periyar karunchettaithamilar feb14 2014பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘ஹிந்து தர்ம பாதுகாப்பு இயக்கம்’ என்னும் அமைப்பின் சார்பில் ஆற்றியுள்ள அநாகரிகமான உரையன்றை இணையத்தளத்தில் ((You Tube)ஒளிப்படமாகப் பார்த்தேன். அது குறித்து, இதழாளர் ஞாநியும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.

எந்த ஒரு கட்சியிலும், மூன்றாம் தர, நான்காம் தரப் பேச்சாளர்கள் இப்படிப் பேசுவதுண்டு. கட்சியின் முதன்மைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொதுவாக இப்படிப் பேசுவதில்லை. ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்.

அவருடைய பேச்சு முழுவதும், இந்துக் கடவுள்களைத் தாக்கிப் பேசியதாகக் கூறி, நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நாகரிகமற்ற சொற்களால் வசைபாடுவதாக உள்ளது. இந்துக் கடவுள்களைப் பற்றி, சைமன் (சீமான்) என்னும் கிறிஸ்தவன் எப்படிப் பேசலாம் என்று கேட்டு, அருவருக்கத்தக்க வகையில் அவர் பேசியிருக்கிறார். அந்தப் பேச்சின் இடையிடையே அய்யா பெரியார் அவர்களை இழிவுபடுத்தும் வகையில், மிகுந்த ஆணவத்தின் வெளிப்பாடாய்ச் சில வரிகளைக் கூறியுள்ளார். அவ்வரிகள் நாகரிகமற்றவை. அவர் எடுத்துக்காட்டியுள்ள நிகழ்ச்சி உண்மைக்கு மாறானது.

இப்போதெல்லாம் பெரியாரை இழிவுபடுத்த முயல்வதும், திராவிட இயக்கத்தை ஒழிக்காமல் விடமாட்டோம் என்று ‘வீர சபதம்’ எடுப்பதும், பார்ப்பனர்களுக்கு மட்டுமின்றித் தமிழ்த்தேசியத் தலைவர்கள் சிலருக்கும் வழக்கமாகி விட்டது. இன்று நேற்றன்று, கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, இவர்கள் திராவிட இயக்கத்தை ‘ஒழித்துக் கொண்டேதான்’ இருக்கிறார்கள், பாவம்!

“இராமர் படத்தைச் செருப்பால் அடித்த, அந்த ஈ.வெ.ரா. நாயக்கனை, அன்றே ரெண்டு பேர் செருப்பால் அடித்திருந்தால்...” என்று போகிறது, ஹெச். ராஜாவின் பேச்சு. அதே பாணியில் நம்மாலும் திருப்பி விடை சொல்ல முடியும். ஆனால் அதே தரத்திற்கு நாமும் இறங்குவது, அரசியலை மேலும் அநாகரிகப்படுத்துவதில்தான் முடியும். எனவே ஹெச்.ராஜாவைப் பற்றிக் கவலைப்படாமல், இக்கட்டுரையைப் படிக்கும் மக்களைக் கவனத்தில் கொண்டு, சில வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென்று கருதுகின்றேன்.

இராமர் படத்தைப் பெரியார் செருப்பால் அடித்தார் என்று பல ஆண்டுகளாக, நடக்காத ஒன்றை, ‘இராமபக்தர்கள்’ கூறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒருவேளை, அது அவர்களின் உள்மன விருப்பமாக இருக்கலாம்.

நடந்தது என்ன என்பதை நம் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்.

1971ஆம் ஆண்டு தொடக்கத்தில், திராவிடர் கழகம் சார்பில், சேலத்தில் ஒரு பெரிய மாநாடும், பேரணியும் நடைபெற்றன. அந்தப் பேரணி யில் பெரியார் ஓர் ஊர்தியில் அமர்ந்து ஊர்வலமாக வந்து கொண்டிருந்தார். பின்னால் வந்த இன்னொரு ஊர்தியில், ‘இதுதான் இந்துக் கடவுளர் களின் கதை’ என்பதை விளக்கும் சித்திரங்களைக் கொண்ட வெட்டுருக்கள் வந்து கொண்டிருந்தன.

