இலக்கியவாதி ஜெயகாந்தன் தன் வாழ்நாள் முழுவதும் ஓர் அரசியல்வாதியாகவும் இருந்தார். பொதுவுடைமை இயக்கத்தில் ஜீவாவின் சீடனாய் அவருடைய அரசியல் வாழ்வு தொடங்கிற்று. பிறகு காமராசரின் நம்பிக்கைக்கு உரியவராய் காங்கிரஸ் மேடைகளில் அவருடைய குரல் ஒலித்தது. இறுதி நாள்களில் அரசியலில் பெரிய ஈடுபாடு இன்றி வாழ்ந்தார். காலமெல்லாம் கடும் சொற்களால் திராவிட இயக்கத்தைத் தாக்கி வந்த அவர், கடந்த சில ஆண்டுகளில் கலைஞரின் ஆட்சிக் காலம் பொற்காலம் என்று சொல்லும் அளவுக்கு மாற்றத்துக்கும் உள்ளானார்.

Jeyakanthan writer1950-60களில் பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த ஜீவாவும், பாலதண்டாயுதமும் திராவிட இயக்கத்தை மிக வன்மையாகச் சாடினார்கள். அவர்களோடு சேர்ந்து வளர்ந்த ஜெயகாந்தனும் அதே போக்கினைத்தான் மேற்கொண்டார். கருத்து வேறுபடுவதற்கும், தான் விரும்பும் கட்சியில் இணைந்து கொள்வதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு என்றாலும், அறிஞர் அண்ணா இறந்த போது, அவர் விடுத்த அறிக்கை மிகத்தரம் தாழ்ந்ததாக இருந்தது. அண்ணாவை இழிவு படுத்துவதாக எண்ணி, அவர் பயன்படுத்திய சொற்கள் அவரையே இழிவுபடுத்தின.

தன் இலக்கியங்களிலும் அவர் அரசியலைப் பயன்படுத்தினார். சினிமாவுக்குப் போன சித்தாளு அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, அன்றைய ஆட்சியாளர்களின் அத்துமீறல்களை ஆதரித்தது. அதனைச் சார்ந்திருந்த ஜெயகாந்தனும் அதே நிலைப்பாட்டினை மேற்கொண்டார். இந்திராதான் இந்தியாவே என்பதுதான் அன்றைக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் ஆகியோரின் நிலைப்பாடாக இருந்தது.

80களின் இறுதியிலும் அவருடைய காங்கிரஸ் சார்பு மாறவேயில்லை. ஈழ மக்களின் விடுதலைக்கு எதிராக இந்திய அமைதிப்படை செயல்படத் தொடங்கியபின்பும் அதனை முழுமையாக ஆதரித்து, போராடிக் கொண்டிருந்த புலிகளைக் கடுமையாகச் சாடியவர் ஜெயகாந்தன். புலிகளைத் தாக்கிப் பேசும் கூட்டங்களில் ம.பொ.சி., சோ, பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் அவர் மேடையைப் பகிர்ந்து கொண்டார்.

2006-11 தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் அவருக்கு வழங்கப்பட்ட முரசொலி அறக்கட்டளை விருதினை அவர் ஏற்றுக்கொண்டார். அதே காலகட்டத்தில் அவர் மிகவும் உடல்நலமற்று இருந்தபோது, அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துக் கலைஞர் அவர் நலம் பேணினார். அதற்காக அவர் நேராகவே சென்று அன்றைய முதலமைச்சர் கலைஞருக்குத் தன் நன்றியினைத் தெரிவித்தார். கனிமொழி எழுதிய சிகரங்களில் உறைகிறது காலம் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் நேருக்கு நேராகவே கலைஞரைப் பாராட்டியும் மகிழ்ந்தார்.

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் இப்படித்தான் அமைந்திருந்தன.

Pin It