jeyanthi 350தமிழக அரசு செயல்படவில்லை என்று யார் சொன்னது? பிப்ரவரி 24ஆம் நாள், ஜெயலலிதாவின் பிறந்தநாளையட்டி, விரைந்து செயல்பட்டிருக்கிறது.

சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ‘தமிழ்த்தாய் 67’ கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது (பாவம் தமிழ்த்தாய், என்று பிறந்தவள் என்றுணராத தமிழ்த் தாய்க்கு வயது 67தான்). அமைச்சர்கள் எல்லாம் மண்சோறு தின்கிறார்கள்.பால்குடம் எடுக்கிறார்கள்.

மதுரையில் மட்டும் மொத்தம் பத்தாயிரம் பால் குடங்களாம் (பால்விலை எப்படிக் குறையும்?). அலகு குத்தி, தேர் இழுத்து...அடடா, அமைச்சர்கள் ஆற்றி வரும் பணியை எப்படி நாம் இல்லையென்பது?

போக்குவரத்துத் துறை ஊழியர்கள், மார்ச் 3ஆம் தேதி, வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். போக்குவரத்துத் துறை அமைச்சரோ, கரூரில் உள்ள பசுபதீசுவரர் கோயிலுக்கு 2768 பூஜைத் தட்டு, மணிகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

தஞ்சையில் அமைச்சர் வைத்தியலிங்கம் 113 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு பசுவும், கன்றும் வேறு வழங்கப்படுமாம். இவையெல்லாம் எதற்காக? நாட்டு மக்களுக்காகவா? இல்லை.

‘அம்மா’வுக்குப் புதன் பார்வை தொடங்குகிறதாம். புதனுக்கு உரிய எண் 5. மேலே உள்ள எண்களை எல்லாம் கூட்டிப் பாருங்கள் 5 வரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இன்னொரு கூத்தும் நடந்திருக்கிறது. 24ஆம் தேதி கரூர் கோயிலில், அதிமுகவினர் நடத்திய யாகத்தில், அம்மாவட்டத்தின் ஆட்சியர் ஜெயந்தியும், வருவாய்த் துறை அதிகாரி அருணாவும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

பொறுப்பான பதவியில் இருப்பவர்கள், இப்படிப் பொறுப்பற்று ஒரு கட்சி நடத்திய யாகத்தில் கலந்து கொள்வதன் மூலம், நாட்டின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்து கிடக்கிறது என்பது தெள்ளெனத் தெரிகிறது.

Pin It