கொங்கு பகுதி மக்களின் கிராம வாழ்வை நுணுக்கமாகத் தன் சிறுகதைகளில் சித்தரித்த குமாரகேசன் வியத்தக்க விதத்தில் ஏறக்குறைய தீரன் சின்னமலைக்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சவாலாக எடுத்துக் கொண்டு இந்த சரித்திரக் கதையைப் படைத்திருக்கிறார். நுணுக்கமான வாசிப்பைக் கோரும் நுணுக்கமான விவரிப்புகள் கொண்ட நாவல். கொங்கு பேச்சு மொழியிலேயே எழுதப்பட்டது என்பதை பலமாகவும், பலவீனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். சொல்லும் விதத்தில் நூற்றுக்கணக்கான தொன்மங்கள் விரவிக் கிடக்கின்றன. கம்மங்கதிரை ஊதிஊதி தின்று கொண்டே நடந்து போகிற சுகானுபமாய் வாய்த்தது.

கரட்டுப்பாளையம் ஜக்கம்மாவின் சாவு மீதான சாபம் அந்த ஊரை பீடித்திருக்கிறது. கன்னிமார் ஒடைக்கரையில் அவள் செத்துப் போனாள். கணவனின் கொலைவெறித்தாக்குதலில் இறந்து போனவளை கல்லைக்கட்டி கிணற்றில் போட்டு செத்துப்போனதாய் காட்டுகிறார்கள். அவள் சாவில் சந்தேகம் கொண்ட அவளின் அப்பா போடும் சாபம் அந்த ஊரை அலைக்கழிக்கிறது. அந்த சாபத்தின் விளைவுகள் பின் தலைமுறைகளுக்கும் தொடர்கிறது. வண்டிக்காரன் மகளான சின்னத்தாயின் வாழ்க்கையும் இது போல் புதைக்குழிக்குள் போய்விடுகிறது. சின்னத்தாயியின் மாமன் மாயபாண்டி அவளைக்கடத்திக் கொண்டு போய் திருமணம் செய்யத் திட்டமிடுகிறான். வீடு தீக்கிரையாகிறது. பெரியகுடுமபத்து மனச்சிதைவு ஆறுமுகத்திற்குத் திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. மாயபாண்டியால் அதுவும் தடைபடுகிறது. அவன் அப்பா ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நடக்க வேண்டும் என்று மூன்றாம் தாரமாய் கட்டிக் கொள்கிறார். குலதெய்வம் கோவிலுக்கு ஆற்றில் இறங்கிப்போகிறவர் செத்துப் போகிறார். கன்னிகழியாமலே அவள் விதவையாகிறாள். வண்டியோட்டியும், அரப்பு உருவப்போயும் சித்தப்பா அரவணைப்பிலும் வாழ்கிறாள். கட்டின ஊர் குளம் பலி இல்லாமல் வீணாகிப் போகிறதைத் தடுக்க ஏதோவகையில் பலியாகிறாள். ஜக்கம்மா, சின்னதாயிற்குமிடையிலான பல ஆண்டுகால கொங்கு மக்களின் வாழ்க்கை குதிரையின் வேகத்தோடு ஓடுகிறது.

கொங்கு நாட்டு பகுதியின் ஒரு பகுதிகால சரித்திரத்தை நாவல் குமரகேசன் அவர் கேள்விப்பட்ட வாய் மொழிக்கதைகள் வாயிலாக இதில் முன் வைத்துள்ளார். கொங்கு நாட்டுச் சரித்திரம் பழம்பொருள் அகழ்வாராய்ச்சி மூலம் அவ்வளவாய் பெறப்பட்டதில்லை என்ற குறை இருக்கிறது. கிடைத்துள்ள வரையில் ஏறத்தாள

