சிலை என்பது ஓர் அடையாளம்.

சிலை வழிபாட்டை ஏற்றுக்கொள்வதில்லை நாம்.

சிலையை வழிபடுபவர்களுக்குக் குறுக்கே போய் நிற்பது நமது வேலையன்று.

சிலையாய் நிற்கும் கடவுளுக்கும், பக்தகோடிகளுக்கும் குறுக்கே நிற்கும் வேலையைச் செய்து கொண்டிருப்பவர்கள் பூசாரிகள், பார்ப்பனர்கள்.

தொட்டால் தீட்டு, பார்த்தால் பாவம் என்று சூத்திரர்களைக் கோயிலுக்குள் கூட விடமாட்டார்கள் இன்றும் வடமாநிலங்களில், சில கோயில்களில்.

அதாவது கோயிலில் இருக்கும் கடவுள் சிலை முழுவதும் பார்ப்பனப் பூசாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

சிலையைக் காணோம் என்று லேசாகப் பொசுங்கிக் கொண்டிருந்த கங்கைக் கிளறிவிட்டுவிட்டார் சிலை தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்.

நேர்மையான அதிகாரி, தோண்டித் துருவுகிறார்.

அரசு அவருக்கு ஒத்துழைப்பைத் தர மறுக்கிறது.

மெதுவாகத் தொல்லை தரவும் செய்கிறது. இதை நீதிமன்றத்திலேயே அவர் சொல்லிவிட்டார்.

சரி! சிலைகள் எங்கே?

சூத்திரர்கள் யாரும் நுழைய முடியாத, பார்ப்பனப் பூசாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிலைகள் எங்கே போனது என்பதற்கு முதலில் அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

நடராசப் பெருமான் சிலையோ நாட்டை விட்டே கடத்தப்பட்டுவிட்டது. ஒரு வழியாக அது மீட்கப்பட்டுவிட்டது.

பழனியில் பஞ்சலோகப் பழனியாண்டவனையே காணவில்லையாம். எங்கே போனாரோ சுவாமிகள்?

அதையும் கண்டுபிடித்துக் கும்பகோணம் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டார் பொன்.மாணிக்கவேல்.

சர்வ வல்லமையுள்ள தெய்வீகக் கடவுளுக்குத் தன்னைக் காத்துக்கொள்ள முடியவில்லை.

தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தெய்வீகம் நிறைந்த பூசாரிகளுக்கோ அக்கடவுளைக் காப்பாற்றத் தெரியவில்லை.

கடவுளின் மீதே கைவைத்திருக்கிறார்கள் என்றால் அரசுக்கும், அரசு சார்ந்த ஆதரவாளர்களுக்கும் இதில் தொடர்பு இல்லாமல் இருக்க முடியாது.

நேர்மையாகப் புலன் விசாரணை செய்யும் பொன்.மாணிக்கவேலுக்கு அரசு உரிய ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும்.

சிலை கடத்தல் தொடர்பான அனைத்து செய்திகளும் வெளி வரவேண்டும். குற்றவாளிகள் தப்பிக்கக் கூடாது. கூண்டில் நிறுத்தி அவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.

இனி, பழனி கோயிலில் மொட்டை பொடுவதா; இல்லை, கும்பகோணம் நீதிமன்றத்தில் மொட்டை பொடுவதா என்பதை பக்தகோடிகளே முடிவு செய்து கொள்ளட்டும்.

அரோகரா! அரோகரா!

Pin It