இல.கணேசன்: இராமன், இலக்குவன், சீதை மூவரும்தான் வட நாட்டில் இருந்து வந்தார்கள். சீதை காணாமல் போய்விட்டாள். மீதமிருந்த இராமன், இலக்குவனைத்தவிர, பாலம் கட்டிய அனைவரும் உள்ளூர்க்காரர்கள்தான். எனவே, அந்தப் பாலத்தை நாம் திராவிடர் பாலம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதற்காகவாவது அதனை நாம் இடிக்காமல் இருக்கலாம் இல்லையா?

சுபவீ : அது இராமர் பாலமா, திராவிடர் பாலமா என்பதன்று சிக்கல். அது பாலமா, மணல் திட்டா என்பதுதான் விவாதப்பொருள்.

- நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதத்தில்.

மாற்றுப் பாதையில் மீண்டும் சேதுக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருக்கிறார். அதனையட்டி, தமிழ்நாட்டிற்கே வந்து இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனோடு இணைந்து, ஹெலிகாப்டரில் பறந்து நான்காம் வழிப் பாதையைப் பார்வையிட்டுச் சென்றிருக்கிறார்.

ponradhakrishnan and gadkari

பா.ஜ.க.வின் முந்தைய ஆட்சிக் காலத்தில்தான், இத்திட்டத்திற்கான முதல் அனுமதி வழங்கப்பட்டது. அன்று, அமைச்சர்களாக இருந்த முரளிமனோகர் ஜோஷி, கோயல், திருநாவுக்கரசர் ஆகியோர் கையொப்பமிட்டே திட்டம் அறிவிக்கப்பட்டது-. ஆட்சி மாறிய பிறகு பா.ஜ.க. தன் நிலையையும் மாற்றிக் கொண்டது-. ஆறாவது வழிப்பாதையில் இராமர் பாலம் இருப்பதால், அதனை இடிக்கக் கூடாது என்றும், அது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையை இடிப்பதற்குச் சமம் என்றும் கூறத்தொடங்கியது-. 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், சேதுக்கால்வாய்த் திட்டத்தை வலியுறுத்திய அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வின் வழியை அப்படியே பின்பற்றி, பிறகு தன் நிலையை நேர்எதிராக மாற்றிக் கொண்டது. அது இராமர் பாலம்தான் என்று பெரியார், அண்ணா வழிவந்ததாய்ச் சொல்லிக்கொள்ளும் அ.தி-.மு.க.வும் நம்புகிறதாம்.

17 லட்சத்து 25ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமரால் அப்பாலம் கட்டப்பட்டதாக பா.ஜ.க. சொல்கிறது. அறிவியலின்படி, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, புழு, பூச்சி, அமீபா கூடத் தோன்றவில்லை. உலக வரலாற்றில் முதன் முதலாகக் கட்டப்பட்ட பாலம், எகிப்து நாட்டில் நைல் நதிக்கரையில் உள்ள பாலம்தான். அது கி.மு.2650இல் கட்டப்பட்டது. ஆனால் இவர்களோ லட்சக்கணக்கில் கணக்குச் சொல்கிறார்கள். கேட்டால், அது தங்கள் நம்பிக்கை என்கிறார்கள். யாருடைய நம்பிக்கையிலும் நாம் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால், இப்படிப்பட்ட மத நம்பிக்கைகள், ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் குறுக்கிட அனுமதிக்க முடியாது என்பதையே உறுதிபடச் சொல்கிறோம்.

இராமர் பாலத்தைக் கொண்டுவந்து குறுக்கே நிறுத்தியவர்கள், இப்போது மீண்டும் மாற்றுப்பாதையில் திட்டத்தை நிறைவேற்றப்போவதாகச் சொல்லுவது, நம்புகிறாற்போல இல்லை. நாக்பூரில் இருக்கும் ‘நீரி’ (NEERI) என்னும் அமைப்பு, சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத பாதை என்று 6ஆவது வழியைத்தான், ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது இவர்கள் புதிதாக ஏழாவது பாதை எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே மறுக்கப்பட்ட, நான்காவது பாதையைத்தான் இப்போது, மீண்டும் பரிந்துரைக்கின்றனர்.