கி.பி. முதல் நூற்றாண்டில் தொடங்கி கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் முடிகிறது என்கிறார்கள். கி.பி 250 வரை கொங்கு நாட்டின் பழைய சரித்திரம் சங்க இலக்கிய நூல்கள் மூலம் அதிகம் பெறப்பட்டிருக்கிறது. நாவல் குமார கேசன் தான் எடுத்துக் கொண்ட காலப்பகுதி கொங்கு மக்களின் பயிர்த்தொழில், கைத்தொழில், வணிகம், தொன்மக்கதைகள் என்று விரவி இந்நாவலை நிறைத்திருக்கிறார். மண்ணோடும் மனிதர்களோடும் வெகு நேசிப்பு கொண்ட மனிதரால் மட்டுமே இவ்வளவு நுணுக்கமாக சதையும் நகமுமாய கொங்கு மனிதர்களை அந்தக்காலத்துப் பின்னணியுடன் படைக்க முடியும். சமகால கொங்கு மனிதர்களைச் சிறுகதைகளில் அடையாளம் காட்டியவர் அதே உள்ளுணர்வுடன் சரித்திர கால மனிதர்களையும் நடமாடவிட்டுப் பதிவு செய்திருப்பது இந்நாவலில் வரும் தலைமுறைகளுக்கான குளம் வெட்டுவதற்கு ஒப்பாகும். (ரூ.250/ ராஜராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை. 9846889258 )

என் மகஜெ - சிற்பியின் சூழலியல் மொழிபெயர்ப்பு நாவல்

மனசாட்சியை அதிர வைக்கும் படைப்பு என்கிறது அறிமுகக்குறிப்பு. கடவுளின் சொந்த தேசம் என்று சிறப்பிக்கப்படும் கேரளாவின் வடபகுதியின் என் மகஜெ என்ற ஊராட்சிப் பகுதி எண்டோசல்பான் என்ற பூச்சிக் கொல்லியால் எப்படி சின்னாபின்னாமாகச் சிதைகிறது என்பது நாவலின் கரு. “எத்தனையோ நூற்றாண்டுகளாய் நிகழ்ந்து கொண்டிருந்த குடியேற்றங்களையும், படையெடுப்புகளையும் ‘என்மகஜெ’ மனிதர்களும் உயிர்களும் இயற்கையும் எப்படியோ கடந்து வாழ்ந்தார்கள். ஆனால் இப்போது... மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது மக்கள் தேர்ந்தெடுத்த மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எல்லாம் அவர்களுடைய முகத்தில் காளிய சர்ப்பம் போல் விசத்தைத் துப்புகின்றன. பாதுகாக்க வேண்டியவர்கள் யாரோ தருகிற முப்பது வெள்ளிக் காசுக்காக பாவப்பட்ட மக்களின் எமன்களாகின்றனர்...” என்கிறார் மூல ஆசிரியர் அம்பிகாசுதன். உண்மைத் தகவல்களுக்கு அழுத்தம் தரும்போது அதில் கட்டுரைத்தனம் வந்துவிட வாய்ப்புண்டு. வாசக ஈர்ப்பிற்கான உத்தியையும் கையாள வேண்டும். அம்பிகாசுதன் இந்த இரு சவால்களையும் தன் உத்தியால் லாவகமாக்கி யிருக்கிறார்.

சுற்றுப்புறவியல் புதினம் என்றால் ஒட்டு மொத்த சமூகத்தின் பாதிப்பையும் பருந்துப் பார்வையுடன் பல்வேறுபட்ட பாத்திரங்களின் தனித்தனி அலகுகளின் சேர்க்கையாகவே அமைவதுண்டு. சுப்ரபாரதிமணியன் ‘சாயத்திரை’ நாவலில் இடைவெளி வழி உத்தியை கையாண்டிருப்பதாக பிரேமாநந்தகுமார் குறிப்பிட்டிருக்கிறார். அம்பிகாசுதன் தொன்மவியல் கையாளல் உத்தியைப் பயன்படுத்தி இந்தச் சவாலை அழகாகத் தாண்டிச் செல்கிறார். தொன்மவியல் உத்தியால்தான் குறுமுனிகள் செடியில் தலைகீழாகத் தொங்குவதைக் காட்டுகிறார். கண்ணாடியைப் பேச வைக்கிறார். குகையோ நாயகனுடன் பேசி வழி நடத்துடுகிறது. வாசக ஈர்ப்பும் எளிதில் வசப்பட்டுள்ளது. சிற்பிக்குத் தமிழும் மலையாளமும் தெரிந்ததால் மட்டுமே இது சாத்தியப்படவில்லை. திராவிட மொழியில் சிந்தித்ததால் மட்டுமே இம்மொழிபெயர்ப்பு இவ்வளவு சிறப்புடன் வந்துள்ளது என்கிறார் மலையாளக் கவிஞர் விஜயகுமார் குனிச்சேரி. சுற்றுச்சூழல் படிப்புகளுக்கான சூழல் தமிழகத்திலும் உண்டு. இன்னும் நூறு நூறு சூழலிய நாவல்களுக்கும் போதுமான நாயகனாய் வாழ்வாங்கு வாழ்ந்த வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆற்றிய சூழலியல் சமர்கள், கூடங்குளம் சார்ந்த சூழலியல் அம்சங்கள் என நம்மிடையேயும் புதினக்கருக்கள் இருக்கின்றன. இவை எழுத்தாக்கம் பெற சிற்பியின் இம்மொழிபெயர்ப்பு தூண்டும் என்ற நம்பிக்கையை இந்நாவல் ஏற்படுத்துகிறது. - ஜே.மஞ்சுளாதேவி (ரூ. 200, கவிதா பதிப்பகம், சென்னை)

