எளிய உணர்வுகளிலிருந்து ஆகச்சிக்கலான பயங்கரங்கள் வரை உடனடியாகப் பதிவாகவும் பகிர்ந்துகொள்ளவும் ஏற்றது மொழியால் ஆன கவிதை வடிவம். மொழியின் உருவாக்கமும் விரிவும் ஒருவகையான கவிதைச் செயல்பாட்டால் சாத்தியப்பட்டதாக உள்ளது. ஆனாலும் ஒரு கவிதை என்பது ஏற்கனவே உள்ள கவிதைகளுக்குள் மறைந்து போகாமல் வெளித்தெரியும்படி அமைவது என்பது தனித்த அக்கவிதையை மட்டுமே சார்ந்த ஒரு செயலல்ல. அது காலம், சமூகப் பின்னணி, வரலாறு, பொதுநினைவு என்பவற்றால் தீர்மானிக்கப்படும் ஒன்று. ஏதோ ஒரு சமூக நினைவுத் தளத்தில் பெருங் கவிதையாக உள்ள ஒன்று மற்றொரு சமூக நினைவுத் தளத்தில் வெறும் மொழிப்பதிவாகத் தோற்றம் தரலாம்.

ஒரே மொழியில்கூட ஒரு குறிப்பிட்ட மன அமைப்பை ஏற்ற குழுவினர் கொண்டாடிக் களிக்கும் ஒரு கவிதை வேறு வகை மனக்களம் கொண்ட குழுவினருக்கு எரிச்சலும் சலிப்பும் தரும் மொழிப்பகட்டாகத் தோன்றலாம். இவற்றிற்கு எத்தனையோ காரணங்கள் உள்ளன, என்றாலும் கவிதை உணர்வு, கவிதைப்புலன் என்பது ஒன்றேபோலானது அல்ல என்பதுதான் முதல் காரணம். இன்னும் உள்ள காரணங்கள் ஏதோ மர்மமானவை அல்ல, இழை இழையாய் எடுத்துப் பேசினால், இது இதுதான் என்று விளக்கப்படக் கூடியவையே. இந்தவகை விளக்கங்களைத் தேடி நாம் செல்லும்போது இதுபோல் ஒரு குறிப்பிட்ட கவிஞ்ரின் கவிதைக்கும் அவை உருவான பின்னணிக்கும் உள்ள உறவுகளைப் பற்றியெல்லாம் பேச வேண்டியுள்ளது. ஒருவர் தான் கவிதை எழுத நேர்ந்ததன் பின்னணியையும் தான் கவிதைகளாக உணர்பவற்றைப் பற்றியும் பேசுவது என்பது தன்னைப் பற்றியும் தான் உணர்பவை மற்றும் கனவு காண்பவை பற்றியும் பேசுவதாக நீண்டுச் செல்கிறது. இந்த நீட்சி கவிதை களுக்கு வெளியே இருந்து கவிதைகளுக் குள்ளான நிறங்களையும், சலனங்களையும் திரட்டி வடிவமைக்கும் ஒரு செயலின் வடிவமாகவே அமைந்து விடுகிறது.

மலையாளத்தில் தன் கவிதைகளை எழுதும் கவிஞர் அனிதா தம்பி தன்னைப்பற்றியும் தன் கவிதைகளைப் பற்றியும் பேசுவதென்பது ஒரு காலக் கட்டத்தின் கவிதை மனம் மற்றும் கவிதை உணர்வு பற்றிப் பேசுவதாகவே நமக்குப் புரிய வருகிறது. பெண்ணாக இருந்து எழுதுதல் என்பது ஒவ்வொரு பண்பாட்டு, மொழித் தளத்திலும் ஒவ்வொரு வகையாக அமைந்துள்ளது என்பதும்கூடத் தெரிய வருகிறது. ஒரு காலக்கட்டத்தில் பெண்ணாக இருந்து பெண்ணுக்காகப் பேசிய நிலையை அடைந்து பெண்ணாகவே பேசி பண்பாட்டின் மறுக்கமுடியாதப் பகுதியாக மாறிவந்திருக்கும் ஒரு இலக்கிய நிலை மாற்றத்தை அனிதா தம்பியின் நினைவுகள் நமக்குப் புலப்படுத்துகின்றன.

