புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்ல, புழக்கத்தில் இருக்கும் பணத்தைத்தான் திரும்பப் பெறுகிறோம் என்று ஒன்றிய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதே?
புழக்கத்தில் இருக்கும் எந்தப் பணத்தைத் திரும்பப் பெற்றாலும் அது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குச் சமமானதுதான். நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகச் சொல்கிறார்கள், அவ்வளவுதான்.
2016ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழித்து விட்டதா?
முதலில் கருப்புப் பணம் என்ற வார்த்தைப் பயன்பாட்டையே நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். கருப்பு என்பது திராவிட நிறம். கருப்புப் பணம், Black market போன்ற வார்த்தைப் பயன்பாடுகள் எல்லாம் வெள்ளை ஏகாதிபத்திய நிறவெறியின் எச்சங்கள். கள்ளப் பணம் என்ற பயன்பாடுதான் சரியானது.
2016-இல் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் தோல்வியைச் சந்தித்தது. உலகில் வேறெங்கும் நடக்காத கொடுமைகள் இங்கு நடந்தன. நூற்றுக்கணக்கானவர்கள் வங்கி வாசலில் காத்திருந்து இறந்தார்கள். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. கருப்புப் பணமும் ஒழிக்கப்படவில்லை.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதால், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் பாதிக்கப்பட்டன. இந்தியப் பொருளாதாரத்தின் மீது விழுந்த அடி அது.
1978-இல் பிரதமர் மொரார்ஜி தேசாய்கூட பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தார். அது முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் கூடிய சிறப்பான செயல். ஆனால் 2016இல் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பையே அவமதித்து, தன்னிச்சையாக முடிவெடுத்தார் பிரதமர் மோடி. இன்று மட்டும் அவர்கள் குடியரசுத் தலைவரை அவமதிக்கவில்லை. அன்றே இந்த முடிவைக் குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்காமல் அவரையும் அவமதித்தார் மோடி. இதனை அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது தன்வரலாறு நூலில் பதிவு செய்துள்ளார்.
கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரான செயல் இது. மாநிலங்களையும் இதில் கலந்தாலோசிக்கவில்லை. எதேச்சதிகாரமாக ஒன்றிய அரசு நடந்து கொண்டது.
2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதால் என்ன பாதிப்புகள் ஏற்படும்?
குறைவான அளவிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும், இது தேவையற்ற நடவடிக்கை. ஒன்றிய அரசுக்கு நெருங்கிய நண்பர்களாய் இருக்கும் பெருமுதலாளிகள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளைச் சேமிப்பாய் வைத்துள்ள எவ்வளவோ பேர் இதனால் பாதிக்கப்படுவார்கள். பார்ப்பனிய - பனியா கூட்டுக் கொள்ளையிலே எப்போதும் பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்தான் என்பது எனது கருத்து.
- பேராசிரியர் நாகநாதன்
நேர்கண்டவர் : வெற்றிச்செல்வன்