அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்த (அலங்) கோலங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன, நாடாளுமன்றத்தில் மசோதாக்கள்.

விவாதிப்பதற்குச் சரியான தகவல்கள் தயாரிக்கக் கூட முடியவில்லை, அடுத்த நாள் என்ன மசோதா தாக்கல் செய்வார்கள் என்று தெரியவில்லை, அவையின் அலுவல் பட்டியலை முதல் நாள் இரவில் மாற்றுகிறார்கள்  என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி இப்பொழுது ‘தேசிய மருத்துவ ஆணைய’ மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது.

1956ஆம் ஆண்டு ‘இந்திய மருத்துவ கவுன்சில்’ சட்டம் கொண்டு வரப்பட்டது.

63 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் இச்சட்டத்தில் ஊழல் மலிந்து விட்டதாகக் கூறி, இதற்குப் பதிலாகத் தேசிய மருத்துவ ஆணையத்தைக் கொண்டுவருகிறது மத்திய அரசு.

ஒரே இந்தியா, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்/ பாஜக கொள்கை வழி நாடுமுழுவதும் இனி மருத்துவத்திற்கும் ஒரே ‘நெக்ஸ்ட்’ எனும் தேர்வை கொண்டு வருகிறார்கள்.

நீட் தேர்வைப் போல இந்த நெக்ஸ்ட் தேர்விலும் தேறினால் தான் மருத்துவராகத் தொடர முடியும்.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்திருந்தலும் அவர்களுக்கும் நெக்ஸ்ட் என்பது தகுதித் தேர்வாக வரப்போகிறது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்தேர்வு நடைமுறைக்கு வர இருக்கிறது.

இந்த மசோதா குறித்து, நாடாளுமன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரைகளை ஏற்காமல், அதனை முற்றிலும் நிராகரித்து விட்டு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இம்மசோதாவில் திருத்தங்கள் கோரி ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இவைகளை எல்லாம் கிஞ்சித்தும் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மத்திய அரசு நடந்து கொள்வது நாட்டின் நலனுக்கு ஏற்றது இல்லை.

புதிய கல்விக் கொள்கை, முத்தலாக் போன்று சரியான விவாதமில்லாமல், விவாதித்து எதிர்க்கட்சிகள் சொல்கின்ற திருத்தங்கள் எதையும் செய்யாமல், மசோதாக்களை மட்டுமே நிறைவேற்றிக் கொண்டிருப்பது மக்களிடையே ஐயத்தை ஏற்படுத்துகிறது.

ஆனை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதைப் போல, நிறைவேற்றப் பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் பின்னால் பாதிப்புகள் வர இருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது.

இது சர்வாதிகாரத்தின் உச்சம்.

Pin It