சகோதரிகள் கதைகள்
அலெக்சாண்டிரா கொலேண்டை
தமிழில் : சொ. பிரபாகரன்
வெளியீடு: புதுப்புனல், விலை. ரூ.50.
5/1, பழனியாண்டவர் கோயில் தெரு,
முதல் தளம், அயனாவரம், சென்னை - 23


சோவியத் ரஷ்யா உருவாக்கத்தில் சிறப்பாகப் பணியாற்றியதோடு அரசியல் வாழ்வில் பெண்களின் விடுதலைக்கான வழிமுறைகளைச் சட்டபூர்வமாக்கிய பெருமைக்குரியவர் அலெக்சாண்டிரா கொலோண்டை சர்வதேச அரசியலில் பெரும் பங்காற்றியதோடு லெனின் தலைமையின் கீழ் அமைச்சராகவும் வெளிநாட்டுத் தூதராகவும் செயலாற்றிய செயல்திறன்மிக்க போராளி; தன் வாழ்நாள் முழுவதும் அயராது துணிச்சலோடு தன் இலட்சியத்திற்காகப் போராடியவர். முதலாளித்துவ சமூகம் பெண்களை எப்படிச் சுரண்டுகிறது என்பதை உணர்ந்த அலொக்சாண்டிரா ரஷ்யப் புரட்சிக்கு முன்னும் பின்னும் பல்வேறு முறைகளில் அவர்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய வீராங்கணை எனலாம்.

வர்க்க விடுதலை மட்டும் பெண் விடுதலைக்குப் போதாது என்பதில் உறுதியாக நின்று செயல் பட்டதாலேயே பலமுறை கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. புரட்சியின் போதும் அதன் பின்னரும் அவர் சந்தித்த நெருக்கடிகளும் சிக்கல்களும் ஏராளம். ஆயினும் மனந்தளராமல் இறுதிவரை பெண் விடுதலைக்கும் போர் எதிர்ப்புக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் கரைத்துக்கொண்ட அசாதாரண பெண் அலெக்சாண்டிரா.

‘சகோதரிகள்' என் நூலில் அவருடைய இரண்டு படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

முதல் கதை "சகோதரிகள்'

இரண்டாவது கதை ‘மூன்று தலைமுறைகளின் காதல்கள்'

ஏறக்குறைய 104 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் 35 பக்கங்கள் ஆசிரியர் பற்றிய குறிப்புகளைப் பேசுகின்றன. எஞ்சியிருக்கும் 69 பக்கங்களில் இரண்டு கதைகள் இடம் பெற்றுள்ளன.

ஆண் பாட்டாளிகளுடன் இணைந்து நின்று போராடி சமூகத்தை மாற்றுவதுதான் பெண்களின் விடுதலையை உறுதி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் பெண்கள் ஆண் - பெண் என்ற பாலின பாகுபாட்டினாலும், வர்க்கப் பாகுபாட்டினாலும் இரட்டை ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார் அலெக்ஸாண்டிரா.

ஆணுக்கான அத்தனை உரிமைகளையும் வாய்ப்புகளையும் பெண்ணும் பெறத் தகுதிவாய்ந்தவர். அதற்குத் தடையாக இருக்கும் சமூக அமைப்பின் மரபுத் தடைகள், ஆண் மேலாண்மை ஆகிய அனைத்தும் முற்றுமாகப் போக்கப்பட வேண்டுமென்பதில் எந்தச் சமயத்திலும் எக்காரணத்திற்காகவும் ‘சமரசம்' செய்து கொள்ளாத நெஞ்சுரம் உடைய மனு´அவர்.

பெண் விடுதலைக்கான முதல் குரல் அவருடையது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஓங்கி ஒலித்த அந்தக் குரலின் அதிர்வில் பல்வேறு சட்டங்கள் சோவியத் ரஷ்யாவில் உருவாகிப் பெண்களுக்கான விடுதலைக்கு அடித்தளம் இட்டது என்பது வரலாறு உணர்த்தும் உண்மை.

