1948ஆம் ஆண்டு பர்மிய நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது. பிரதமராக ஊநூ தலைமை ஏற்றார். இரங்கூன் தலைநகரமாகத் தொடர்ந்தது. இந்தியர்களின் வாழ்க்கை மேம்படத் தொடங்கியது. சுதந்திரமான வாழ்க்கையை நடத்தினர். இருப்பினும் அவர்கள் இந்தியர்கள் (அயல்நாட்டினர்) என்றே கருதப்பட்டனர். ஆண்டுதோறும் அதற்கான கட்டணத்தைச் செலுத்தி சான்றிதழ் பெற்று வந்தனர். அந்நியர் பதிவுச் சான்றிதழ் இல்லாதவர்கள் தண்டிக்கப்பட்டதும் உண்டு.

1962ஆம் ஆண்டு இராணுவத் தளபதி ஜெனரல் நேவின், பிரதமர் ஊநூவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றினார். எந்த எதிர்ப்புமின்றி ஆட்சி கை மாறியது. இராணுவ ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. ஜெனரல் நேவின் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் இந்தியர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாயினர். தனியார் செய்துவந்த தொழில்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. முதலாளி தொழிலாளியாகக் கருதப்பட்டார். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் கல்வி போதிக்கத் தடை செய்யப்பட்டது. பர்மிய மொழி மட்டுமே கற்கவேண்டிய நிலைக்கு இந்திய மாணவர்கள் தள்ளப்பட்டனர். எனவே ஆங்கில வழிப் பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்கள் கல்வியை இழந்தனர். ஆசிரியர்கள் வேலையை இழந்தனர்.

1964ஆம் ஆண்டு இந்தியர்கள் தாயகம் திரும்பத் தொடங்கினர். தமிழகத்திற்குத் திரும்பியவர்களின் எண்ணிக்கை மட்டும் 1,44,445 பேர்.

இராணுவ ஆட்சியில் மனித உரிமைகள் மீறப்பட்டன. மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். சனநாயகம் கேள்விக்குறியானது. இராணுவம் உண்டு கொழுத்தது. அதே நேரத்தில் நாட்டைச் சீர் செய்யும் பணியையும் இராணுவம் மேற்கொண்டது. இரங்கூன் நகரை விரிவுபடுத்த புதிய குடியிருப்புகளை உருவாக்கியது. மக்கள் புதிய குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

1989ஆம் ஆண்டு இராணுவம் ‘பர்மா’ என்பதை ‘மியான்மர்’ என்று பெயர் மாற்றம் செய்தது. 200 ஆண்டுகளுக்கு மேல் தலைநகராக விளங்கிய இரங்கூனுக்குப் பதில் ‘நேபிடோ’ என்ற நகரைத் தலைநகர் என்று அறிவித்தனர். அங்கு துறைமுகமும் இல்லை. பன்னாட்டு விமானத்தளமும் இல்லை.

1988ஆம் ஆண்டு பர்மிய சுதந்திரப் போராட்ட வீரர் ஜெனரல் அவுங்சான் அவர்களின் மகள் அவுங்சான் சூகி (Aung San Suu Kyi), உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனது தாயாரைப் பார்க்க இலண்டனிலிருந்து இரங்கூன் வந்தபோது, இராணுவம் மாணவர்களுக்குச் செய்த கொடுமைகளை அறிந்து, தான் இலண்டனுக்குத் திரும்புவதை விடத் தன் மக்களைக் காப்பதே தனது கடமை என முடிவெடுத்து அங்கேயே தங்கி “தேசிய சனநாயக மீட்புக் கழகம்” என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கிச் சனநாயகத்திற்காகப் போரடினார். அதனால் பல ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சூகி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். தற்போது மியான்மர் நாடு மீண்டும் சனநாயகத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது. இந்தியா&மியான்மர் இடையே உறவுகள் மேம்படத் தொடங்கியுள்ளன.

