கள்ளிக்கென்ன வேலி? - பழமன் நாவல்

கொங்கு பிரதேசத்தின் விவசாய மாந்தர்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு படைப்பிலக்கியத்தில் இயங்கி வருபவர் பழமன். இவரின் நந்தியா வட்டமும்குறிப்பிடத்தக்க முந்தின நாவலாகும். ரங்கநாயகி அம்மாள் பரிசைப் பெற்றிருக்கும் கள் ளிக்கென்ன வேலிநாவலும் கொங்கு விவசாய மனிதர்களை மையமாகக் கொண்டிருக்கிறது. சுதந்திரம் பெற்ற காலத்திற்குப் பின் தொடங்குகிறது இந்த நாவல். சந்திரா என்ற பள்ளிப்படிப்பு மறுக்கப்பட்ட பையன் மாடு மேய்க்கும் வேலை, சாராயம் காய்ச்சும் வேலை, சைக்கிள் கடை, கண்டக்டர் என்று திரிகிறான். லாரி ஒன்றை வாங்கி தொழில் மாறுகிறான். காதல் வாழ்க்கை திருமணம் என்று தொடர்கிறது. திராவிட இயக்க பொதுவுடமை இயக்கத்தின் கோவை மாவட்ட வரலாறும் இணையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தேர்தலில் கள்ளவோட்டு போட்டும் தனது வேட்பாளர் தோல்வியுறவது சந்திராவுக்கு வருத்தம் தருகிறது. ஆடு கறக்கவும் பூனை நக்கவும் சரியா இருக்குஎன்பது போன்ற வாழ்க்கை திடுமென வாழ்க்கை தடம் புரண்டு போகிறது. குடும்பத்தில் மகள்கூட மதிக்காமல் திருமணம் செய்து கொள்கி றாள். விலைவாசி பந்த் ஒன்றில் அவனின் ஆதாரமாக இருந்த லாரி எரிக்கப்பட்டு விடும்போது தனியாளாகிறான். சொந்த கிராமத்திற்கு திரும்புபவன் மீண்டும் விவசாயத்திற்குப் போக எண்ணுகிறான். கொங்க மண்ணின் வாழ்க்கையை நேர்மையாக முன் வைத்திருக்கும் பழமனின் கைச்சித்திரமாகியிருக்கிறது.

(ரூ. 70, இலக்கிய பீடம், மேற்கு மாம்பலம், சென்னை 33.)

 

தூறலின் கடைசித்துளி : சந்திரா மனோகரன் கவிதைகள்

காதல் தொகுப்புகளிலேயே தூறலின் கடைசி துளிவித்யாச மானது. காதலியின் மீதான காதல் என்பதைவிட கவிதையின் மீதான கவிஞரின் காதல் என்றே குறிப்பிடலாம். ஊடாக அவரின் ஆத்மா இறைவனிடம் உரையாடுவதாகவும் உள்ளது. காதலியை கடவுளாக பாவித்து எழுதியதாகவே கவிதைகள் பரிமாணம் பெற் றுள்ளன - பொன் குமார் (ரூ. 60.00, இருவாட்சி, சென்னை - 11)

 

மனச்சிறகுகள் - நா. ராதாகிருஷ்ணன் கவிதைகள்

மனச்சிறகுகளல்ல உயிர்ச்சிறகுகள் இவை. கவிஞரின் புதிய விதியாப்பு வரம்புக்கள் கவிதையை அடைத்து வைக்க விரும்ப வில்லை. ஆனாலும் தெளிந்த நீரோடை போல ஓர் நதி அமைதி யோடு தட்டுத் தடங்கலற்று ஓடுகிறது - தமிழ்நாடன் (ரூ. 40)

 