மலையாள இலக்கியத்தின் பெரும் பகுதியை அடைத்துக்கொண்டு ஆண்கள் இருந்தபோதும் பெண்கள் தமது இருப்பையும் இயக்கத்தையும் தொடர்ந்து இலக்கியத்தில் பதிந்தபடியே வந்துள்ளனர் என்று கூறும் அனிதா தம்பி இப்போது பெண்கள் எதையும் எழுதவும், எதையும் வெளிப்படுத்தவும் தயங்க வேண்டிய சூழல் மலையாளத்தில் இல்லை என்பதையும் நினைவுபடுத்துகிறார்.

பெண்ணாக இருத்தல் என்பது ஒரு வகையில் மரபான விதிகளால் நிர்ணயிக்கப்பட்டாலும் விடுபட்ட, ஒடுக்குமுறை மறுத்த பெண் உணர்வு என்பது மலையாளத்தின் பண்பாட்டு வடிவங்களுக்குள்ளேயே பெண்களுக்குச் சாத்தியப்படும் ஒரு சூழல், கடந்த ஒரு நூற்றாண்டாக உருவாகி வந்திருக்கிறது என்பதை அவருடைய பேச்சிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அனிதா தன் கவிதைகளை எழுதுவதும் பிற கவிதைகளை உணர்வதும் பெண் என்ற நிலையிலிருந்து தொடங்கினாலும் மொழி, பண்பாடு, இயற்கை என்பவற்றூடாக தனது அடையாளங்கள் கொள்ளும் விரிவு தன்னிடம் முரண்பாடுகளைத் தோற்று விக்கவில்லை என்பதை விளக்க தனது குடும்பத்தின் அரசியல் பின்னணியைக் காரணமாகக் காட்டுகிறார். தற்போது மலையாளத்தில் எழுதிவரும் பல பெண் கவிஞர்களுக்கும் தெளிவான பல அரசியல் பார்வைகளும் இலக்கியப் பார்வைகளும் உள்ளன என்றும் அவற்றிற்குக் கேரளச் சமூகத்தில் ஏற்பட்ட பல சமூகச் சீர்த்திருத்தங்கள், இயக்கங்கள், அரசியல் போராட்டங்கள், இடதுசாரி அரசியல் தாக்கங்கள் என்பவை காரணமாக அமைந்தன என்பது அவரது கருத்து.

மலையாள இலக்கிய, கருத்துலக விவாதங்களில் பெண்களின் இடமும் பங்கும் தவிர்க்க முடியாததாக இருந்தாலும் இன்னும் தேவையான அளவுக்குப் பெருக வேண்டும் என்பது அவரது எண்ணம். அவர் தன்னைப் பற்றியும் தனது கவிதைகள் மற்றும் மலையாளத்தின் பிற படைப்பு இயக்கங்கள் பற்றியும் பேசியவற்றின் ஊடாக தற்கால மலையால இலக்கியத்தின் ஒரு குறிப்பிட்ட மன அமைப்பைப் புரிந்துகொள்ள முடிகிறது.

கேரள அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் கடுமையான பல மோதல்கள் உருவான காலமான அறுபதுகள் இவரது தொடக்க நினைவுகளின் பின்னணி. இவரது தந்தை கம்யூணிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதன் செயல்பாட்டில் பங்கு கொண்டவர். கட்சியின் செயல்பாடுகள் குடும்பத்தின் உள்ளும் வெளியுமான சூழலை உருவாக்கித் தந்தது. தந்தையின் இயல்பான எளிய அன்பு இவரது குழந்தைப் பருவ பண்புகளில் உரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உழைப்பு பற்றிய மரியாதையும் உழைப்பவர்கள் மீதான மரியாதையும் குடும்பத்திற்குள் பழக்கப் பட்டது. ஆண் ஆதிக்கத்தை நியாயப் படுத்தும் மரபான குடும்ப அமைப்பு இல்லாததால் பெண்ணாக சுதந்திரமாக இருப்பதற்கு ஏற்ற சூழல் இவருக்கு இருந்தது. அப்பா இவரை தனது சுய அடையாளத்துடன் வளர அனுமதித்து ஊக்கப்படுத்தியது முக்கியமானதாக இருந்தது.