முதலாளித்துவ சமூகத்தில் புழுத்துப்போன மரபுகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தக்கவைத்துக் கொள்ள எல்லாவிதத்திலும் முயலும் ஆண் மேலாண்மையால் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தங்களின் சுயதேவைக்காகவே பெண்களைப் பயன்படுத்தும் நிலையும் தொடர்ந்து இடம் பெறுவதால் பெண் தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமையையும் வாய்ப்பையும் இழக்க வேண்டியவளாகிறாள்.

வெளியிடங்களில் பணியாற்றும் உரிமையிலும் வாய்ப்பிலும் ஆணே முதன்மை பெறுகிறான். அதனால் பணியிடங்களில் ஆட்குறைப்பு செய்ய நேரும்போதும் முதலில் பாதிப்புக்குள்ளாவது பெண்ணே. எவ்வளவு நேர்த்தியான செயல்திறன் உடையவளாக இருப்பினும் அது அவளுக்குப் பயன்தராமல் போகிறது. இந்த நியாயமற்ற சமூகப் போக்கினால் பெரும் துயரத்திற்கு ஆளாவதும் பெண்தான்.

குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தாய் தந்தை இருவருக்குமானது; என்றாலும் அந்தச் சுமையைத் தாங்கும் நிலையும் பெண்ணுக்கே உரியதாகிறது. குழந்தையின் உடல்நலன் பாதிக்கப்பட்டாலும் விடுப்பு எடுப்பது என்பது இயலாமற்போகிறது. தவறி எடுத்துவிட்டால் வேலை போய்விடும் என்ற நிலை. வேலை பறிபோனால் ஆணைச் சார்ந்திருக்க வேண்டிய அவலமும் அதனால் அவனின் மேலாண்மைக்கு அடிமையாகும் நிர்பந்தமும் நேர்ந்து விடுகிறது. அப்போது அவள் சுயத்தை இழந்துவிடும் துரதிருஷ்டமும் ஏற்பட்டுவிடுகிறது.

வேலையை இழந்து, வறுமையில் வாடி தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவேண்டிய சூழலில் பெண் தன் அன்றாடத் தேவைகளுக்காகவும் ஆணை நாடிச் சென்று பணத்தைப் பெறும் சூழலும் நெருக்கடியும் உருவாகி விடுகின்றன. பெண்களின் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை பாட்டாளித் தோழர்கள் உட்பட. புரட்சிக்குப் பின் சோவியத் ரஷ்யாவில் விபசாரம் பெருமளவிற்குக் குறைந்தது என்றாலும் அதன்பின் ஏற்பட்ட மோசமான பொருளாதார நிலைமை சோவியத் சமூகத்தில் விபசாரத்தை மீண்டும் துளிர்க்கச் செய்து பல பெண்களைப் பாலியாக்கிப் பரிதாபத்துக் குரியவர்களாக்கியது. அதனால் அதை எதிர்த்துப் போராடும் தேவையை அது வலியுறுத்தியது. இவற்றை அலெக்ஸாண்டிரா நுட்பமாக விளக்குகிறார் "சகோதரிகள்' கதையில்.

புரட்சியின்போதும் அதற்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்பும் அதன் மாற்றங்களும் பெண்களின் உணர்வுகளை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியதையும் நெருக்கடி மிகுந்த நேரங்களிலும் பெண்கள் உறுதியோடு தங்கள் லட்சியக் கனவுகளை நிறைவேற்றும் மனவுறுதியையும் அந்தந்த காலகட்டத்தில் பெண் தன்னை விடுவித்துக் கொள்ளும் நிலையையும் இரண்டாவது கதையில் வீச்சுடன் சித்தரிக்கிறார்.

முதல் தலைமுறை ‘மர்ஜாஸ்டிபனோவ்னா' காதல் பேசப்படுகறிது. மர்ஜா 1890களில் பணியாற்றிய கிளர்ச்சி பிரச்சாரவாதி. பிரச்சித்தி பெற்ற அறிவியல் புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர். பொதுக்கல்விக் களத்தில் சோர்வு என்பதையே அறியாமல் பணிபுரிந்த களப்பணியாளர். தாராளமய அரசியல் ஊழியர்களாலும் தலைமறைவு புரட்சியாளர்களின் செயற்பாடுகள் நடப்பதற்கு உதவியதால் அவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டவர். ஆனால் அவருடைய அரசியல் நிலைப்பாடு நரோடினிக்கு ஆதரவாளர் என்ற வகையிலேயே இருந்தது.

