கீற்றில் தேட...

யாராவது பெயரைத் தொலைத்துவிட்டுத் தேடுவார்களா? எவரிடமும் சொன்னால் சிரிப்பார்கள் என்ன பெயரைத் தொலைத்து விட்டாயா? கேட்பதற்கே பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதே. யாரிடமும் சொல்லிகிட்டுத் திரியாதேஎன்று வம்பளப்பார்கள். வீடு வீடாக எல்லாரிடமும் சொல்லி நானும் என் பெயரும் அலரும் அம்பலுமாக ஆகிப்போவோம்.

யாரிடமும் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. சரி, கணவனிடம் சொல்லுவோம் என்று முடிவு செய்து அலுவலகத்திலிருந்து திரும்பிய ராகவனிடம் மெதுவாக, காபியைக் கொடுத்து விட்டு,

நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்

சீக்கிரம் சொல்லு. எனக்கு நிறைய வேலை இருக்கு.

ம்... ஒண்ணுமில்லை

ஏற இறங்கப் பார்த்துவிட்டு சரியான பைத்தியம்டீ நீஎன்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

ஐயோ, சே.. சொல்லவந்தத சொல்லாம...மனதை அரிக்கும் மூளையைக் கடையும் அந்த விஷயத்தை யாரிடம் பகிர்வது! ஐயோ, என் பெயரக் காணலையே. ஊர் கூட்டி மடலேறிச் சொல்லலாமா? தலைவி இன்னார் என்று தலைவன் ஊருக்குச் சொல்வதை தமிழ் இலக்கியம் மடலேறுதல்என்கிறது. ஆனால் பெண்கள் மடலேறும் வழக்கம் இல்லை என்பதால் யாரும் மடலேறியதாக செய்தி இல்லை. திருமங்கையாழ்வாரின் நாயகியைத் தவிர...

நானும் அத்தலைவி போல என் பெயரைத் தொலைத்துவிட்டேன் என்று அறைகூவி சொல்லலாமா? கண்முன் விரிந்த காட்சியில் மனம் பதைபதைத்து விட்டது. கற்களும் செருப்புகளும் தன்மேல் விழுந்தது போல மனம் உதறிக் கொண்டது.

என் பெயர், எனக்கே மறந்துவிட்டதா? எனக்குள்ளே பெயர்களை நினைத்துப் பார்க்க முயலுகிறேன்.

யாரோ அழைப்பது போலிருந்தது. என் பெயர் சொல்லி அழைக்கின்றார்களா? ஆஹா, என் பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே.

சௌம்யா அம்மா! சௌம்யா அம்மா

இதோ வாரேன்என்ற என் பதில் குரலில் நான் சௌம்யா என்ற பெண்ணின் தாய் என்னும் ஞாபகமே முன்வர, ‘என் பெயர்...காணோமே.

வந்தவளை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வர, தொலைபேசி சிணுங்கியது. ஆஹா, என் பெயர் எனக்குக் கிடைக்குமேஎன்னும் நப்பாசையில் தொலைபேசியை எடுத்தேன். எதிர்முனையில் மாமனார்.

மருமகளே சௌக்கியமாஎன்றார்.

சௌக்கியம் மாமாஎன்று உரையாடல் தொடர்ந்தது.

மனவாட்டத்தோடு மீண்டும் சோபாவில் அமர்ந்தேன். பெயரைத் தொலைத்துவிட்ட வருத்தத்தோடு.

யாரோ கதவைத் திறக்கும் ஓசை கேட்டது. மீண்டும் முகத்தில் மகிழ்ச்சி மலர, என் பெயர் எனக்குக் கிடைத்துவிட்டது என்ற மகிழ்வில் ஓடோடிச் சென்றேன்.

அம்மா...என்று அழுது கொண்டு வந்தான் பிரபு.

அம்மா, அம்மா, பக்கத்துவீட்டு பாலு என் மேல கல்ல தூக்கி போட்டுட்டான்என்னும் அழுகுரலில் தாய்மையின் பொங்குதலில் அம்மாவாகி நின்றேன்.

அன்றைய பொழுது எனக்கு என் பெயர் கிடைக்கவில்லை. அன்றைக்கு மட்டுமல்ல. சில ஆண்டுகளாகவே என் பெயர் எனக்கு மறந்துதான் போய்விட்டதா? அல்லது எனக்குப் பெயரே இல்லையா?

உறக்கத்தில் யாரோ பெயர் சொல்லி அழைத்தாற் போலிருந்தது. அது அவர் எனக்குச் செல்லமாக வைத்த பெயரல்லவா? அது என் பெயரில்லையே. தூக்கத்திலும் நான் என் பெயரைத் தொலைத்துவிட்டேன் என்று என் பிரக்ஞைக்குத் தெரிந்துவிட்டதோ? அதுவும் குமுறுகின்றதோ?!

