திசைகளைப் பருகியவள்

பூர்வ குகைச்சிற்பம் உயிர்ப்பித்து
தனதொத்தவ ரெவருமின்றி
வெறிச்சோடிக் கிடக்கும் கானகத்தை
வீதிக்கு வெளியினின்று பார்க்கிறாள்

பொசுக்குந் தாகச்சுமையால்
பெய்ந்நீர் பெருகும் நீரெனப் பருக
உலகம் அவளுக்கு
ஒரு குவளைத் தேநீரானது

புற்கடளர்ந்து செழித்தோங்கிய
கிணற்றின் நுனியில்
உயிர்த்தலை ருசிக்கும்
மிருக வாழ்வின் மீதான
புணர்வுகளை உதறி
பழுதுற்ற புதைகுழியிலிருந்து
மிகு தாமதமாகவும் சுலபமாகவும்
தன்னைப் பிய்த்தெடுத்துக் கொண்டு
புறப்படுகிறார்கள்
வெண்ணிற இளவரசிகள்

சதைகளால் பிணைத்திருந்த கொடுவாள்கள்
சடசடத்து அவர்களை சீறி வர
கானகப் பெண்ணின்
நாள்கட்டிய முலைப்பாலொரு
அருவியெனப் பெருகிப் பாய்கிறது.

நெடுநாளைய சோம்பல் முறித்து
ஆனந்தப் புனலாடும் அக்குகைப்பெண்ணை
அரவ கிரகங்கள்
கரைகளென சுவீகரித்துக் கொண்டாலும்

வேட்டையாடும் மொழியறிவாள்.


அக்காவைப் போலொரு கொலை செய்தாள்


நீர்ம வாழ்வோலைகள் நிறைந்த
நகரத் தெருக்களில்
முட்டைகளை அடைக்காப்பதை விட
அற்புதமானது தற்கொலை செய்து கொள்வது

எனினும் மறைவிருட்டில் பொறித்தவற்றை
யாருமற்ற வெற்றிரவில்
கசடுபூத்துத் தரையிறங்கும் வானத்தில்
பறக்க விட பழகிவிட்டாள்

மடித்தழைய தழைய கொண்டுவரும் அளவற்றவை
விரைவிலொரு வானூர்திபோல் இறக்கப்படுவது
யாவர்க்கும் ஆச்சர்யம்தான்

விடியற்காலை
வீடுசூழ் மரத்திலிருந்த சிறகோசைக்குத்
துயில்களைந்த இவளோ
மிகப்பிடித்த கௌதாரி முட்டையொன்றைத்
தவறவிட்டபோது கண்ணுற்றாள்
எரவாணத்தில் அழுதிருந்த அக்காவை.
Pin It