பாரதிய ஜனதா கட்சி, தனக்கு 2019 இல் நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தனிப் பெரும்பான்மை இனி எப்போதும் கிடைக்கப் போவதில்லை என்பதில் தெளிவடைந்து விட்டதாகத் தெரிகிறது. இந்த அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி இந்தப் பதவிக்காலத்திலேயே அதிபர், பேரரசுக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கும் முயற்சியே இந்த “ஒரே நாடு ஒரே தேர்தல்”. இதன் நடைமுறையை ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்திருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் இந்தியா நாடும் அல்ல, நாட்டுக்குத் தேர்தலும் அல்ல, அது மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசுகளுக்கு நடத்தப்படும் தேர்தல் மட்டுமே எனும்போது, அந்த சொல்லாடலே தவறானது எனச் சுட்டுகிறார் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜம்குறை கிருஷ்ணன்.

பல மாநிலங்களின் கூட்டரசாகவே அரசியலமைப்புச் சட்டத்தால் வரையறுக்கப் பட்டிருக்கும் இந்திய ஒன்றியம், தேர்தலை ஒருமித்தோ, ஒரே நேரத்திலோ நடத்துவது சாத்தியமே இல்லை என்றும், அந்த வாதமே அபத்தமானது என்றும் சொல்கிறார் ‘மின்னம்பலம்’ இணையதளத்தில் தன் சிறப்புக் கட்டுரையில் அவர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப் பட்டிருக்கும் குழு கடந்த ஜூன் மாதமே தன் வேலைகளைத் தொடங்கியிருப்பது இப்போது தெரியவருகிறது.

ஜனாதிபதியாகப் பதவிக்காலம் முடிந்த பின்னர், ராம்நாத் கோவிந்த் மட்டும் சுறுசுறுப்பாக இந்த வேலைகளைச் செய்ய பணியமர்த்தப் பட்டிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் முதல் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் வரை பல அரசு, அரசியல் தலைவர்களை அவர் சந்தித்து இதற்கான ஆலோசனைகளைக் கேட்டு, உருவாக்கத்தில் முக்கிய நிலையை அடைந்த பின்பே மோடி அரசு செப்டம்பர் மாதம் 18 முதல் 22 வரை ஒரு சிறப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தெரிகிறது.

I.N.D.I.A கூட்டணி சார்பில் சோனியா காந்தி, சிறப்புக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல்கள் என்ன என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்கக் கோரி 06-09-2023 அன்று கடிதம் எழுதி உள்ளார். ஒரு பக்கம் இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றப் போவதாகவும், மறுபக்கம் ஒரே தேர்தல் எனவும் செய்திகளை உலாவ விட்டிருக்கிறார்கள், இதில் ஏதோ ஒன்றை நிச்சயம் தங்கள் மிருக பலத்தைக் கொண்டு அவர்கள் நிறைவேற்றத் துடிக்கிறார்கள் என்றே தெரிகிறது.

வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு காலங்களில் நடக்கும் தேர்தல்கள் என்னும் நிலையிலாவது, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தங்கள் மக்களின் எதிர்காலத் திட்டங்களையும், போக்குகளையும் மீளாய்வு செய்யவும், திரும்பப் பெறவும், குறைக்கவுமான வாய்ப்புகள் உருவாகின்றன. அதையும் ஒன்றாக்கிவிட்டால், மக்கள் ஒரு சிறு இடைவெளியுமில்லாது இவர்களது தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எளிய மக்களை அஞ்ச வைத்துள்ளது இவர்கள் எடுத்திருக்கும் இந்த ஆயுதம்.

எப்பேர்ப்பட்ட கொடுங்கோன்மைக்கும் மானுட வரலாறு முடிவுகள் எழுதியே வந்திருக்கிறது. இந்துத்துவ பாசிச பா.ஜ.க. அரசின் கொடுங்கோன்மைக்கும் விரைவில் முடிவு எழுதப்படும். அது தெற்கிலிருந்து தொடங்கும்! கொசுவைப் போல, கொரோனைவைப் .போல, டெங்குவைப் போல, நிரந்தரத்திற்கு ஆசைப்படும் சனாதன வாதிகளுக்கும் இது பொருந்தும்.

- சாரதாதேவி

Pin It