பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு 27.07.1969 அன்று, தி.மு.கழகத்தின் தலைவராகத் தலைவர் கலைஞர் பொறுப்பேற்றார். அந்தப் பொறுப்பில் 47 ஆண்டுகள் நிறைவடைந்து 48ஆம் ஆண்டில் இப்போது தலைவர் அடியெடுத்து வைக்கின்றார். ஏறத்தாழ ஓர் அரை நூற்றாண்டு ஒரு கட்சியின் தலைவராக ஒருவர் தொடர்வது வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.

karunanidhi 320தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த நாளில், தி.மு.கழகத்தைச் சில குழப்பங்கள் சூழ்ந்திருந்தன. பொதுச் செயலாளர் பொறுப்புக்குத் தான் போட்டியிடப் போவதாக நாவலர் வெளிப்படையாக அறிவித்தார். அப்போது கலைஞர் அமைச்சரவையில் நாவலர் இடம்பெறவில்லை. அதனையே அவர் காரணமாகக் காட்டினார். தான் அரசு பொறுப்பில் எதிலும் இல்லாத காரணத்தால் கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பணியாற்ற விரும்புவதாக அறிவித்தார். ஆனால் காட்சியின் மிகப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலைஞர் அந்தப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்பதையே விரும்பினார்.

எம்.ஜி.ஆர். போன்ற கட்சியின் செல்வாக்குள்ள தலைவர்கள் முயற்சித்தும் நாவலர் அதனை ஏற்கவில்லை.பிறகு தந்தை பெரியார் அவர்களே ஓர் அறிக்கை வெளியிட்டார். கட்சியின் ஆகப் பெரிய தலைமைப் பொறுப்புக்குப் போட்டி ஏற்படுவது காட்சியைப் பலவீனப்படுத்தும் என்றார். கலைஞருக்கே கட்சியில் பெரும் செல்வாக்கு இருப்பதால் அவரிடம் அப்பொறுப்பை விட்டு விடுவதுதான் சரியாக இருக்கும் என்ற தன் கருத்தையும் கூறினார். ஆனாலும் நாவலர் இணங்கவில்லை.

இறுதியில், கட்சியின் தளபதிகளாக விளங்கிய ஐவர் சேர்ந்து ஒரு முன் மொழிவை வைத்தனர். மதுரை முத்து, மன்னை நாராயணசாமி, அன்பில் தர்மலிங்கம், திருவண்ணாமலை தருமலிங்கம், தூத்துக்குடி சிவசாமி ஆகியோர் ஒரு கருத்தை முன்வைத்தனர். கட்சியின் அவைத் தலைவர் என்னும் பொறுப்பை, அதிகாரமுள்ள தலைவர் பதவியாக ஆக்கி, அதனைத் தலைவர் ஏற்பது என்றும், பொதுச் செயலாளர் பொறுப்பை நாவலர் ஏற்பது என்றும் முடிவாயிற்று.

அந்த முடிவின்படிதான் அன்று தலைவர் பொறுப்பைக் கலைஞர் ஏற்றார். இன்றுவரை தொய்வில்லாமல், பல நெருக்கடிகளைக் கடந்து காட்சியைக் காப்பாற்றி வருகிறார். கட்சியில் அதன்பின் இருமுறை பிளவுகள் ஏற்பட்டன. நெருக்கடிக் காலம் என்னும் நெருப்புக் காலம் ஒன்றையும் கழகம் சந்தித்தது. 1991, 2014 ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மிகப் பெரும் தோல்வியைக் கட்சி எதிர்கொண்டது. இத்தனைக்கும் பிறகும், முன்னைக் காட்டிலும் வலிமையாக இன்று தி.மு.கழகம் விளங்குகிறது என்றால், தலைவரின் அறிவுக் கூர்மை, ஆற்றல், ஓயாத உழைப்பு, சொல்லாற்றல் எனப் பல்வேறு காரணிகள் உள்ளன.

தலைவர் கலைஞர் வாழும் காலத்தில் நாமெல்லாம் வாழ்கிறோம் என்பதே பெருமையுடைத்து!

Pin It