பேரணி வந்த பாதையில், ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.) கட்சியைச் சேர்ந்த சிலர், அய்யாவிற்குக் கறுப்புக் கொடி காட்டினர். அவர்களுக்கு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அன்று ஆட்சியிலிருந்த, கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசுதான், ஜனநாயக அடிப்படையில் கறுப்புக் கொடிப் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருந் தது. வன்முறை ஏதுமின்றி ஆர்ப்பாட்டம் நடத்திக் கொள்ளலாம் என்று காவல் துறை அனுமதித்திருந்தது. காவிக் கொடி களைக் கீழே போட்டுவிட்டு, நம் கொடியான கறுப்புக் கொடியை ஏந்தி நின்ற ஜனசங்கத்தினரைப் பார்த்துப் புன்னகைத்தபடி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அக்கூட்டத்திலிருந்து ஒருவன், அய்யா பெரியாரை நோக்கித் தன் செருப்பை வீசினான். அது குறி தவறி, பின்னால் வந்த, கடவுளர்கள் படம் வைக்கப்பட்டிருந்த ஊர்தியில் போய் விழுந்துவிட்டது. அந்த வாகனத்தில் இருந்த தொண்டர்கள், அவர்கள் வீசிய செருப்பை எடுத்து, அவர்கள் கடவு ளையே அடித்தார்கள். முன்னால் சென்று விட்ட பெரியாருக்கு, இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததே தெரியாது.

வன்முறையைத் தொடங்கியவர்கள் யார் என்பதை இப்போது உணர்ந்து கொள்ளலாம். பிறகு அவர்களே நம்மீது வழக்கும் போட்டார்கள். அது ஒன்று மில்லாமல் போய்விட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால் ஹெச். ராஜாக்கள் இன்னும் அதனைத் தள்ளுபடி செய்யாமல், இராமர் செருப்பால் அடிபட்ட கதையைத் திரும்பத் திரும்ப அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக் கொண்டுள்ளனர்.

அந்த மாநாட்டையட்டி இன்னொரு வழக்கும் நடைபெற்றது. அது ‘இந்து’ ஏட்டின் மீது திராவிடர் கழகம் தொடுத்த வழக்கு. மாநாட்டுத் தீர்மானம் ஒன்றைத் திரித்து வெளியிட்டதாகக் கூறி வழக்குத் தொடுக்கப்பட்டது. இன்றைய தி.க. தலைவர், ஆசிரியர் வீரமணி அவர்களே நீதிமன்றத்தில் வாதாடினார். அந்த நாளேடு வருத்தம் தெரிவித்துக் கொண்டதால், வழக்கு கைவிடப்பட்டது.

அப்போதே செய்தியைத் திரித்து ‘துக்ளக்’ ஒரு கேலிப்படம் வெளியிட முயன்றது. இராமர் படத்தைக் கலைஞர் செருப்பால் அடிப்பது போலவும், அருகில் நின்று பெரியார் கைகொட்டிச் சிரிப்பது போலவும் கேலிப்படம். ஆளாளுக்குச் செருப்பால் அடிப்பதைப் போல் அவர்களே கற்பனை செய்து கொண்டார்கள் போலும்!

இந்நிகழ்ச்சி நடைபெற்ற சில வாரங்களிலேயே, பொதுத் தேர்தல் நடைபெற்றது. சேலம் நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கம், தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் சரிவை ஏற்படுத்தும் என்று ஏடுகள் பல எழுதின. அவ்வளவுதான், தி.மு.க. ஆட்சி என்று ஆரவாரக் குரல்கள் எழுந்தன.

எதிர் அணியில் கைகோத்து நின்ற காமராசர், ராஜாஜி அணியின் வெற்றியை இனி எவரும் தடுக்க முடியாது என்று பலரும் கருதினர். ‘இந்துக் கடவுளைச் செருப்பால் அடித்த கட்சிக்கா, உங்களின் ஓட்டு?’ என்று ஊர் ஊராகக் கேட்டனர். நிகழ்ச்சி நடந்தது என்னவோ, சேலத்தில் மட்டும்தான். ஆனால காங்கிசாரும், சுதந்திராக் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் பரப்பிவிட்டனர். ‘இவ்வளவு செய்தும், கடவுள் அவர்களை ஒன்றுமே செய்யவில்லையே, கடவுள் என்று எவரும் இல்லை என்று பெரியார் சொல்வதுதான் உண்மையோ’ என்று பக்தர்களுக்கே சந்தேகம் வந்துவிட்டது.