அரசியல், சமூக, கலை இலக்கியங்கள் பற்றிய விவாதத்தில் இவரை ஈடுபடுத்தி வேறுபட்ட ஒரு மன அமைப்புக்கு அவரது தந்தை வழிவகுத்தது அனிதாவுக்கு வசதியான தொடக்கத்தை அமைத்துத்தந்தது. மூன்று பெண்பிள்ளைகளைக் கொண்ட அவரது வீடு நிறைய நண்பர்களையும் தோழர்களையும் கொண்டிருந்தது. படிப்பது விருப்பமானதாக, மதிப்பிற்குரியதாக அவருக்கு அமைந்திருந்தது. கேரளத்தின் கல்வியறிவும், இடதுசாரி இயக்கங்களின் செயல்பாடும் வேறுபட்ட நவீன பெண் அடையாளத்தைத் தேர்ந்தெடுக்க களத்தை அமைத்துத் தந்திருந்தது என்று அவர் தனது வளர்பருவப் பின்னணியை விளக்கும்போது தொடர்ந்து குறிப்பிடுவது கவனத்திற்கு உரியதாக இருக்கிறது.

இவரது முதல் கவிதை நினைவு குமரன் ஆசானிடம் தொடங்கியதாகக் குறிப்பிடும் அனிதா, வயலார், வள்ளத்தோல் என கவிதைகளைப் படிக்கத் தொடங்கி எழுத்து, கவிதை மீதான விருப்பத்தை விரிவுபடுத்திக் கொண்டதாகக் குறிப்பிடுகிறார். நாடகம், திரைப்படம், இசை என்பவற்றின் மீதும் ஈடுபாடு விரிவடைந்தபோது அவரது கவிதை உணர்வின் வடிவமைப்பு அடையாளம் காணப்படுகிறது. இவர் தனது கல்லூரி நாட்களில் கவிதை எழுதி வெளியிடத் தொடங்கினார். ஏற்கனவே எழுதியவர்களில் சுகதகுமாரியின் உணர்ச்சி சார்ந்த வெளிப்பாடுகள் இவருக்குப் பிடித்ததாக இருந்தது. பெண் கவிஞர்களின் வெளிப்பாடுகள் மேலும் விரிவடைந்தபோது வேறுபட்ட புதிய வடிவங்கள் அறிமுக மாகிறது. பாலாமணியம்மா சமயம் சார்ந்த உணர்வுகளைக் கவிதையாக்கியதும், சுகதகுமாரி =கிருஷ்ணன்+ என்ற உருவகத்தின் மூலம் உணர்த்த நினைத்ததையும் தாண்டி பல கவிஞர்கள் எழுதவந்த காலக்கட்டம் இவருடையது. விஜயலட்சுமி, வி. என். கிரிஜா போன்றவர்களிடம் இவர் தனித்த பெண் மொழியைக் காண்கிறார். கமலாதாஸ் எழுதத் தொடங்கியபோது சில கவிதைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும் இப்போது அதிர்ச்சியையோ எதிர்ப்பையோ ஏற்படுத்தும் பெண் கவிதைகள் இல்லை என்கிறார். வெளிப்பாடுகளில் இப்போது தடை இல்லை என்பது பெண்களின் முழு விடுதலையைக் குறிக்கவில்லை என்றாலும் இலக்கியத்தில் அது முக்கியத்துவம் உடையதாகிறது.

எழுத்து என்ற மனநிலையும் நவீனத்துவ மனநிலையும் தற்போது பிளவுபட்ட ஒரு நிலையை அடைந்திருக்கிறது. நிலவுடைமை சார்ந்த சமூக அமைப்பில், சாதிகளின் இருப்பு கடுமையானதாக இருக்கும் ஒரு சமூகத்தில் எழுதும் ஒருவருக்கு மனமுரண்பாடுகள் ஏற்படும் என்பதை இவர் தனது அனுபவத்தில் கண்டிருக்கிறார். ஒரே சமயத்தில் சமயச் சடங்குகளை கவனிப்பதும் அவற்றில் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதும் நேர்கிறது. நம்பிக்கை மற்றும் பகுத்தறிவிற்கு இடையே மோதல் ஏற்படுகின்றன. பண்பாட்டிற்கும் புதிய நம்பிக்கைகளுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகின்றன. இவற்றையெல்லாம் நவீன கவிதை மனம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. கேரளத்தின் கிராமிய, சடங்குகள் சார்ந்த வாழ்வும் கலை வடிவங்களும் தொடர்ந்து இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதே சமயம் பழமையானவற்றின் பாரத்தை மறுக்கவும் நேர்கிறது. சமூகம் தனி மனிதருக்கு இடையிலான முரண் வடிவங்களைக் கண்டடைய வேண்டியிருக்கிறது இலக்கிய மரபுகளில் புதிய புதிய வடிவங்களைக் கண்டடைய வேண்டியிருக்கிறது எனும் அனிதா தம்பி பஷீரின் எழுத்துக்களைப் பற்றி நேசத்துடன் குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். பஷீருடைய மொழியும் கதையும் உயர்ந்த ஒரு மனநிலையை ஏற்படுத்தக்கூடியவை என்கிறார்.

