இரவின் கணமான ஒரு பொழுதில்
வானத்தை பிரதி எடுக்க தொடங்கியிருப்பதாக
சொல்லிக்கொண்டது
அமைதியாக அந்த குளத்தில்
தளும்புகின்ற நீர்.
எங்கோ இரவின் பாடலைப் பாடிக்கொண்டிருக்கிற
தெருவிளக்கு வெளிச்சத்தின் நீட்சியாய்,
நீர்ப்பரப்பில் பரவுகின்ற ஒளித் தீற்றக்கூடேயாய்
வானத்தை முழுவதுமாக பிரதி எடுத்தாயிற்று என்று
கூறிக்கொண்டது குளம்.
எத்தனையாவதாக உடைந்த வானத்தின்
எத்தனையாவது துண்டு இந்தப் பிரதி?
இந்தப் பிரதியின் எத்தனையாவது மடங்கு
இந்த வானம்?
விட்டேத்தியாக விட்டெறிந்த கல்
குளத்தில் விழுந்து, துள்ளி குதிக்கிறது
ஒரு தவளையாய் மாறி.
கிளக்... கிளக்... கிளக்...
பெருஉக்கிரம் கொண்டு பிரதியை
சிதைக்கிற ஒரு தருணத்தில்
அது கலக்காரனாகியது.

மஜ்னுக்கள்
காதலியின் சமாதியில்
காவியம் எழுதி
கொண்டிருக்கிறார்கள்.
வீழ்ந்த சாம்ராஜ்ஜியங்கள்
வரலாற்றில் தன்னை
பதிப்பிப்பது போல
லைலாக்களோ
பிள்ளைகள் பெற
யத்தனித்து கொண்டிருக்கிறார்கள்
வேறொருவனுக்காக...

ஒவ்வொரு முறையும்
புலால் உண்ணும் போது
நினைத்துக் கொள்ளுவேன் உன்னை.
அதோடு,
திருமணத்திற்கு பிறகு
புலால் உண்ண மாட்டேன் என்று
உனக்கு நான் கொடுத்த
சத்தியத்தையும்.
ஒருவேளை நீ என்னை
மறந்து விட்டிருக்கலாம்
அதோடு
என் சத்தியத்தையும்.
தட்டில் விழுந்த இறைச்சித்
துண்டின் கனம் தாளாமல்
உடைந்து தொங்குகிறது என் சத்தியம்.

Pin It