கவிஞர் கண்ணதாசன், ஜெயகாந் தன், சோ மூவரும் ஓர் அணியாகப் பயணப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றியலைந்து, தி.மு.க.விற்கு எதிராகத் தேர்தல் பரப்புரை செய்தனர். தமிழக நிலைமைகளைக் கவனித்த, ஒரு மூத்த காவல்துறை அதிகாரி, தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே, வெளிப் படையாகக் காமராஜரைச் சந்தித்து, ‘அடுத்த முதல்வர் நீங்கள்தான்’ என்று கூறிப் பூங்கொத்தைக் கொடுத்தார்.

periyar karunadhini karunchettai feb142014இத்தனை கூத்துகளுக்கும் சேலம் நிகழ்ச்சிதான் காரண மாக இருந்தது. ஆனால் 1971ஆம் ஆண்டுத் தேர்தல் முடிவோ, வேறு மாதிரியாக இருந்தது.

1967 தேர்தலில் 138 இடங்களில் வென்ற தி.மு.க., 1971 தேர்தலில் 183 இடங் களில் வெற்றிபெற்றது. பெரிய வேடிக்கை என்னவென்றால், எந்த சேலத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றதோ, அந்த சேலத்தின் இரண்டு தொகுதிகளிலுமே தி.மு.கழகம்தான் வென்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர்கள், இப்போதும் சிலருக்கு நினைவிருக்கலாம். ஒருவர் ராஜாராம், இன்னொருவர் ஜெயராம். ஆமாம், அந்த இராமர் சிக்கல் மக்களிடையே எடுபடாமல் தோற்றுப் போய், இந்த இராமர்கள் இருவரும் வெற்றிபெற்றனர்.

ராஜாஜி மனம் நொந்து, ஒரு வார ஏட்டில், “தமிழ்நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதியற்ற நாடாகிவிட்டது. மகா புருஷர்கள் எல்லோரும் நாட்டைவிட்டே புறப்படத் தயாராகிவிட்டனர்” என்று எழுதினார். சென்னை திருவல்லிக் கேணியில் நடைபெற்ற நன்றியறிவிப்புக் கூட்டத்தில் பேசிய நாவலர், தனக்கேயுரிய குறும்புடன், “மகா புருஷர்கள் எல்லாரும், சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டு விடாதீர்கள். தேதியைக் குறிப்பிட்டால், நாங்கள் அனைவரும் வந்து வழியனுப்பி வைக்கிறோம்” என்றார்.

இன்னமும் புறப்பட்டுப் போகாமல் இருக்கின்ற ‘மகாபுருஷர்களில்’ ஒருவரான ஹெச். ராஜா போன்றவர்கள், சாதாரணப் புருஷர்களைப் போலவேனும் பேசப் பழக வேண்டும்.

நண்பர் சீமானுக்கும், நமக்கும் கூடப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரும் மேடைகளில் நாவடக்கம் இன்றி ஒருமையில் பேசுகின்றவர்தான். ஆனால் அவரையும்கூட, ஹெச். ராஜா அவர்கள், ‘மானங்கெட்டவன், தறுதலை, ஜந்து, மானங்கெட்ட ஜன்மம்’ என்றெல்லாம் பேசியிருப்பது, ‘அரசியல் கூட்டங்களுக்கே இனி செல்லக்கூடாது’ என்னும் எண்ணத்தைத்தான், பொது மக்களிடம் ஏற்படுத்தும். (எப்போதும் மேடைகளில், இரண்டு கைகளையும் உயர்த்தியபடி, ‘வீர முழக்கமிடும் - செந்தமிழன் சீமான்’, ஹெச். ராஜாவின் உரை குறித்து இன்று வரை ஏனோ வாயே திறக்கவில்லை!)

போகட்டும், தந்தை பெரியார் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர் மீதான் கோபங்கள் அவாளுக்கு இன்னும் குறையவில்லை என்பதையே ஹெச். ராஜாவின் பேச்சு காட்டுகிறது. எவ்வளவு காத்திரமான தலைவர் பெரியார் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. இன்னம் பலநூறு ஆண்டுகளுக்கும் கூட அவர் குறித்த இசையும் வசையும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனெனில் அவர்தான் உண்மையான ‘மகாபுருஷர்’.

Pin It