தான் விரும்பியபடி ஒரு படைப் பிரிவின் கமாண்டரை மணந்து கொண்டாள். அவரால் அவளுக்கு நிறைவைத் தர இயலாத நிலையில் ‘செர்சி இவானோவிச்'சை சந்திக்கிறாள். அந்தச் சந்திப்பு காதலில் முடிகிறது. அவருக்குப் பிறந்தவள் ஒல்கா. இந்தக் கதை, கடிதத்தின் மூலம் அவள் தோழர்க்குக் கூறுவதாக அமைகிறது.

பாலியல் உறவு குறித்து ஒருவித அறவியல் நிலைப்பாடு கொண்டவர் மர்ஜா. மேலும் காதலிப்பதற்கு உள்ள உரிமை கல்யாணத்தால் பெறப்பட்ட உரிமையைக் காட்டிலும் உயர்வானது என்று கருதுகிறாள். அதனால் கமாண்டரைவிட்டு விலகிக் கொள்கிறாள். கமாண்டரை விட்டு விலகியது அரசுக்கு எதிரானது என்று தாராளவாதிகள் கருதினார்கள். ரஷ்யாவின் கடுமையான எதிர்வினை அடக்கு முறையால் கைது செய்யப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் கூடத் தன் பணியைத் தொடர்ந்து செய்யும் ஆற்றல் பெற்றிருந்தாள்.

ஆனால் எப்பொழுது செர்சி இவானோவை வேறு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தாளோ அப்பொழுதே குழந்தையோடு வெளியேறி விடுகிறாள். எந்தவிதப் புகாரும் அவதூறுமின்றி கடிதம் எழுதிவிட்டுச் சென்றுவிடுகிறாள்.

இரண்டாம் தலைமுறையின் காதல் ‘ஒல்கா செர்சி ஜிவ்னா' பற்றியது. கதை இவள் மூலமாகவே நகர்கிறது. இவள் இளமைக் காலம் அக்காலகட்டத்தில் சட்ட விரோதமான காரியங்களைச் செய்வதிலும் சட்ட விரோதமானவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டும் கழிந்தது. ஒல்கா மார்க்சியத்தைச் சார்ந்திருந்தாள். புரட்சியாளர்களுடன் பணியாற்றும்போது உறுப்பினர் ஒருவரோடு பழகும் வாய்ப்பு நேர்கிறது. இருவருக்கும் திருமணம் என்ற நிறுவனத்தில் நம்பிக்கையில்லாததால் சேர்ந்து வாழ முடிவு செய்கின்றனர். தோழர் பெயர் கான்ஸ்டாண்டின். இருவரும் புரட்சியில் பங்கு பெற்றவர்கள். அதனால் கைது செய்யப்படுவதோடு நாடும் கடத்தப்படுகிறார்கள். தலைமறைவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.

ஒல்கா மட்டும் தலைமறைவு வாழ்க்கையினின்றும் புரட்சிப் பணிகளை மேற்கொள்ள ‘எம்' என்ற பொறியாளர் ஒருவர் பாதுகாப்பில் இருந்துகொண்டு தன் பணிகளைத் தொடர்கிறாள்.

‘எம்'முடன் அவளுக்கான புதிய உறவு ஏற்படுகிறது. ‘எம்' திருமணமானவர் என்பதையறிந்த பின்னும் அவர்களின் உறவு தொடர்கிறது. அந்த உறவில் பிறந்தவளே ‘செனியா'.

இருவரிடமும் அவள் காதல் கொண்டதாகக் தன் தாயிடம் கூறுகிறாள். இருவரில் யாரையேனும் ஒருவரைத் தேர்ந்தெடுக்குபடி அறிவுரை கூறும் தாயிடம் கணவர், நண்பர் இருவரையுமே தன்னால்விட இயலாது என்றும் இருவரையும் தான் காதலிப்பதாகவும் கூறுகிறாள்.

