இந்தியர்களின் பண்பாடு, மொழி, உடை, நாகரீகம் என அனைத்தும் வெளிநாட்டவருக்கு வெள்ளித் திரையில் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்கள் திரைப்பட இயக்குனர்களே. அதிலும் இந்தித் திரைப்படங்கள். இந்தியர்கள் மரியாதை மிக்கவர்களாகவும், மனிதாபிமானிகளாகவும், அழகானவர்களாகவும், உழைப்பாளிகளாகவும் இன்னும் பலப்பலவாகவும் வெளிநாட்டவர்கள் அறிந்தும் புரிந்தும் கொள்ள காரணமாய் இருப்பவர்களாக இந்தி திரைப்பட இயக்குனர்களைத்தான் சொல்ல வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களை நம்பி எடுக்கப்படும் திரைப்படங்கள் இங்கு அதிகம். இந்திய பாரம்பரிய குடும்பங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் வெளிநாட்டவர்களுக்கு அரும் விருந்து. இதனை பரிமாற இந்திய இயக்குனர்கள் போராடி வருகின்றனர்.

இந்திய நாட்டைவிட்டு பிழைப்புக்காக வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டவர்களாகவே குடியுரிமை பெற்றுவிட்டாலும் அவர்களால் தங்கள் இந்திய நாட்டின் ஞாபகங்கள் எதையும் மறக்க முடியவில்லையாம். அவர்கள் விடுமுறைகளில் இந்தியா வருவதும் இங்கு பன்னாட்டு சந்தைப் பொருட்களைப் பயன்படுத்தி பந்தாக் காட்டுவது ஒருபுறம் இருந்தாலும் கலைகள் அவர்களின் மதிப்பீடுகளால் தான் காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது. அனைத்துவிதமான கலைகளுக்கும் காசு கொடுத்துக் காப்பாற்றிவருவது இந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தான். ஆவணக் காப்பகங்க ளாகட்டும், கலையமைப்புகளாகட்டும், இல்லை கல்வி கலாச்சார அமைப்புகளாகட்டும் நிதி வழங்கி வாழவைத்துக் கொண்டிருப்பது இந்த வெ.வா. இந்தியர்கள்தான். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் பாலிவுட் திரைப்படங்கள் இவர்களை மகிழ்விக்கவும் இவர்களால் காசு சம்பாதிக்கவுமே சமீபமாக எடுக்கப்படுகிறது.

ஹம் அப்கே ஹை கோன் (1994) என்ற திரைப்படம் திரையுலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் வருடத்திற்கும் மேல் ஓடியது. இயக்குனர் கோவிந்த மூனிஸ் இயக்கிய போஜ்பூரி படம் நதியா கே பார் (1982) என்ற படத்தின் கதையை அப்படியே நகலெடுத்து இயக்குனர் சூரஜ் ஆர். பார்ஜாத்யா இயக்கிய படம்தான் ஹம் ஆம்கே ஹை கோன். இப்படத்திற்கான திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் பொறுப்புகளை ஏற்றுச் செய்த இயக்குனர் பார்ஜாத்யாவுக்கு இந்தப் பணிகளை செய்து முடிக்க ஆறு ஆண்டுகள் ஆனதாம். ஏற்கனவே வந்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் கதையை மறுபடியும் படமாக்க இத்தனை கஷ்டப்பட்டதாகத் தெரிவித்து உள்ளார்.

நாயகனின் அண்ணன் மனைவி இறந்து விடுகிறாள். நாயகனுக்கும் அண்ணன் தங்கைக்கும் இடையில் காதல் அண்ணனுக்கு கொளுந்தியாளுடன் மறுமண ஏற்பாடு. இறுதியில் அண்ணன் தம்பிக்கு விட்டுக் கொடுப்பதாக அமைந்த குடும்பச் சிக்கல். இந்தக் கதைக்கு இப்படி ஒரு வெற்றிக்குக் காரணம், இந்திய மக்களிடையே உடைந்துபோன கூட்டுக் குடும்ப பந்தங்கள். குடும்ப கொண்டாட்டங்கள். இவை திரைப்படங்களில் பிரம்மாண்டான செட்களுடன் காட்டப்படும்போது மக்கள் மகிழ்கின்றனர். இந்த சூத்திரத்தை வைத்துக் கொண்டு நிறைய வெற்றிப் படங்கள் வெளியாகி உள்ளன.