பிரக்ஞையோடு உலா போனால் என்பெயர் எனக்குக் கிடைத்துவிடுமே. பிரக்ஞையை, நில் நானும் உன்னோடு வருகின்றேன். என் பெயரை எனக்குக் கொடு.

சரி, வாஎன்ற அழைத்துக் கொண்டு போனது.

நீலா, பானு, ராதா, மாதவன், கிருஷ்ணன், கோபாலன், மதன், அருணா, மீனுக்குட்டி, டிரைவர் முத்துசுவாமி, வாட்ச்மேன் பண்ருட்டி, ரகோத்தமா, டீச்சர் பானுப்ரியா, பார்க்கவி, மாமா கோவிந்தா, ஐஸ்வர்யா, மோகனா, கோமதி, புவனா, பிரின்ஸ்பல் அங்கயற்கண்ணி, காலேஜ் மேட் ரூபன், சுதர்ஷினி, எழுத்தாளர் ஜெயகாந்தன், பாலகுமாரன், கனிமொழி, திலகபாமா, அம்ருதா ப்ரீதம், மணிரத்னம், சுகாஷினி, ரஜினிகாந்த், இந்திராகாந்தி, ராகுல் காந்தி, மொரார்ஜி தேசாய், வல்லபாய் படேல், பிரியங்கா, நளினி, பிரபாகரன், அம்முக் குட்டி, அம்மு... கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், புதுமைப்பித்தன், லா.ச.ரா... எத்தனைப் பெயர்கள், எத்தனைப் பெயர்கள் எனக்குள்ளே இன்னும் எத்தனைப் பெயர்கள் ஐயோ மண்டையே வெடிச்சுடும் போலிருக்கே. பிரக்ஞையோடு நடந்தால் பெயர்களுக்குப் பின்னால் விரியும் நிகழ்வுகளின் பிம்பங்கள்... நிகழ்வுகளின் பிம்பங்கள்... மூச்சு திணறியது.

பிரக்ஞையே நீ போ, போ... நானே என் பெயரைத் தேடிக்கிறேன். நீ போ, போ... போயிடு...

பக்கத்திலிருந்த கணவர், “ஏய், என்ன ஆச்சு, என்ன ஆச்சு...என்று உலுக்கிய பிறகே வியர்த்துக் கொட்ட மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த நான் எழுந்து, “தண்ணி குடிச்சுட்டு வாரேன்என்று வெளியே வந்து ஹாலில் சோபாவில் அமர்ந்தேன்.

ஐயோ, என்ன இப்படி கொதிக்குதுஎன்ற பேச்சின் வெடிப்பில் அதிர்ந்து எழுந்தேன்.

கைகளை கழுத்திலும் நெற்றியிலும் வைத்துப் பார்த்த பொழுது, அனலாய்க் கொதித்தது.

சரி, நான் மாலாவை வந்து உன்னை பார்த்துட்டு ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்றேன்என்று தன் தங்கை டாக்டர் மாலாவிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்பொழுதும் என் கவனம் அவர் என் பெயரைச் சொல்வாரா? எனக்கு என் பெயர் கிடைத்துவிடுமா? என்னும் ஆதங்கத்திலேயே இருந்தது. அவரும் சொல்லவேயில்லை.

மதியம் தொலைபேசி அழைத்தது. எடுத்தபொழுது எதிர்முனையில் அம்மா, மனதிலே மகிழ்ச்சி பரவ, “ஐயோ அம்மா, நீயாவது என் பெயரைச் சொல்லிவிடேன்என்ற மனது கிடந்து அடித்துக் கொண்டது.

அம்மாவும், “நீ எப்படி இருக்கேஎன்று பெயரைச் சொல்லாது, பேசி முடித்துவிட்டு வைத்து விட்டாள்.

மாலை ஐந்து மணிக்கு மாத்திரைகளை விழுங்கி, உறக்கத்தை விழுங்கிக் கொண்டிருந்தவனின் காதுகளில் எதுவோ ஒலிப்பது கேட்டது. தொலைபேசி தான், எதிர்முனையில் என் தோழி,

பெயர் பெரிய எழுத்திலே போட்டு, உன் நாவல் பத்திரிகையில வந்திருக்கு, வால் பேஸ்டர்ல பார்த்தேன். முதல்பரிசு வாழ்த்துக்கள்... நான் அப்புறமா பேசறேன்...என்று கூறியவுடன் வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டபொழுது கூரியர் பாய், பிரபல வாரப்பத்திரிகையைக் கொடுத்துவிட்டு கையெழுத்து வாங்கிச் சென்றான்.

கையெழுத்தில் பார்த்தேன். என் பெயர்

பத்திரிகையில் பார்த்தேன். என் பெயர்

என்.. என் பெயர், என் பெயர், என் பெயர் எனக்குக் கிடைத்துவிட்டது.

பெயரை முகமலர்ச்சியுடன் பார்த்தேன் என் பெயர் என்னைப் பார்த்து புன்னகைத்தது நமட்டுச் சிரிப்புடன்...

பெயரிலே என்ன இருக்கின்றது என்று...