அம்பாரம் : க.லெனின் கட்டுரைகள்

முகநூலில் பதிந்த சந்தித்த மனிதர்கள், காட்சிகள், அனுபவங்களைத் தொகுப்பாக்கியிருக்கிறார். பால்ய நினைவுகள் அழுத்தமானவை. வாழ்வின் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் நிறைய ஆக்கிரமித்திருக்கின்றன. (ரூ. 50, எழில் மீடியா, திருப்பூர். 98422 60297)

அம்மாவன் -அனந்தை காசிநாதன் சிறுகதைத் தொகுப்பு.

உருண்டோடும் எண்ணங்கள் -க. வானமாமலை கவிதைத் தொகுப்பு.

இரண்டும் வெளியீடு: திருவனந்தபுரம் தமிழ் எழுத்தாளர் சங்கம், 0471-2470086

எம். கமலசேகரின் மூன்று கவிதைத் தொகுப்புகள் தேவதாஸ், குருவிவனம்,

இடி மின்னல் மழை (ஊஞ்சல் வெளியீடு, சென்னை 9444014789 )

உமா மோகனின் இரண்டு நூல்கள் டார்வின் படிக்காத குருவி - கவிதைகள் (முரண் களரி வெளியீடு) வெயில் புராணம் - கட்டுரைகள் (அகநாழிகை வெளியீடு) 999454 1010

சிறுவாணி : சிந்தனைத்துளிகள்- இரா.சொ.இராமசாமி (ரூ.60, கோவை முத்தமிழ் அரங்கம், 9994954547 )

மிளிர்கல் : இரா முருகவேள் நாவல்

ஆவணப்படத் தயாரிப்பிற்கான பணி அனுபவங்களை இனவரவியல், நிலவரவியல் அம்சங்களோடு “டாக்கு நாவல்” என்ற முத்திரை கொள்ளும்படி இந்த நாவலை முருகவேள் கட்டமைத்திருக்கிறார். இனத்தைப் பற்றிப் பேசும் போது நிலவரவியல் அம்சங்களும். அரசியலும் இயைந்து போவது சாதாரணம்தான். தான் சார்ந்து இயங்கும் ஆய்வு துறையின் அனுபவங்கள் கொண்ட முறைப்படுத்தலில் உரையாடல்கள், அலசலகள், எதிர்விவாதங்கள் என்று இதில் முறைப்படுத்தப்பட்டிருக்கின்றன (ரூ. 250. 270 பக்கங்கள், பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 94866 41586)

தங்கர்பச்சான் கதைகள்

தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள் பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சணமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது (ரூ 250, உயிர்மை, சென்னை)