சமீபமான வந்த பாலிவுட் படங்களின் கதையமைப்பும் படப்பிடிப்பும் வெளிநாட்டில்தான். வெளிநாடு வாழ் இந்திய மக்களின் வாழ்வையே மையமாகக் கொண்ட கற்பனைக் கதைகளை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. பிரபல இயக்குனர் மற்றும் இன்று இந்தியாவின் மிகப்பெரிய படத்தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் யஷ் சோப்ரா, இதுவரையிலான தனது அனைத்துப் படங்களிலும் ஏதாவது ஒரு காரணத்தை கதையில் வலியத் திணித்து சுவிட்சர்லாந்து சென்று படப்பிடிப்பு செய்யும் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். உதாரணமாக, கபி கபி, சில்சிலா, சாந்தினி, டார் , தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே இன்னும் பலப்பல. சமீபமாய் அவர் தனது பழக்கத்தில் கொஞ்சம் மாற்றம் செய்து வேறு நாடுகளுக்கும் சென்று படப்பிடிப்பு நடத்துகிறார். ஐரோப்பாவில் படம் பிடிக்கப்பட்ட ஹம் தும், முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் படம் பிடிக்கப்பட்ட சலாம் நமஸ்தே தற்போது வெளியாக இருக்கும் தர ரம் பம் வரை படத்தின் மிகு விழுக்காடு காட்சிகள் வெளிநாட்டில் படம் பிடிக்கப்பட்டவைதான்.

இப்படியாக இயக்குனர் கரன் ஜோகரின் அனைத்துப் படங்களும் ஏதாவது ஒரு வகையில் வெளிநாட்டில் கதை நடப்பது போல் அமைக்கப்படுகிறது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, அசுதோஸ் குவாரிகன், பர்ஹன் அக்தர் இப்படி அனைத்து முன்னணி இயக்குனர்களும் தங்கள் கதைகள் இந்தியாவில் தொடங்கி வெளிநாட்டில் அல்லது வெளிநாட்டில் தொடங்கி இந்தியாவில் என்று இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

அஜ்னபி என்றோர் படம் வெளிநாட்டில் வாழும் இந்திய நண்பர்கள் தங்கள் மனைவியரை மாற்றிப் புணருவது போன்ற கதையமைப்பில் உருவாக்கப்பட்டது. இவ்வாறான மட்டரக சிந்தனையோட்டமுள்ள படம் தோல்வியைத் தழுவவில்லை மாறாக முதலுக்கும் அதிகமான பணம் பார்த்துவிட்டார்கள். இவ்வாறாக இந்தியர்களால் உருவாக்கப்படும் படங்கள் இந்தியாவின் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைகிறது. மக்களின் நாகரீகம், கலை, பழக்கவழக்கம் என திரைப்படங்களில் பதிவு செய்யப்படும் விஷயங்களே உலக அரங்கில் திரையிடுகையில் புற நாட்டு மக்களைச் சென்றடைகிறது. இவ்வாறான படங்களை பிறநாட்டு மக்கள் இந்தியா இத்தகைய நாடா என வியக்கவும் இல்லை வருத்தப்படவும் காரணமாக இருக்கிறது.

இந்தியாவின் நகரங்கள் இன்று ஓரளவு நாகரீகம் பெற்றிருக்கிறது. ஆனால் இதனை முழுமையாக நாகரீகம் என்று சொல்லிவிட முடியாது. மக்களின் பழக்கவழக்கங்களில் கொஞ்சம் மாற்றம் இருக்கத்தான் செய்கிறது ஆனால் பாலிவுட் படங்களில் காட்டப்படும் அளவுக்கு மாற்றமில்லை. கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவுசெய்து குடியிருப்புகள், உடையலங் காரங்கள் மற்றும் வாழ்வு முறைகள் என அனைத்திலும் ஒரு பகட்டு காட்டப்படுகிறது. இதுதான் இந்தியாவின் இத்தகைய நிலை. இதுதான் இந்திய மக்கள் என பதிவு செய்யப்படுகிறது.

