கொடும்பாவி

‘கொடும்பாவி சாகலையோ
கோடைமழை பெய்யுமழை’

வெய்யிலின் உக்கிரத்தில்
வேகும் வயல்வெளிகள்

கதறிக் கரைகின்ற
காகக் கூட்டங்கள்

கரும்பனை ஓலைகளில்
அம்மை முத்துக்கள்!

ஆவி பறக்கின்ற
ஆலய தடாகம்

கருகிச் சுருண்ட
பச்சைப் பாசிப்படிவு

காய்ந்து வெடித்த
செட்டி குளம்

எரிமலைக் குழம்பாய்
கொதிக்கும் தார்ச்சாலைகள்

வேர்த்துச் சபிக்கின்ற
விழுதுகளோடு ஆலமரம்

மொட்டையடிக்கப்பட்ட
தேக்குக் காடு

வசையாலே வாயசைக்கும்
நேர்த்திக் காளை

நிழல் தேடுகின்ற
ஒற்றையடிப் பாதை

நெருப்புக் கூத்து விண்மீனாய்
சூரிய கோளம்

வெப்பக் காற்றில் உறைந்துபோன
பாலக்காட்டுக் கணவாய்

கோடை அனலின்
குரூர உக்கிர தாண்டவம்

கொடும்பாவிக்கு அது
கொண்டாட்ட காலம்

கொடும்பாவி சாகலையோ
கோடைமழை பெய்யுமழை

அனல் சாமியாடி
அருளேறிப் பதைக்கும் ஊர்ப்பாதை

வேனல் கார்முகில் மடிபொழிய
வெறுத்து நிற்கிறது

பறித்துக் கொடுத்த அந்த - கொடும்பாவியை
எரித்து முடித்தால் கோடைமழை

கொம்பு குத்தியாடும் கொடும்பாவியை
குருதி பலி கொடுத்தால் கோடைமழை

பருத்த பொலிகாளை கொடும்பாவியை
புதைத்து விட்டால் கோடைமழை

கொடும்பாவி சாகலையோ
கோடைமழை பெய்யுமழை

நாட்டைக் காக்க எழும்
கோடி கதிரவன்களாய்
புத்திளந் தலைமுறை

ஓட்டைச் சட்டியும்
கரிவேட பூச்சும்

குப்பை கூளமும்
கிழிந்த ஆடையும்

கொடும்பாவி நாட்டாமை
கிராமப்பாதையில் இதோ
சோளக்காட்டு பொம்மையாய்...

கழுத்தில் சுருக்கிட்டு
நாட்டாமை உருவத்தை
சாலையில் - சந்தில் - தெருவழியில்
இழுத்து அலைக்கழிக்கும்
குறும்புக்காரப் பொடியன்கள்

கொடும்பாவி சாகலையோ
கோடைமழை பெய்யுமழை

‘அரும்பறை’ வீட்டிலிருந்து
வாய்க்கரிசி தானம்
‘பாகத்தே’ வீட்டிலிருந்து
தேங்காய் தானம்

வழியெல்லாம் சாவுக்கு
தாராள தானங்கள்

இறங்கு வெயிலின் கறுத்த உதட்டில்
கொடுங்கோலனுக்கு இரங்கற்பா

மேற்குமலைத் தொடரின் உச்சந்தலையில்
எரிசூரியன் தீக்குளித்த வெஞ்சாம்பல்

கிராமத்து சாலை சந்திப்பில்
மரணத்தின் துர்நாற்றம்

ஆரவாரச் சத்தங்களோடு
ஊர் சனங்கள் ஓடிவந்து

கொடும்பாவி சடலத்தை
காறி உமிழ்கின்றார்

நாறுகிற சடலத்தை
நீறுபூத்த நெஞ்சத்தால்

நெருப்பு மூட்டி
கூக்குரல் இடுகின்றார்
நன்மையின் உதிர்மணிக் குருத்துக்கள்

கொடும்பாவி சாகலையோ
கோடைமழை பெய்யுமழை

செல்வந்தீ எரிந்தெழுகிறது
கொடும்பாவி சுடு சாம்பலாகிறது

இடிமின்னல் நாட்டை எழுப்புகிறது
கோடை கார்மேகம்
தலைவிரித்தாடுகிறது

வேனிற் பெருமழையில்
நிலமங்கை இன்ப மயக்கமடைகிறாள்
நன்மையின் விதை வெடிக்கிறது
நாடு “கண்ணியார் களிக்கு”*
ஆயத்தமாகிறது

* பாலக்காட்டில் கோடைமழைக்குப்பின் கொண்டாடப்படும் நாட்டுப்புற வசந்தக் கலைவிழா

(சாகித்ய அகாதமியின் Ethic Literature in Indian languagesதேசிய கருத்தரங்கில் (பொள்ளாச்சி) இடம் பெற்ற கவிதைகளில் சில...)

தமிழில் : கோமகன், ஆர்.பி.குமார்

Pin It