நெடுஞ்சாலை விளக்குகள் : ப.க.பொன்னுசாமி நாவல்

அறிவியல் விஞ்ஞானிகள் தங்கள் அனுபவங்களைப் பதிவு செய்வது வெகு குறைவே. அதிலும் இலக்கிய அக்கறை கொண்டவர்களே அதை சில சமயங்களில் செய்கிறார்கள். இயற்பியல் விஞ்ஞானியான ப.க. பொன்னுசாமி “நெடுஞ்சாலை விளக்குகள்” என்ற நாவலின் களம் தமிழுக்குப் புதிதே. விஞ்ஞானிகளின் ஆய்வுக் கூடமே அவரது இந்நாவல் உலகம். எல்லாத் துறையைச் சார்ந்தவர்களைப் போல இவர்களின் வாழக்கையும் பொறாமையும், துர்குணங்களும், பெருமிதங்களும், உழைப்பும் கொண்டதாக இருக்கிறது. (ரூ.250, என்சிபிஎச், சென்னை)

காற்றை அழைத்துச் செல்லும் இலைகள் : (கட்டுரைகள்) க.அம்சப்ரியா

தனிநபர் இலக்கிய அரசியலுக்கு ஆட்படாமல் எந்தக் கோட்பாட்டின் மீதும் நின்று குரல் எழுப்பாமல், தனது ரசனை சார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடாய் புதுக்குரலில் பேசி, இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதனை நினைவுபடுத்துகிறார் அம்சப்ரியா. தனது வாசிப்புப் பயணப் பாதையில் சக படைப்பாளிகளின் கவிதைகளை ஆங்காங்கே மைல்கற்களைப் போல் நட்டு குறிப்பெழுதிச் செல்கிறார். (ரூ. 80, அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.)

ரோஜர் : ஜனனன்பிரபு - கவிதை - நொண்டி நடந்தபடியே வாழ்க்கைக்குள்ளூம், கவிதைக்குள்ளும் இவர் நடக்க நெடும் பாதை இருக்கிறது. காவலரின் அனுபவங்கள். ஈர மனசும், வாழ்க்கை அனுபவங்களும் கொஞ்சம் கவிதைகளாய். (ரூ. 50, இடையன் இடைச்சி பதிப்பகம், திருப்பூர் 99420 50065)

மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன் - செந்தில் பாலா கவிதைகள்

ஒற்றைக் கோட்டில் உருவெடுக்கும் பாலாவின் ஒவியங்கள் அலாதியானவை. பிரமிப்பை ஊட்டுபவை. அவற்றுக்கு இணையான பாதையில் பல்வேறு தரிசனங்களோடு இருட்டும் வெளிச்சமுமாய் பிரவகிப்பவை அவரது கவிதைகள் (ரூ. 65, நறுமுகை, செஞ்சி, 9486150013)

தம்பான் தோது : இளஞ்சேரல் கதைகள்

ஆற்றில் இறங்கிக் கால் நனைத்து நீரள்ளித் தன் தலைமேல் பூத்தெளித்துக் கொண்ட மனங்களுக்கு இந்த கிராமத்தார்கள் உள்ளுணர்வோடு இணங்கிப் போவார்கள். இளஞ்சூட்டு ரத்தமெல்லாம் தூயக் கலையாகப் பாவிப் புழங்கும். நொய்யலாற்றங்கரையின் ஆன்மா இன்னும் நெஞ்சுரத்துடன் வீச்சமாக நுகரும் நாசியையே உசிராக்கிப் படிந்து கொண்டிருக்கிறது. வெம்மையை, வெகுளித்தனமான ஆங்காரத்தில் நடுங்கும் உண்மையின் அறத்தை, பொய்மையை, இழப்பை, வீரத்தை, விருந்தோம்பலை அனைத்தையும் செவ்வியலின் கலையாக்கித் தருகிற மனங்களின் நீச்சலும் ஊர்வலமுமாக தீவிரத்தொனியில் அமைந்த இளஞ்சேரலின் இரண்டாம் சிறுகதைத் தொகுதி (ரூ.130, அகத்துறவு, கோவை. 99427 88486)

மறுபடியும் : (சிறுகதைகள்) கனகராஜன்

சிக்கலான தருணத்தில் மிக எளிமையாய் ஒரு சினேகிதனைப் போல் நம் தோள்களைத் தட்டி, அவைகளுக்கு ஆறுதல் தருகிறது. எப்படியெல்லாம் வாழ்க்கை இருக்கிறது என நம் நினைவுகளை மீட்டெடுக்கிறது கனகராஜனின் எழுத்துக்கள். (விலை ரூ.70, எதிர் வெளியீடு, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி. 9865005084)

Pin It