புரட்சியின்போது ஏற்பட்ட மாறுதல்களால் இருவருமே தாங்கள் தங்கள் போக்கினை மாற்றிக் கொண்டு திசைமாறிப் போனபோது எந்த இருவரையும் விட்டுவிலக முடியாதென நினைத்தாளோ அந்த இருவரையும் முற்றுமாக விலக்கி வாழும் மனநிலைக்கு ஆளாகிறாள்.

மிகுந்த துயரங்களை அனுபவிக்கும் நிலையிலும் முரண்பட்ட உணர்வுகளால் தாக்கப்பட்ட நேரத்திலும் நாடு கடத்தப்பட்ட சமயத்திலும் புரட்சிப் பணியைத் தொடர்ந்து ஈடுபாட்டோடு செய்துவருகிறாள்.

பின்னர் பாட்டாளி வர்க்க தோழர் ‘ஆண்டிரி ஜாப் கோ'வுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாகவே வாழ்கின்றனர். செனியாவும் அவர்களுடன் தங்கித் தன் கட்சிப் பணிகளைத் தொடர்கிறாள். ‘செனியா'வின் காதல் மூன்றாம் தலைமுறை காதலாகிறது. செனியா எந்தவித முன் அபிப்பிராயமும் இன்றி தடையின்றி வளர்கிறாள். வாழ்க்கையைத் தன் சொந்தக் கண்களால் அவளே பார்க்கிறாள். அவள் அப்போதுதான் பிறந்த சத்தியத்தைப் போன்றவள். கட்சிப் பணியை உறுதியாகவும் களைப்பின்றியும் ரொம்பவும் அர்ப்பணிப்புடன் செய்கிறாள். செழுமையாக இருக்கும் இயக்கத்திற்குக் கிடைத்த விலைமதிக்க முடியாத சொத்து எனவும் கணிக்கப்படுகிறாள். அவள் தாய் தந்த மதிப்பீடு இது.

ஒருநாள் செனியா, தான் கருவுற்றிருப்பதைத் தாயிடம் கூறி கட்சிப் பணிகள் நிறைய இருப்பதால் குழந்தையை இப்போது பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறி, கருக்கலைப்பிற்குத் தாயின் ஆலோசனையை வேண்டுகிறாள்.

செய்தியைக் கேட்ட தாய் ஒல்கா அதிர்ச்சியடைந்து யார் காரணம்? என வினவ, தெரியாது என்று பதில் அளிக்கிறாள். மகளின் இந்தப் பதில் தாயைப் பெரிதும் துயரத்திலும் குழப்பத்திலும் ஆழ்த்துகிறது.

தாயின் தோழரான ஆண்டிரிக்தான் காரணம் என்பதை ஊகித்தறிந்து மகளிடம் கேட்டபோது, இருக்கலாம்; வேறொரு தோழராகவும் இருக்கலாம் என்று எந்தவித நெருடலும் இல்லாமல் கூறும் மகளை எண்ணி பெருத்த வேதனையடைகிறாள். மகள் எப்படி விளக்கினாலும் தாய்க்குப் புரிந்து கொள்ள முடியாத நிலை. பெரிதும் மனநெருக்கடிக்கு ஆளாகிறாள்.

செனியாவைப் பொருத்தவரை உடல்உறவு பெரிய விஷயமாக இல்லை. பழகுகிற தோழரிடம் சில சமயம் நேரும் நெருக்கத்தால் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியாகவே அவள் அதை எடுத்துக் கொள்கிறாள். காதலித்த பின்தான் இப்படியயாரு உறவு ஏற்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை. புரட்சிக் காலகட்டத்தில் பணிகளின் நெருக்கடியில் ஒருவரைக் காதலிப்பது என்பதுகூட இயலாத நிலைதான். பழகும் தோழரோடு எப்போதாவது அது நிகழ்ந்துவிடும். அதற்குத் தனியான மதிப்பில்லை; அது தவறுமில்லை என வாதிக்கிறாள். ஏனென்றால் அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட இருவரையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்துவதில்லை. யாருக்கும் எந்த பாதிப்புமில்லை என்கிறாள். தவிர, ஒரு மகன் இப்படி நடந்து கொண்டால் பொருட்படுத்தாத சமூகமோ தாயோ ஒரு பெண் என்பதாலேயே வேறு விதமான பார்வையுடன் எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியமில்லை. யாராக இருந்தாலும் மனிதப் பிறவிதானே என்று கேட்கும் புதிய தலைமுறையின் புதிய போக்கா இது? என தாய் குழப்பத்திற்குள் மூழ்குகிறாள்.

