இமாச்சலப் பிரதேசம் மற்றும் புதுடில்லி மாநகராட்சி ஆகியவற்றில் ஆட்சியை இழந்தது பாஜக. 7 இடைத் தேர்தல்களிலும் பாஜக படுதோல்வி.

கள்ள ஓட்டு, மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் வெறுப்பு அரசியல் காரணமாக குஜராத்தில் மட்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது பா.ஜ.க.

இப்படித்தான் நேர்மையமாகச் செய்திகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் . ஆனால், பாஜகவை இன்னமும் இந்த மக்கள் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதைப் போல ஒரு கற்பனையைத் தலைப்புச் செய்திகளாக்கி மகிழ்ந்திருக்கின்றன ஊடகங்கள். ஊடகங்களின் இந்த மகிழ்ச்சி ஆபத்தானது. இது, ஜனநாயகத்தின் வீழ்ச்சி.

குஜராத் ஆட்சி தக்கவைப்பு குறித்த மோடியின் பேச்சை எட்டு காலம்ன் செய்தியாகப் போட்டிருக்கிற ஊடகங்கள் இமாச்சல வெற்றி குறித்த ராகுலின் அறிக்கையை எட்டு வரிகளில் கூடப் பதிவு செய்யாதது எவ்வளவு பெரிய இருட்டடிப்பு...? எவ்வளவு பெரிய மோசடி...?rahul gejriwal and modiஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமெனில் இந்திய ஒன்றிய அளவிலான ஒரு கூட்டமைப்பு கட்டமைக்கப்பட்டே தீர வேண்டும்.

சங் பரிவார் கும்பலின் இலக்கு வர்ணாஸ்ரம மநுதர்ம ஆட்சி. அதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்று சொல்லலாமே தவிர வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது என்பதே எதார்த்தமான உண்மையாகும்.

ஒருவேளை அப்படியொரு அசிங்கமான நிலைமைக்கு இந்தியா தள்ளப்பட்டு விடுமானால் அதற்கு நிச்சயமாக மக்கள் அல்ல, இங்கேயுள்ள மக்கள் இயக்கங்கள்தான் காரணமாக இருப்போம் என்பதையும் நாம் நேர்மையோடே ஒப்புக் கொண்டாக வேண்டும்.

சங் பரிவார் கும்பலின் ஆசை நிறைவேறினால் கூட அது நிச்சயமாக நீண்டகாலத்திற்கு நிலைக்காது. இப்போதைய அறிவியல் உலகில் பழமைவாத அரசியல் அவ்வளவாகத் தாக்குப் பிடிக்க முடியாது என்பது வேறு. ஆனால் அதைச் சரிசெய்ய நாம் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியது வரும்.

அதைத் தடுப்பதற்கு வழியே இல்லையா? இருக்கிறது! எளிய வழி இருக்கிறது! இப்போதே ஒரு ஜனநாயக ரீதியிலான மாற்று வழியை ஏற்படுத்துவதுதான் ஒரே தீர்வு. அது, ஒன்றிய அளவில் ஒரு ஜனநாயகக் கூட்டமைப்பைக் கட்டுவது. அது சாத்தியமா? என்றால் நிச்சயம் சாத்தியமே! கடந்த கால அனுபவங்கள் இந்த மாற்று வழி குறித்த அய்யத்தை நமக்குள் விதைக்கக் கூடும். அதுவும் இயல்பானதே.

ஆனால் இம்முறை சமூகநீதி - மாநில சுயாட்சி - மதச்சார்பின்மை - ஜனநாயகம் என்கிற கொள்கைகளை முன்னிறுத்தி ஒரு கூட்டமைப்பு கட்டப்படுமானால் அது ஒன்றிய அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும்... வெற்றியைத் தரும்.

இப்போதைக்கு இதற்கான வாய்ப்பும் தகுதியும் திமுகவிற்கே இருக்கிறது. திமுகவின் முன்னெடுப்பில் மட்டுமே பாஜக என்கிற வன்முறைக் குதிரைக்குக் கடிவாளம் போட முடியும்.

இல்லையெனில் மத ரீதியாக மக்கள் பிளவு படுத்தப்பட்டு எதிர்காலத்தில் வன்முறை வெறுப்பு அரசியல் வெற்றி பெற்றே தீரும். அது ஜாதீயப் பிரிவினைக்கும் வர்ணாஸ்ரம தர்மத்திற்கும் வழியேற்படுத்தும். நாம் பழமையை நோக்கித் தள்ளப்படுவோம். ஜனநாயகமும் சமூகநீதியும் அடியோடு புதைக்கப்படும். மக்கள் கொடுமைகளில் உழன்று... தலைமுறைகளை இழந்து... பின் போர்க்குணம் பெற்றுப் போராடி... தியாகங்கள் பல செய்து.... சமூக ஜனநாயக விடுதலையை அடைவார்கள் என்பது வேறு. ஆனால், அப்படிப்பட்டக் கடுமையான பின்னடைவை இந்தச் சமூகம் எதிர்கொள்ள இன்றைக்கு இருக்கிற சமூகநீதி, ஜனநாயக இயக்கங்கள் அனுமதிக்கக் கூடாது என்பதே நமது கவலை.

மக்களை அணிதிரட்டினால் எவ்வளவு பெரிய சர்வாதிகாரத்தையும் வீழ்த்த முடியும் என்பதே வரலாறு நமக்குச் சொல்லித் தரும் பாடம். நாம் நமது வரலாறுகளில் இருந்தே பாடம் கற்போம்!

- காசு.நாகராசன்

Pin It