ஹ¨ம்! அம்மாவுக்கென்ன அங்க ஆழ்வார்குறிச்சியில உக்காந்துக்கிட்டு ஈசியா சொல்லிட்டாங்க! இங்க வந்தால்ல தெரியும்?" என்று நினைத்தவளுக்கு முதல் முறையாக சென்னையில் வீடு மாறியது நினைவு வந்தது.

இது நடந்து சுமார் 8 வருடங்கள் இருக்கலாம். கல்யாணமாகி 2 வருடங்கள். சற்றே பெரிய வீட்டுக்குக் குடி போகலாம் என்று ஒரு சிறிய அப்பார்ட்மெண்டில் வீடு பார்த்தான் கவிதாவின் கணவன். அங்கு போய் இறங்கியதும் எதிர் வீட்டுக் கதவைத் தட்டினாள் கவிதா. திறக்கவே ஐந்து நிமிடம் ஆனது. அப்படியும் ஒரு செண்டி மீட்டர் திறந்து "எங்களுக்கு எந்தப் பொருளும் வேணாம். போங்க போங்க" என்றாள் அந்தப் பெண்மணி."இல்லைங்க! எதுவும் விக்கறதுக்கு வரல்ல! நாங்க எதிர் வீட்டுக்குக் குடி வந்திருக்கோம்! இந்த தூக்குல கொஞ்சம் குடிக்கத் தண்ணி தந்தீங்கன்னா.." என்று இவள் முடிப்பதற்குள் "பக்கத்துக் கடையில தண்ணி பாட்டில் கிடைக்கும் வாங்கிக்கங்க" என்று சொல்லி கதவைப் படீரென சாத்தினாள். "என்ன இந்தம்மா இப்படிப் பேசுறாங்க? நான் என்ன பிச்சையா கேட்டேன்? குடிக்கத் தண்ணி தானே கேட்டேன்?" என்று கணவனிடம் அங்கலாய்த்த போது "இங்கெல்லாம் இப்படித்தான்! நீ யாரோடவும் அனவாசியமாப் பேசாதே! தண்ணி நான் வாங்கிட்டு வரேன்" என்றவன் கீழே இறங்கினான்.

வீடு மாற்றிப் பழக்கம் இல்லாததால் திகைத்துப் போனாள். எப்படியோ ஒப்பேற்றி வீட்டை ஒழுங்கு செய்து நிமிர்ந்த போது மணி 2. இனி எப்போது சமைத்து எப்போது சாப்பிட? இதுவே ஆழ்வார்குறிச்சியானால் வீடு மாறிப் போகும் பகுதியிலிருக்கும் தெரிந்தவர்கள், உறவினர்கள் என இட்லி, தோசை என்று கொடுத்து விடுவார்கள். இங்கேயா? தண்ணிக்கே வழியில்ல! இதுல சாப்பாடு வேற" என்று நினைத்துக் கொண்டாள்.அன்று மதியம் ஓட்டலில் சாப்பிட்டார்கள்.

ரேஷன் அட்டை வாங்குவது , கேஸ் சிலிண்டர் ஏஜென்சி மாற்றுவது என்று ஏகப்பட்ட வேலைகள் இருந்தன கவிதாவுக்கு. ரேஷன் ஆபீஸ் எங்கே? பாரத் கேஸ் ஏஜென்சி எங்கே? என்று அக்கம் பக்கத்தவரிடம் கேட்கலாம். எதிர்த்த வீடு தான் சரியில்லை. மாடியில் எப்போதும் பூட்டியே இருக்கும் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் கேட்கலாம் என்று முடிவு செய்து அங்கே போய்க் கதவைத் தட்டினாள்.கதவே திறக்காமல் உள்ளிருந்து "என்ன? யாரு வேணும்?" என்ற அதிகாரக் குரல் வந்தது. திகைத்துப் போனாள்."ஒண்ணுமில்ல நான் செக்கண்ட் ஃபுளோருக்குப் புதுசா குடி வந்துருக்கேன் ! இங்க ரேஷன் கடை எங்க இருக்குன்னு...?" "தெரியாது ! " "பாரத் கேஸ் ஏஜென்ஸி?""தெரியாது!" அவள் சொன்ன தொனி கிட்டத்தட்ட "சூ சூ! போ போ!" என்ற அளவில் இருந்தது.