பெண்மைக்கென்று தனித்த நினைவும் மொழியும் இருக்கிறது. அவற்றையும் சேர்த்தே கலாச்சாரம் அமைகிறது. எழுத்தில் அது தனித்து அடையாளம் காணப்படுகிறது என்னும் அனிதாவின் கவிதை உணர்வுகள் கேரள நிலம் மற்றும் இயற்கை அழகுகளில் பிணைந்து கிடக்கிறது. சுற்றுச்சூழல் பற்றிய உணர்வு, இயற்கையுடன் மனம் கொள்ளும் உறவு என்பவை கவிதைக்கு நெருக்கமாக உள்ளதாக உணர்கிறார் இவர். அதே சமயம் பெண்ணாக இருப்பதில் ஒருவித அடைபட்ட போதாமைநிலை ஏனோ தொடர்ந்து இருந்து கொண்டிருப்பதையும் குறிப்பிடுகிறார். வீடு அதைச் சூழ்ந்த வெளிகளில் பெண்களின் தனிமை பதிந்து போனதாகத் தோன்றுவது பற்றிக் குறிப்பிடுகிறார். இயற்பியல், வானியல் போன்றவற்றில் ஏற்பட்ட ஈடுபாடு சூழலில் ஒருவித மிஸ்டிசிசம் இருந்து கொண்டே இருப்பதான நினைவை இவருக்கு ஏற்படுத்துகிறது.

அதீத மனநிலை, அதிசய உணர்வு என்பவை சமயம் கடந்த ஒருவித ஈடுபாட்டை இவருக்குள் ஏற்படுத்துகின்றன. அக்கமாதேவி போன்றவர்களின் மதம் சார்ந்த கவிதை மற்றும் அனுபவ நிலைகள் உணரத்தக்கவை என்கிறார். அதே சமயம் தனது கவிதை வலியிலிருந்தோ துன்பத்திலிருந்தோ பிறக்கவில்லை என்கிறார். கேரளத்தின் நவீனத்துவம் ஏற்கனவே பல கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறது, குறிப்பாக =சுயமுரண்+ என்பது தற்போது முக்கியக் கேள்வியாக நிற்கிறது எனும் அனிதா தான் கவிதைகளை எழுதியே ஆகவேண்டும் என்ற மனநிலைக்குத் தள்ளப்படாததால் எப்பொழுதாவது ஒருமுறை எழுதுவதே போதுமானதாக இருக்கிறது என்கிறார். இவரது இயற்கை சார்ந்த உணர்வும் அப்பாலை சார்ந்த உணர்வும் இணையும் இடத்தில் தனித்த ஒரு அமைதி ஏற்படுவதையும், அது பலவிதமான கற்பனைகளைத் தனக்குள் ஏற்படுத்து வதையும் குறிப்பிடுகிறார்.

தற்போதைய மலையாள இலக்கியத்தில் பல பெண் விமர்சகர்களும் ஆய்வாளர்களும் பெண்ணியப் பார்வையுடனும் அரசியல் பார்வைகளுடனும் இயங்கி வருவது இன்னும் பலரை எழுத வைப்பதற்கு ஏற்ற சூழலாக உள்ளது. அதே சமயம் தனித்த பெண் எழுத்தாக இன்றி பொது இலக்கியத்திற்குள்ளேயே இவற்றிற்கான இடம் உருவாக்கப் பட்டிருப்பதாக இவர் நம்புகிறார். இது மலையாள இலக்கியம் தமிழிலிருந்து வேறுபடும் இடமாக இவருக்குத் தோன்றுகிறது. முற்றமடிக்கும்போள்+ தொகுதிமூலம் மலையாளக் கவிதையில் கவனம் பெற்ற அனிதா தம்பி கவிதைகளின் காட்சித் தன்மை மீது அதிக ஈடுபாடு கொண்டி ருப்பதாகக் குறிப்பிடுகிறார். வேறு உலகம் பற்றிய கற்பனை தனக்கு மெல்லிய ஆறுதல் தருவதாக இருக்கிறது, இது யதார்த்தத்திலிருந்து நினைவை வெளியேற்றும் உத்தியாக தனக்குப் பயன்படுகிறது என்றும் குறிப்பிடுகிறார்.