தொழிற்கருவிகள் : ஒரு மொழியியல் நோக்கு - சா. சுந்தரபாலு

வேளாண் தொழில் படிப்படியாகக் குறைந்தும், புதிய தொழில் நுட்பக் கருவிகள் பெருக்கத்தால் வேளாண் கருவிகளின் பயன்பாடு குறைந்தும் மறைந்தும் வருகின்றது. அவை பற்றிய அகராதி வடிவமாக இந்நூலின் மையம் அமைந்துள்ளது. (ரூ. 100, சித்தன் பதிப்பகம், மாமாகுடி, நாகை)

 

உறைமெழுகின் மஞ்சாடிப் பொன் : தாணுபிச்சையா கவிதைகள்

தட்டார் சமூகத்தின் கைவினை தொழில்நுட்பம் சார்ந்த புழங்கு பொருள் பண்பாட்டு அடையாளங்கள் தாணுபிச்சையாவின் அழகிய கவிதை வடிவங்களாக வெளிப்பட்டுள்ளன. அச்சாலைத் தெருவின் அதிர்வுகளைப் புனைந்து சொல் கிறது. நவீனம் தாண்டிய தமிழ்க்கவிதையின் கலாச்சார வெளி புனைவுப் பரப்பில் கிளிக்கூண்டு சமிக்ஞையுடன் மிதக்கிறது இந்த மகர பட்சி - ஹெச்.ஜி. ரசூல்

(ரூ. 50.00, திணை, நாகர்கோவில்)

 

பெரியார் அம்பேத்கார் சாதி ஒழிப்பு : சு. வந்தியத்தேவன்

சாதி ஒழிப்பு தொடர்பான பெரியார், அம்பேத்கார் சமத்துவ சிந்தனைகள் தொனிக்கின்றன. வரலாற்றுச் சான்றுகள் நூலுக்கு ஆழம் தந்துள்ளன.

(ரூ. 50.00, அழகிரி, சுப்ரமணியபுரம், கடலூர்)

 

உள்ளுக்குள் ஒரு நதி: தொகுப்பு : சேதுபதி

மண்ணியம் குறித்தப் பிரச்னைகளை முன் நடத்தும் பன்னிரு சிறுகதைகள். குன்றக்குடி அடிகளார், இரா.மீனாட்சி, கந்தர்வன், சுப்ரபாரதிமணியன், இறை யன்பு உட்பட பலரின் சிறுகதைகள். மனச்சாட்சிக்குப் பதில் சொல்லத் தெரியாது வெறுமனே கைபிசைவது தவிர்த்துக் கதைகளில் உழவர்கள் வாழ்வை குறிப்பவை இக்கதைகள். (ரூ. 45, பாவை, சென்னை - 14)

 

அழகியலே... பெ.விஜயராஜ் காந்தி கவிதைகள்

வாசிப்பாளராய் இருந்தவர் படைப்பாளராய் மாறும் தருணம் காதல் தருணங் களே. கவிதை வாழ்க்கையை நுட்பமாக அணுக வைக்கும். வாழ்க்கையை நுட்ப மாக உணர வைக்கும். இயற்கையின் பங்கேற்பாளராக மாற்றக் கூடிய தருணங்கள் படைப்பாற்றல் வெளிப்படும் தருணங்களே. இந்த இயற்கையின் பங்கேற்பாள ராக உள்ள எண்ணற்ற படைப்பாளர்களில் விஜய் காந்தியும் தன்னை இணைத்துக் கொள்ள வந்திருக்கிறார் - சக்தி ஜோதி (ரூ. 55.00, ஓவியா, வத்தலகுண்டு)

 

தமிழறிஞர் ஞானி : படைப்பும் பார்வையும்

ஞானியின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளும், பேட்டிகளும் 75 வயது நிறைவு சமயத்தில் அவரைப்பற்றி எளிமையாக அறிந்து கொள்ளும் முயற்சி. (ரூ. 30, தமிழோசை, கோவை)

 