செனியா காதலுக்குத் தரும் விளக்கமும் தன் தாயை அவள் எந்த அளவுக்குக் காதலிக்கிறாள் என்பதைக் கூறும் போதும் தாய் மகிழ்ச்சியாக இருக்க அவள் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கும் நிலையையும் எடுத்துரைக்கும் போது அவளைப் பற்றிய உயர்வான எண்ணமே வாசிப்போர் மனதில் நிறைகிறது. காதல் என்பது ஓர் ஆண் பெண் சார்ந்தது என்ற கருத்தாக்கம் மிக ஆழமாகக் காலங்காலமாகச் சமூகத்தில் வேரோடியுள்ளது. ஆனால் காதல் தாயிடமும் காணமுடியும் என்று கூறும் செனியாவின் வார்த்தையில் காதல் என்பது தன்னை அடையாளப் படுத்திய தாயிடம் ஏற்படுகிறது என்பதுதான் உண்மை.

நாடு எதுவாயினும் பண்பாடு எப்படிப்பட்டதாயினும் தாயாக இருக்கும் பெண்ணின் உணர்வுகளில் பெருத்த வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. செனியாவும் தாயாகியிருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாளோ என்னவோ?

அலெக்ஸாண்டிரியா பெண் விடுதலைக்காக இடையறாது குரல் கொடுத்தவர்; அந்தக் குரல் ஓங்கி ஒலித்த காலகட்டத்தில் வேறு யாரும் அவ்வளவு வேகத்தோடும் முழுவீச்சோடும் பெண்களுக்காகப் போராடியவர்கள் இல்லையயனலாம்; சமூக மாற்றத்திற்கும் தனிப்பட்ட உறவுக்கும் இடையே என்ன உறவு என்பதைப் பற்றியும் ஆராய்ந்து 1970களில் ஏற்பட்ட கருத்தான Personal is Politics என்ற முடிவுக்கு 1920களிலேயே வந்தவர் என்பது நமக்கு வியப்பே அளிக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வு என்பது வர்க்க வேறுபாட்டில் மட்டுமின்றி பாலியல் உறவுகளிலும் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

அலெக்ஸாண்டிரிராவின் படைப்புகளில் இடம்பெறும் பெண் பாத்திரங்கள் துணிச்சலும் செயல்திறனும் உடையவர்கள். எத்தகைய சிக்கலான சூழ்நிலையிலும் தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்காத - சமரசம் செய்துகொள்ளாத மனவுறுதி பெற்றவர்களாகவும் சுயமாக முடிவெடுக்கும் ஆற்றல் படைத்தவர்களாகவும் உள்ளனர். தங்கள் உணர்வுகளைச் சமூக அமைப்பின் கருத்தாக்கங்களுக்கு முற்றும் மாறானதாக இருந்த போதிலும் எதையும் மறைக்காமல் தங்களுக்கு உண்மையுடையவர்களாகவே உள்ளனர்.

அவர் படைப்புகளில் இடம்பெறும் பாத்திரங்களைக் குறிப்பாகப் பெண்பாத்திரங்களை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள நூலின் முதலில் இடம்பெற்றுள்ள ஆசிரியரின் வாழ்க்கைக் குறிப்பு பெரிதும் உதவும். மொழிபெயர்ப்பு வாசிப்போர்க்குத் தடையாக இல்லை.

பெண் விடுதலையை விரும்புவோரும் அதற்காகச் செயல்படுவோரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.

Pin It