மியான்மர் நாட்டின் இன்றைய நிலை

1964ஆம் ஆண்டு தமிழகம் திரும்பி 52 ஆண்டுகளுக்குப் பின் அதாவது 2016 அக்டோபர் திங்கள் 5ஆம் நாள் இரங்கூனில் கால் பதித்தபோது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. இரங்கூன் விமானதளம் பிரகாசித்தது என்றே கூறலாம். இரங்கூன் விமானதளம் பன்னாட்டு விமானதளங்களுக்கு இணையாக இருந்தது. தற்போது Rangoon International Airport என்றே அழைக்கப்படுகிறது.

எங்களை அழைத்துச் செல்ல விமானதளத்திற்கு வருகைதந்த தோழர்கள் (தமிழர்கள்) அன்புடன் வரவேற்று அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் பர்மிய மொழியிலேயே பேசிக் கொண்டது வியப்பாகவே இருந்தது. எங்களை அழைக்க வந்தவர்களில் ஒருவர்கூட எங்களை அறிந்தவர்கள் அல்லர். அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு நாங்கள் தெரிந்தவர்கள். இது ஒன்றே அவர்களுக்குப் போதும். ஏனென்றால் நாங்கள் தமிழர்கள்.

தனி மகிழுந்தில் எங்களுக்கு ஏற்பாடு செய்து இருந்த விடுதிக்கு அழைத்துச் சென்றனர். தேவையானவற்றை வாங்கிக் கொடுத்து விடைபெற்றனர். ‘விருந்தோம்பல்’ பாடத்தை நாம் இவர்களிடமே கற்க வேண்டும்.

இரங்கூன் நகரில் குடியிருப்புகள்

இரங்கூன் நகரில் தனித்தனியாகக் கட்டப்பட்ட மர வீடுகளுக்குப் பதில் நான்கு மாடி, ஐந்து மாடிக் கட்டிடங்கள் காட்சியளித்தன. நகர் முழுவதும் புதிய கட்டிடங்கள் ஓங்கி உயர்ந்து நிற்கின்றன. வணிக வளாகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மிகப்பெரிய உணவு விடுதிகள், தரமான உணவுகளைக் குறைந்த விலையில் விற்கின்றன.

போக்குவரத்து

இரங்கூன் முழுவதும் தனியார் வேன்களும், பேருந்துகளும், மகிழுந்துகளும் மக்களுக்குச் சேவை செய்கின்றன. ஏழைகள் வேன்களிலும், நடுத்தர மக்கள் பேருந்திலும், ஓரளவு வசதி படைத்தோர் மகிழுந்துகளிலும் பயணம் செய்கிறார்கள். இராணுவ ஆட்சியில் அரசுப்பேருந்துகள் செயல்படவில்லை. இன்றும் அதே நிலை தொடர்கிறது. நாளை நிலைமை மாறக்கூடும்.

இரங்கூன் நகரில் காவல்துறையினரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதோடு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைத் தண்டிக்க CCTV கேமராக்கள் எதுவும் இன்றுவரை பொருத்தப்படவில்லை. எனவே போக்குவரத்து நெரிசலும் விபத்துக்களும் ஏராளம் நடைபெறும் என்றே நமக்குத் தோன்றும். ஆனால் உண்மை நிலை வேறுவிதமாக உள்ளது.

சாலையில் அனைத்து வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக 10 அடி இடைவெளியில் செல்கின்றன. முன்னே செல்லும் வாகனத்தை முந்துவது என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. அப்படிச் செய்வது குற்றமாகக் கருதப்படுகிறது. அவர்களின் பொறுமையும், சுய ஒழுக்கமும் நம்மை வியப்புக்குள்ளாக்குகின்றன. விபத்துக்கள் என்பதை அங்கே காணமுடியவில்லை. நடந்து செல்பவர்களை மதிக்கிறார்கள். முன்னுரிமை தருகின்றனர். போற்றுகின்றனர். அங்கு ஒலி எழுப்புவது குற்றமாகக் கருதப்படுகிறது.