தமிழ்நாடு கள் இயக்கம் : போராட்ட வரலாறு - இரா. ரவிக்குமார்

கடந்த 5 ஆண்டுகளாக தமிழ்நாடு கள் இயக்கம் கள்ளுக்காக போராடி இருக்கிறது. இது ஜாதிமத இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. கள் இறக்க அனுமதி கேட்டு நீதி மன்றம் செல்லுதல், விழிப்புணர்வு சுற்றுப்பயணம், கள்ளுக்கான தடையை நீக்குவது நியாயமில்லை என்று அறிவித்தல் ரூ. 1 கோடி பரிசு என அறிவிப்பு, முதல்வருக்கு லட்ச கையெழுத்திட்டு கடிதம், தொடர்ச்சி யாக போராட்டங்கள், கையெழுத்து இயக்கம், இலங்கை பயணம் இலங்கையில் கள் ஒரு முக்கிய உணவாகியிருப்பதும் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விளங்குவதை விளக்கியது, தங்கபாலுவுக்கு எதிரான போராட்ம், கள் இறக்குதல் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தல், தேர்தல் கால நடவடிக்கைகள், தமிழக அரசு அமைத்த குழுவின் அரசியல் செயல்பாடு இதுபோன்ற தொடர்ச்சியாக நடை பெற்ற போராட்டங்களின் பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. (ரூ. 250.00, கொங்கு ஆய்வு மையம், புறவழிச்சாலை, உடுமலை)

 

சொன்னாற்போல... - கே.எஸ். சிவகுமாரனின் கட்டுரைகள்

பெரும் விமர்சனமாக இக்கட்டுரைகள் வியாபகமாகாவிடி னும் அச்சிறு எழுத்துக்களுக்கூடே ஒரு விமர்சகன் இருப்பதை எவரும் இனம் கண்டு கொள்வர். அபிப்ராயம் போல அவரது கூற்றுகள் தென்படினும் அதிலே பிற இலக்கியங்களூடான ஒப் பீடு குறிப்பிட்ட இலக்கிய படிவம் பற்றிய உருவம் செம்மை, வெளிப்பாட்டு முறையில் காணப்படும் பலம், பலவீனம் என்பன தென்படுவதை இலகுவில் இனம் கண்டு கொள்ளலாம். சிவகுமாரன் ஒரு வகையில் ஒரு செயல்முறை விமர்சகராவார் - சி.மௌனகுரு (ரூ. 90.00, மணிமேகலை, சென்னை)

 

ஒவ்வொரு மழையிலும் - க.ஆனந்த் கவிதைகள்

அறிவு நிலைக் கவிதைக்கு முக்யத்துவம் கொடுத்திருக்கிறார். தற்கால சமூகத்திற்கு தேவை அறிவு நிலைக் கவிதைகளே. இதை கவிஞர் உணர்ந்திருக்கிறார். குறியீட்டு உத்தியில் வெற்றி பெற்றி ருக்கிறார். உளவியலோடு கவிஞருக்கான சமூக அக்கறையும் உள்ளது. புதிய வரவு. புதுமை வரவு - சுதா கண்ணன் (ரூ. 60.00, ராஜேஸ்வரி, சென்னை)

 

உயிர்ப்புதையல் - காடும் காடு சார்ந்த உலகமும்

- கோவை சதாசிவத்தின் சூழல் கட்டுரைகள்

மலைத் தொடர்களைக் காணும் ஒரு கவிமனதின் துடிப்புக ளாக 18 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. மலைகள், காடுகள், பறவைகள், விலங்குகள், நதிகள், கடற்கரைகள் என இயற்கையின் கூறுகள் ஒவ்வொன்றைப் பற்றியும் நாம் அறிய வேண்டிய அரிய தகவல்களுடன் இயற்கையைத் தாயாகவும், காடுகளை குல சாமியாகவும் உளமார நம்புகிற உணர்வுபூர்வமான ஒரு மனதின் வெளிப்பாடாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. வள்ளுவனும், வள்ளலாரும், பாரதியும், ராகுல்ஜியும், ஏங்கல்சும் சூழலியல் உணர்வோடுதான் வாழ்ந்தார்கள் படைத்தார்கள் என்பது நமக்கு உறைக்கும் விதத்தில் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. எளிமையும், கவித்துவமும் ஒன்று கூடிய மொழியில் வாசகரை உடனே தன்னோடு அழைத்துச் செல்லும் நடையில் இக்கட்டுரைகள் அமைந்துள்ளது இந்நூலின் தனிச் சிறப்பாகும். நாளெல்லாம் இயற்கையைச் சீண்டிக் கொண்டிருக்கும் மனிதனை வலுவான வார்த்தைகளால், வாதங்களால், குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது இந்தப் புதையல். (வெளிச்சம், கோவை, ரூ. 120, )