8 மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியை, 12 மீட்டராக ஆழப்படுத்துவதன் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு வழிவகுப்பதுதான் சேதுக்கால்வாய்த் திட்டம். ஏறத்தாழ, 152 கடல் மைல் தொலைவிற்கு இத்திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஏற்கனவே, 78 கடல் மைல் நீளம் வேலைகள் முடிந்துள்ளன. மொத்தம் 2,427 கோடி ரூபாய்த் திட்டத்தில் தொடங்கப்பட்ட பணி இது. திட்டத் தொகையில் பாதி, ஏற்கனவே செலவாகிவிட்டது. மீண்டும் புதிய பாதையில் வேலையைத் தொடங்கினால் செலவழித்த பணம் என்னாவது?- புதிய திட்டத்திற்கு மேலும் எத்தனை கோடி ரூபாய் செலவாகும்?

நான்காவது வழிப்பாதை என்பது 168 கடல்மைல் நீளமுடையது. பவளப் பாறைகளுக்கும், பாம்பன் பாலத்திற்கும் அந்தப் பாதையினால் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் கூறுகின்றனர். தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள 21 தீவுகளைச் சுற்றி, கடல் ஆழமற்ற பகுதிகளில் பவளப்பாறைகள் உள்ளன. அப்பகுதியை கடல்வாழ் உயிரினக் காப்புப் பகுதி (Bio-sphere reserve) என்று கூறுகின்றனர். அப்பகுதிக்கும் இப்பாதையால் ஆபத்து வரக்கூடும். இல்லாத இராமர் பாலத்தைக் காப்பாற்ற, இருக்கின்ற பாம்பன் பாலத்தைச் சிதைப்பது எவ்வளவு பெரிய கொடூரமானது, பிற்போக்கானது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

இன்றுவரையில் கொழும்பு துறைமுகத்தில் கொண்டு போய்த்தான் நாம் சரக்குகளை இறக்கியும், ஏற்றியும் வருகிறோம். இந்த சரக்கு மாற்றப் போக்குவரத்துக்காக (Transhipment) ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை நாம் இலங்கை அரசுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆறாவது வழிப்பாதையில் சேதுக்கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் அந்தத் தொகை நமக்கு மிச்சப்படும். கப்பல்களின் போக்குவரத்துத் தூரம் குறையும். அதனால் பயண நேரம் குறையும். அதையட்டி மிகப்பெரும் அளவில் எரிபொருள் மிச்சப்படும். தூத்துக்குடி துறைமுகம் இன்னொரு சிங்கப்பூர் துறைமுகமாக ஆகும். தென்மாவட்டத்தைச் சார்ந்த மக்களின் வேலை வாய்ப்புகள் பெருகும். தமிழகத்தின் வழியாக இந்தியப் பொருளாதாரம் உயரும். இத்தனை நன்மைகளையும் இடக்கையால் புறந்தள்ளும் இந்திய அரசை நாம் என்னென்று சொல்வது?

நமக்குப் பெயர்களில் எந்தச் சிக்கலும் இல்லை. ‘அது இராமர் பாலமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். அந்தத் திட்டத்திற்குக் கூட, இராமர் கால்வாய்த் திட்டம் என்று அவர்கள் பெயர் வைத்துக்கொள்ளட்டும். திட்டம் நிறைவேறினால் சரி’ என்றார் தலைவர் கலைஞர். நம் நிலைப்பாடும் அதுதான். ஆனால், இன்றைய அரசு மாற்றுப்பாதை வழியாக என்று கூறி, போகாத ஊருக்கு வழி சொல்கிறதோ என்கிற எண்ணம் எழுகிறது. இவர்கள் கூறும் பாதை மாற்றுப்பாதையா, ஏமாற்றுப்பாதையா என்பதைக் காலம் விரைவில் சொல்லும். 

Pin It