இந்தியா கிராமங்களின் நாடு இங்குள்ள மக்கள் மேற்கத்திய ஆடைகள், நாகரீகங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் பார்த்திருக்க மாட்டார்கள். உலக சினிமா ஒரு சிறு வட்டத்திற்குள் மட்டுமே திரையிடப்படுகிற221111து. அதனால்தான் எனது படங்களில் நான் நவ நாகரீகத்தையும் மிகையான ஆடைகள் மற்றும் கவர்ச்சிக் காட்சிகளையும் வைக்கிறேன். பாமரர்களால் இதைக் கற்பனைகூட செய்ய முடியாது. நான் அவற்றை அவர்களின் கண்முன் காட்சிப் படுத்துகிறேன் என்றார் பிரபல இயக்குனர் ராஜ் கபூர். ஆனால் தற்போதைய இயக்குனர்கள் இவ்வாறு எந்த விளக்கமும் கொடுக்கத் தயாராக இல்லை. தங்கள் தவறுகளை நியாயப்படுத்துவதோ அதற்கு விளக்கம் தருவதோகூட இல்லை.

இந்தியாவின் உறவுச் சிக்கல்களைக் காட்ட செல்வம் கொழிக்கும் ஒரு குடும்பத்தையும் அரண்மனையில் வாழும் படியான சூழலையும் காட்டி படம் பிடிக்கின்றனர். இதனைக் காணும் வெளிநாட்டவர்களுக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சி கிடைக்கிறது. நாலாந்தர உறவுச் சிக்கல்களும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை பிரச்னைகளும் பார்க்கக் கிடைக்கிறது. ஆனால் இவ்வகைப் படங்கள் நம் நாட்டு பண்பாட்டின் குறியீடாக இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலும், மக்களின் வாழ்க்கை சூழலும் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. எதார்த்தத்தைப் பதிவு செய்வதாகச் சிலர் கிளம்பினாலும் அதில் மிகை புனைவு செய்து விடுகின்றனர். கோடிகளில் செலவு செய்தே தீருவோம் என்ற அடம்பிடிப்பின் காரணமாக நல்ல கதைகளிலும் நஞ்சு கலந்துவிடுகிறது. பாலுவுட் படங்கள் ஒன்று மும்பை நகரத்தை மையமாகக் கொண்டு கதைகளை அமைத்துக் கொள்கிறது அல்லது வெளிநாட்டுத் தொடர்புடைய கதைகளைத் தேர்ந்து கொள்கிறது. எழுத்தாளர் ஜும்பா லஹிரி எழுதிய நேம்ஷேக் நாவல் இயக்குனர் மீரா நாயரால் திரைப்படமாக்கப்பட்டது. இந்தப் படமும் இந்தியாவிலிருந்து நியூயார்க் நகரில் குடிபெயர்ந்த வங்காளிக் குடும்பத்தின் கதை. வங்காளத்தின் அடையாளத்தை இழக்காமல் இருக்க குடும்பம் முயற்சிக்க குடும்பத்தின் வாரிசோ நியூயார்க் நகர நாகரீகத்தில் வாழ விரும்புவதும் இதனால் உருவாகும் பிரச்னைகளை தான் இப்படத்தின் சுருக்கக் கதை

இதற்கு முன் கால்பந்தாட்ட ஆர்வம் கொண்ட பஞ்சாபி குடும்பத்தின் இளம்பெண் தனது விளையாட்டுப் பயிற்சியாளராக இருக்கும் வெளிநாட்டவரை நேசிப்பது குறித்த மற்றும் வெளிநாட்டவர்களைப் போல் குட்டைப் பாவாடை அணிந்து விளையாடுதலுக்கு குடும்ப எதிர்ப்பு என படத்தின் கதை செய்யப்பட்டிருந்தது. விருதுகள் பெற்ற நல்ல படம் இது. ஆனால் வண்ணங்களும், வாழ்க்கையும் இநதியாவில் கொட்டிக்கிடக்க இந்திய இயக்குனர்கள் அனைவரும் வெளிநாட்டு தொடர்பு படங்களையோ இல்லை வெளிநாட்டில் விலைபோகும் இந்தியக் குடும்பக் கதைகளையோ படமாக்குவது ஏன் என்றுதான் விளங்கவில்லை.

Pin It