 

மலையக மல்லன் - தி. குழந்தைவேலு நாவல்

திருப்பூர் குழந்தைவேலுவின் முந்தைய மின்சார வேர்கள் என்ற நாவல் மின்உற்பத்தி நிலையம் உருவாக்கப்படுவதில் உரமாகிய உழைப்பாளிகளை உணர்த்தியது. இந்த நாவல் மின் கடத்தி நிலையங்களை உருவாக்குவதற்கும் மின் கடத்தி கோபுரங்கள் எழுப்புவதற்கும் மலைகளின் இருண்ட மடிப்புகளுக்குள் உழைப்பாளிகள் படுகிற பாடுகளும் வடிக்கிற வியர்வையும் இழக்கிற உயிர்களும் பற்றி ஈரமனதுடன் சொல்கிறது. மலை வனாந்தரத்துள் மின் கடத்தி கோபுரம் எழுப்ப முதல் தடையாக இருப்பது அடர்மரங்கள், பெரும்பகையாக இருப்பது கொடிய மிருகங்கள். ஆதிக்காட்டுவாசி நாகரீக மனிதனாக பரிணமித்த நீண்ட நெடிய நீள் மனிதகுல வரலாற்றின் சிறிய குறியீடாக, மல்லன் என்ற மலைவாசி இதன் நாயகனாகிறான். பலாக்காயும், தேனையும் விற்க வந்த மல்லன் என்ற ஆதி வாசியை மிருகங்கள் சமாளிக்க முடியாமல் தத்தளிக்கிற மின்துறை அதிகாரி புத்தி சாலித்தனமாக மின் ஊழியனாக மாற்றுகிறான். மலையின் மர்மங்களையும், அனு பவங்களையும் ரத்தம் சதையுமாக உயிர் துடிப்பான வாழ்க்கை வரலாறு நீள்கிறது. தமிழுக்கு இது புதிது. இதன் உள்ளடக்கமும், பாடுபொருளும் மிக மிக புதிது. குழந்தைவேலின் (மின் ஊழியராக இருந்து பெற்ற) அனுபவங்கள், இந்த நாவலில் உயிர்ப்பாக உண்மைத் துடிப்புடன் வெளிப்பட்டிருக்கிறது. இந்தப் பாடு பொருளை, அவரைத் தவிர வேறு எந்த இலக்கியக் கொம்பனாலும் எழுதிவிட முடியாது - மேலாண்மை பொன்னுசாமி (காவ்யா, சென்னை, ரூ. 70)

 

Lifeblues - ஆர். ஹேமாவின் ஆங்கிலக் கவிதைகள்

சென்னையைச் சார்ந்த ஹேமாவின் 54 ஆங்கிலக் கவிதைகள் லிவீயீமீதீறீuமீs’ என்ற தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவரின் முதல் தொகுப்பு இது. ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் அனுபவங்களாய் இவை விரிகின்றன. (ரூ. 150, ரைட்டர்ஸ் ஒர்க்ஸ்ஷாப், கல்கத்தா)

 

இருவாட்சி : பொங்கல் இலக்கிய மலர்

குறிப்பிடத்தக்க இலக்கிய மலர். பல்வேறு வகையான படைப்பாளி முகங் களைக் காட்டும் படைப்புகள். பாவண்ணன், ஞானக்கூத்தன், தமிழ்நதி, சுப்ர பாரதிமணியன், ஜெயமோகன் உள்ளிட்ட 50 படைப்பாளிகள் பங்கு பெற்றுள்ளனர். தொகுப்பாளர் : எஸ். ஷங்கர நாராயணன். (ரூ. 100, ராஜராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)

