சென்னையில் உள்ள மனமகிழ் மன்றம் ஒன்று, வேட்டி கட்டிக் கொண்டுவந்த நீதிபதி உள்ளிட்ட சிலரை அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிய செய்தி, தமிழ்நாட்டில் ஏற்படுத்திய பரபரப்பை அனைவரும் அறிவோம். தமிழர் பண்பாடு இழிவு படுத்தப்பட்டதாக ஒரு சாராரும், ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதாக இன்னொரு சாராரும் குரல் எழுப்பினர்.

உடைகளின் மீதான அதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை யாரும் மறுக்க முடியாது. கண்ணியமான எந்த ஓர் உடையையும் மறுக்கும் அதிகாரம் எவருக்கும் இருக்கக் கூடாது.

எனினும் நம் நாட்டில், சில இடங்களில் மட்டுமே உரிமைப் பிரச்சினைகள் எழுகின்றன. வேட்டி அணிந்து கொண்டு வரக்கூடாது என்று கூறிய தனியார் நிறுவனத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கும் நாம், காலகாலமாகச் சட்டை அணிந்து உள்ளே வரக்கூடாது என்று தடுக்கும் சில கோயில்களை எதிர்த்து இதுவரை ஏன் குரல் கொடுக்கவில்லை.

நம் நாட்டின் நீதிபதியைவிட மிகக் கூடுதல் அதிகாரம் கொண்ட, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அண்மையில், சட்டை அணியாமல் வெற்றுடம்புடன், பூணூல் தெரிய கோயிலுக்குள் சென்றுவந்த காட்சியை நாளேடுகள் வெளியிட்டிருந்தன.

எந்த ஊடகமும் இது குறித்துப் பேசவில்லை. வேட்டி அணியக் கூடாது என்பது உடையதிகாரம் என்றால், சட்டை அணியக்கூடாது என்பதற்கு என்ன பெயர்?

Pin It