திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு 17.02.2018 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:
இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்படக் கூடாது
- நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையை கலைப்பதற்கான முயற்சி, தன்னலமிக்க ஒரு கூட்டத்தால் இப்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் எனும் பெயரில் வேறும் 3 விழுக்காடு மட்டுமே உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியினர் மொத்தக் கோயில் சொத்துகளையும் அபகரிக்கும் திட்டம் இது. எனவே தங்களை இந்துக்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் சொத்துகளைப் பார்ப்பனர்கள் பறித்துச்சென்றுவிடாமல் பாதுகாக்கும் கடமை பகுத்தறிவாளர்களுக்கும் உள்ளது. அரசின் பொறுப்பில் கோயில்கள் இருந்தால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் நிலை கேரளாவைப் போல, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் வந்துவிடும் என்பதால் அறநிலையத் துறையை கலைக்க முயல்கின்றனர்.
எக்காரணம் கொண்டு இந்து அறநிலையத் துறை கலைக்கப்பட கூடாது. தில்லை நடராசர் கோயிலையும் தீட்சிதர்களிடமிருந்து அரசு மீட்டெடுக்க வேண்டும். மேலும், கோயில் நிலங்களில் பல்லாண்டுகளாக அடிமனைக் குத்தகை முறையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அவர்கள் வாழும் நிலத்தை அவர்களுக்கே உரிமையாக்கிட, இந்து அறநிலையத் துறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஆணவப் படுகொலைத் தடுப்பு
- உலக உயிர்களின் இயற்கைப் போக்கான காதலை எதிர்த்தும், தன் வாழ்க்கைத் துணையைத் தானே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தனி மனித உரிமைகளை மறுத்தும், சாதியின் பெயரால் நடத்தப்படும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப் பட வேண்டும் என்றும் இதற்கெனத் தனிச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென இத்தீர்மானம் கோருகிறது.
திருநங்கைகளின் உரிமை
- சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் திருநங்கையர்களுக்குக், கல்வி வேலை வாய்ப்புகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்குவதோடு அவர்களுக்கு உரிமை களை மீட்டெடுக்க அவர்களுக்குத் தேசிய ஆணையம் ஒன்று அமைத்திட இம்மாநாடு தீர்மானிக்கிறது.
நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு
- ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் திராவிட இயக்கம் கல்வித் துறையில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள் குறிக்கத்தக்கது. இப்பொழுது ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நீட் எனும் தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும். இனி வரும் காலங்களில் கல்வித் துறையில் மத்திய அரசின் தலையீட்டால் இதுபோன்ற சமூக அநீதிக்கு இடம் கொடுக்காமல், கல்வி மத்தியப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு
- சாதி மதக் கோட்பாடுகளில் ஊறிப்போன சமூகத்தில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சமூக சமத்துவ நிலைக்கு அவர்களின் முன்னேற்றத்தில் கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை பெறுவதால் அரசு மற்றும் தனியார் துறைகளிலும், அரசியலிலும் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறை படுத்திட வேண்டும்.
அனைத்துச் சாதிக்கும் பொது மயானம்
- பிறப்பின் அடிப்படையில் திணிக்கப்பட்ட சாதி இழிவை, இறப்பிற்குப் பின்னரும் சுமந்து செல்லும் இழிநிலையை ஒழிக்கும் வகையில், தமிழ்நாட்டில் சிற்றூர்கள் தோறும் அரசு பொது மயானங்கள் அமைக்கப்பட்டு, அதை அனைத்துச் சாதி மக்களும் பயன்படுத்த வழிவகை செய்வதோடு சாதிக்கொரு மயானம் என்பதைச் சட்டப்படி தடைசெய்ய வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.