 

இலக்கிய ஆராய்ச்சி - தொகுப்பு இதழ்

கல்விப்புலம் சார்ந்த ஆராய்ச்சியாளர்களை மறைமுகமாக புறக்கணிக்கும் போக்கை மறுப்பதற்காகவும், மாற்றியமைப்பதற்காகவும் இவ்விதழின் தோற்றம் என்கிறார் க.இந்திரசித்து. நவீன இலக்கிய நூல்கள் குறித்தும், பழந்தமிழ் மையங்கள் குறித்துமான பல்வேறு கட்டுரைகள். தனி இதழ் ரூ. 50. (இந்திரசித்து, 40, சிங்கப்பூர் நகர், உடுமலை 642 126.)

 

தேயிலைக் கொழுந்து - சி.ஆர். ரவீந்திரனின் நாவல்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல். இயற்கையோடு இணைந்து மனிதனின் வாழ்வும், இயற்கைக்கு எதிராக மனிதர் களின் வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் எளிமையான தொன்மங்களோடு நாவலாக்கப்பட்டிருக்கிறது. (ரூ.100, என்சிபிஎச், சென்னை)

 

உலக சிறுவர் சினிமா : பாகம் 3 - விஸ்வாமித்திரன்

தீவிரமான உலகத் திரைப்படங்கள் பற்றிய தீர்க்கமான பார்வையை இடது சாரி பார்வையுடன் வெளிப்படுத்துபவர் விஸ்வாமித்திரன். கலைநுணுக்கங்களை, மனித உரிமைகளை கட்டுரைகளில் காணலாம். விமர்சனத் தொனிக்குள் இருக்கும் அக்கறை நியாயமானது. குழந்தைகளின் வாழ்க்கை குறித்த நிதர்சனங்களை முன் வைப்பவர். (ரூ. 100, வம்சி, திருவண்ணாமலை)

 

Stalin's Greek Plays - A study : N. Subramanian

ஸ்டாலினின் மொழி பெயர்ப்பில் வெளிவந்த கிரேக்க நாடகங்கள் பேக்கி, தப்ஸிற்கு எதிரான எழுவர், பாரசீகர்கள், கஸ்டுஸ்ட பிரமீதியஸ், ஒரஸ்டிய முந்நாட்டம், கி«ளியோபாடர்£, பிலக்டிடிஸ், புரட்சிப் பெண்கள், அஜக்ஸ், எலக்டா, ஆண்டனி, கலோனஸிஸ் ஈடிபஸ் போன்றவை. 150 நூல்களுக்கு மேல் எழுதியுள்ள உடுமலை என். சுப்பிரமணியனின் இந்நூல் ஸ்டாலினின் மொழி பெயர்ப்பு நூல்களை முன்வைத்து மொழிபெயர்த்தன்மையை விரிவாக ஆராய்கிறது. ஸ்டாலின் மொழி பெயர்ப்பு நுணுக்கத்தையும் எடுத்துரைக்கிறார். சென்றாண்டில் வெளிவந்த கிரேக்க நாடகங்களின் மொழிபெயர்ப்பு தொகுப்பு நூலுக்கு என். சுப்பிரமணியன் எழுதின முன்னுரையும் குறிப்பிடத்தக்கது. (ரூ. 120, வெளியீடு : என்னெஸ், உடுமலை)

 

யாழிகளின் காலம் - பெருங்குன்றூர் கிழார்

ஹைதராபாத்தில் வசிக்கும் திரைப்படத்துறையில் பணியாற்றும் மணியின் கவிதை மொழி பிரத்யேகமாகவுள்ளது. தினசரி நாட்குறிப்புகள், சித்தர் பிரமை, புரியாத தன்மை என்று கவிதைகளை உருவாக்கியுள்ளார். (ரூ. 50. வெளியீடு : இருவாச்சி, சென்னை)

Pin It