தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையவில்லை.

இக்குறுகிய கால ஆட்சியில் மக்களுக்குச் செய்த மக்கள் நலத் திட்டங்களையும், கழகத் தேர்தல் வாக்குறுதியில் 90 விழுக்காடு நிறைவேற்றி உள்ளதாகவும் பட்டியல் இடுகிறார் முதல்வர் ஸ்டாலின், மக்கள் முன்னிலையில்.

எடப்பாடி பழனிச்சாமியாக இருக்கட்டும், ஓ.பன்னீர் செல்வமாக இருக்கட்டும் அவர்கள் செய்த 10 ஆண்டு கால மக்கள் நலத்திட்டங்கள் என்னென்ன என்று இது வரை மேடைகளில், மக்கள் முன் பேசவில்லை.

மாறாக எங்கள் திட்டங்களைத்தான் ஸ்டாலின் நடைமுறைப் படுத்துகிறார், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, “அமாவாசை”க் கணக்கில் ஆட்சி மாறப் போகிறது, ஒரே நாடு - ஒரே தேர்தல் என்று கோயபல்ஸ் போல தேர்தல் பரப்புரையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரே நாடு - ஒரே தேர்தல் என்ற பா.ஜ.க.வின் அஜண்டாவுக்குப் பழனிச்சாமி நன்றாகவே ஒத்தூதுகிறார். ருமேனிய நாட்டுக்காரர் ஒருவர் கூட, ஸ்டாலின் படமேந்தி பேருந்தில், வீதியில் வாக்கு சேகரித்தது  ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்க்குத் தெரியாதா?

வேடிக்கை என்னவென்றால் அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. இது அவர்களுக்கே தெரியவில்லை.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டு இல்லை. ஆனால் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம் என்கிறார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

கூட்டணி இல்லை என்கிறார் அ.தி.மு.க ஜெயகுமார். ‘இல்லையில்லை; இப்போது இல்லை, ஆனால் கூட்டணி தொடரும்’ என்கிறார் பழனிச்சாமி! ஓ.பன்னீர்செல்வம்....?

இப்படி அவர்கள் குழம்பிக் கொண்டு இருப்பதில் நமக்குக் கருத்தேதும் இல்லை.

ஆனால் தி.மு.கழக ஆட்சியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் அளந்துவிடும் பொய்களை மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ஒன்றியத்தின் முதன்மையான, வலிமையான முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்று நாடும், மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இனி, இரும்பு அடிக்கும் இடத்தில் ஈக்களுக்கு என்ன வேலை!

Pin It