இதற்கு மேல் கேட்டால் மரியாதை இல்லை என்று இறங்கி வந்து விட்டாள். அழுகை அழுகையாய் வந்தது. யாருமில்லாத பாலை வனத்தில் வந்து மாட்டிக் கொண்டோமே என்று கழிவிரக்கம் தோன்றியது. ரூமில் கதவைத் சாத்திக் கொண்டு அழுது தீர்த்தாள்.

காய்கறிக்கடை , மளிகைக்கடை என்று எங்கெங்கோ விசாரித்து ஏஜென்சியையும் , ரேஷன் ஆபீசையும் கண்டு பிடிக்க ஒரு வாரம் ஆனது. மொத்தம் 10 குடும்பங்கள் அந்த அப்பார்ட்மெண்டில் இருந்தன இவர்களையும் சேர்த்து. யாரையும் யாருக்கும் அறிமுகம் இல்லை. அவரவர் கூண்டுகளில் அவரவர் பாடு. அவசரத்துக்குக் கூட யாரும் யார் வீட்டுக் கதவையும் தட்டுவதே இல்லை. முகமற்ற தனிமை தான். இப்போது இந்த வாழ்க்கை முறை பழகி விட்டது. ஆனால் தன்னால் இயன்ற அளவு அக்கப் பக்கத்தவருக்கு உதவி செய்து வந்தாள்.

பழைய கதையிலிருந்து நனவுலகத்திற்கு வந்து வேலையில் மூழ்கினாள்.

புதிய வீடு வந்து மாதங்கள் இரண்டு ஓடி விட்டன. அந்தப் பகுதியும் நன்றாகப் பழகி விட்டது. மற்ற குடித்தனக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்று ஓரளவு தெரியும். அதாவது எங்காவது வெளியில் பார்த்தால் இவர்கள் முதல் மாடியில் இருக்கிறார்கள் என்று ஓரளவு உறுதியாகக் கூற முடியும் அவளால். இதுவே பெரிய விஷயம் தான். மற்றவர்களுக்கு அது கூடத் தெரியாது.இந்த நிலையில் தான் கவிதா வீட்டுக்கு எதிர்வீட்டில் காலி செய்து கொண்டு போனார்கள். இரவோடு இரவாகக் கிளம்பியிருப்பார்கல் போலும். யாரிடமும் எந்த விவரமும் சொல்லவில்லை. கொஞ்ச நாள் கழித்து அந்த வீட்டுக்கு மற்றொரு இளம் தம்பதி குடி வந்தனர்.

பாவம் சிறு பெண் . தனியாகத் திண்டாடுகிறாள் அவர்களுக்கு வலியச் சென்று உதவி அக்கம் பக்கத்தவர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று காட்ட வேண்டும் என்ற வெறி எழுந்தது கவிதாவினுள்.

இஞ்சி , ஏலக்காய் எல்லாம் தட்டிப் போட்டு மணக்க மணக்க டீ தயாரித்து அதை ஒரு ஃபிளாஸ்கில் ஊற்றி கூடவே இரண்டு தம்ளர்களையும் எடுத்துக் கொண்டு எதிர்வீட்டுக்குப் போனாள். அந்தப் பெண் கவிதாவை கேள்விக்குறியோடு பார்த்தது.

"ஹலோ! வணக்கம்! நான் எதிர் வீட்டுல தான் இருக்கேன்! இப்பத்தான் குடி வரீங்களா?""ஆமா! " "இப்பத்தான் கல்யாணமாச்சா?" "ஆமா" "சரி சரி! ரெண்டு பேரும் களைப்பா இருப்பீங்க சூடா இந்த டீயைக் குடிங்க! பொருட்களை எடுத்து வைக்க நானும் உதவுறேன்" என்றாள் நெஞ்சை நிமிர்த்தியபடி. தன்னை நினைத்து மிகப் பெருமையாக இருந்தது கவிதாவுக்கு. "என்னைப் போல இங்கு யார் இருக்கிறார்கள்? என் உதவியை இவர்கள் மறக்கவே மாட்டார்கள்" என மனம் பெருமையில் பூரித்தது.

ஒரு கண அமைதிக்குப் பிறகு அந்தப் பெண் "முன்னப் பின்ன தெரியாதவங்க கிட்ட நாங்க எதையும் வாங்கிச் சாப்பிடுற பழக்கம் இல்லை! " என்று சொல்லி முகத்துக்கு நேரே கதவை அறைந்து சாத்திக் கொண்டது. டீ பாத்திரம் கையைச் சுட பேந்தப் பேந்த விழித்தபடி திகைத்து நின்றிருந்தாள் கவிதா.

**

Pin It