மதம்

மியான்மர் நாடு ஒரு பௌத்த நாடு. புத்தர் கோயில்களை எங்கும் காணலாம். கோயில்களில் அமைதி காக்கப்படுகிறது. புத்தரை வணங்குவதற்கு அங்கு இடைத்தரகர்கள் இல்லை. வாங்கிவரும் பூக்களை அல்லது மெழுகுவர்த்திகளைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்து வணங்கிச் செல்கின்றனர்.

புத்த மதத்தில் சாதி இல்லை. எனவே அவர்களிடம் ஏற்றத்தாழ்வுகள் இல்லை. செய்யும் தொழிலை வைத்து உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுவதில்லை. யாரும் எந்தத் தொழிலையும் செய்யலாம். பர்மிய மக்கள் அன்பானவர்கள். அரவணைக்கும் தன்மையுடையவர்களாகத் திகழ்கிறார்கள்.

2016ஆம் ஆண்டுக் கணக்குப்படி மியான்மர் நாட்டின் மக்கள் தொகை 5,43,63,425 பேர்.

 மதங்களைப் பின்பற்றுவோர்

புத்த மதம் - 87.9%, கிறித்துவம் - 6.2%, இஸ்லாம் - 4.3%, இந்து - 0.5%,

மற்றவர்கள் - 1.0%, மதம் அற்றவர்கள் - 0.1%

மேற்கண்ட புள்ளிவிவரப்படி தமிழர்களின் எண்ணிக்கை 2,71,817 ஆக இருக்கலாம்.

திருமணங்கள்

இங்கு பெரும்பாலும் காதல் திருமணங்களே நடைபெறுகின்றன. சாதிப் பாகுபாடுகள் இங்கு இல்லாததால் காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை. காதலைப் போற்றுகின்றனர். திருமணத்தில் பொருளாதார நிலை மட்டுமே பார்க்கப்படுகிறது.

தமிழர்கள்

தமிழர்கள் அனைவரும் பர்மியர்களைப் போலவே வாழ்கின்றனர். பர்மிய மொழியைப் படிக்கின்றனர். பர்மிய மொழியிலேயே பேசுகின்றனர். கணவனும் மனைவியும் பேசுவது பர்மிய மொழி. பெற்றோர் குழந்தைகளிடம் பேசுவதும் பர்மிய மொழி. நம்மோடு மட்டும் தமிழில் பேசுகின்றனர். ஆனால் அடுத்த தலைமுறையில் வாழும் தமிழர்களால் தமிழில் பேச இயலாது. ‘தமிழ் இனி மெல்லச் சாகும்’ என்னும் வரி மியான்மர் நாட்டுக்குத்தான் பொருந்துமோ?

அங்கு வாழும் சீனர்கள், சீன மொழியைக் கற்க, கல்விக்கூடங்களைக் காலை மற்றும் மாலை தனியே செயல்படுத்துவதுபோல், தமிழ்மொழியைக் கற்பிக்க நாமும் கல்விக்கூடங்களைத் தனியே செயல்படுத்திட முன்வர வேண்டும்.

இந்தியாவும் மியான்மர் நாடும் இன்று நட்பு நாடுகளாகக் கைகோக்கின்றன. இந்த நேரத்திலாவது நமது தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மியான்மர் நாட்டுத் தமிழர்களை நினைவுகூர்ந்து தமிழ் மொழி கற்க வழிவகுக்க வேண்டும்.

திருமணம் ஆகாத தமிழ்ப் பெண்கள்

மியான்மர் நாட்டுத் தமிழர்கள் சந்திக்கும் அடுத்த இடர் ‘30 வயதைக் கடந்தும் என் பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்க முடியவில்லையே’ என்ற ஆதங்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் பார்க்க முடிந்தது.

இதனை நாம் எப்படிக் களையப் போகிறோம்? மியான்மர் நாட்டுத் தமிழர்களை நினைவு கூர்வோம், அங்கு தமிழ் மொழியை வளர்க்க உறுதி எடுப்போம். அவர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் வழி வகுப்போம்.

Pin It