இலக்கியத்தில் தடைகளோ, கட்டுப் பாடுகளோ இருப்பது என்பது ஒரு சமூகத்தின் அடிமை மனநிலையின் வெளிப்பாடு என்று நம்பும் அனிதா குறைவாக எழுதி, நிறைய வாசிக்கும் வகையைச் சார்ந்தவராக இருக்க விரும்புவதாகச் சொல்கிறார். அதே சமயம் கேரளச் சூழலில்கூட ஒரு பெண் முழு நேர எழுத்தாளராக இருப்பது முக்கியத்துவம் உடையதாகவோ தேவையானதாகவோ இன்னும் மதித்து ஏற்றுக்கொள்ளப்படாத நிலையே உள்ளது என்று கசப்போடு குறிப்பிட்டார்.

(அனிதா தம்பியினுடனான ஓர் உரையாடல் 31.12.2005 - அன்று அவரது திருவனந்தபுரம் இல்லத்தில் நிகழ்ந்தது. சுகுமாரன் மற்றும் மாலதி மைத்ரி உடனிருந்தனர்.)
அனிதா தம்பி

வேதியியல் பொறியாளரான இவர், திருவனந்தபுரத்தில் இந்துஸ்தான் லாட்டக்ஸில் தரக் கட்டுப்பாட்டு மேலாளராகப் பணிபுரிகிறார். =முற்றமடிக்கும் போள்+ (வாசலை பெருக்கும்போது) என்ற கவிதைத் தொகுப்பு வெளி வந்துள்ளது.


தெருவில் மரம்

நகரத்தில்
வண்டிக்காக
அலுத்தபோது கைகள் வீசி
சட்டென்று நான்
மரமாக மாறினேன்.

தெருவருகில்
ஒரு நொடியில்
ஒரு நர்த்தகி மரம்.

வெயில் ஊசிகளேற்று
விரல்கள்தோறும்
நிறைந்து விரிந்து
நான் அடிமுடி உடலை அறிந்தேன்.

தெருவுக்கும் வானத்துக்குமாக
படர்ந்து சிரித்து
அகம்புறம் உயிரை அறிந்தேன்.

பக்கத்திலொரு கூட்டாளி மரம்
சீழ்க்கையடித்ததுஙி
'நம்மால் ஒரு காற்றுக்குக்
கிளையசைக்க முடியுமோ?'

இறந்த வீட்டில்
சின்னக்குழந்தைகள் போல
எனது நிழற் சல்லடையில்
வண்டிக்காக் காத்திருக்கும்
கூட்டம் அதிகரிக்கிறது.

என் உடல் அறைகளில்
கட்டெறும்புகள்
பாழ் மரங்கொத்திகள்
பாம்புக்குட்டிகள்
வேர்களில் சாய்ந்துகொண்டு
ஒரு பாட்டுக்காரச் சிறுவன்.

தெரு
எனக்குக் கீழே
நசுங்கிய நரம்பாகப்
புரண்டுகொண்டிருக்கிறது.

ஆயிரம் விரல்களுள்ள
ஒரு காற்றுவந்து
என் இலைகளை உலுக்கிப்போனது.

தெருவைக் குறுக்காகக் கடந்த
ஒரு சிறுமி
பாய்ந்துவந்த வாகனம்மோதிச்
சிதறிப்போனாள்.

ஒரு சிறுகிளையை உயர்த்தினால்
இரண்டு மூன்று மேகங்களைத்
தொடலாமென்று தோன்றியது

என்னை அடையாளம் புரியாமல்
நான்கைந்து தோழர்கள்
அருகிலேயே நடந்துபோனார்கள்.

வெயில் என் உடலினூடே
வழிந்து
மண்ணில் வடிந்தது.


எழுத்து

குளிக்கும்போது
சட்டென்று
நீர் நின்றது

துருவேறிய குழாய்
சீழ்க்கையொலித்து
நின்றது.

நீர் வார்த்து
நிர்வாணமாகும்
உடல் சிலிர்க்கும்போது

ஜன்னல் வழியே
விரல் நீட்டியது
நடுங்கும் காற்று

ஒரு நொடி
குளிர்வதுபோல்
தோன்றியதெனக்கு

ஈரத்தின்
உடையாடை
பறந்து போயிற்று

பித்த வேனில்
சுற்றி வெட்கம்
மறந்து போயிற்று

மரம் பெய்வதுபோல
முடியிழைகள் மட்டும்
உடலின்மேல்
நினைவிலிருந்து எழுதுகின்றன

தண்ணீரால்
இரண்டு மூன்று
வரிகள் மட்டும்.

தமிழில் - சுகுமாரன்

Pin It