தமிழ்நாட்டுக்கு நான் முதல்வராகத் தயார் என்கிறார் கமல்ஹாசன்.

அவரை முதல்வராக்கத் தயாரா என்று மக்களிடம்தான் கேட்க வேண்டும்.

ஒரு தேசத்தின் அரசியல் எப்படித் தீர்மானிக்கப்படுகிறது என்பதும், அதனை யாரெல்லாம் தீர்மானிக்கிறார்கள் என்பதும் மிக முதன்மையானவை! தமிழ்நாட்டின் அரசியலை, அரசியலற்ற செய்திகளும், அரசியலை விட்டு விலகி நிற்போர்களுமே பல நேரங்களில் தீர்மானிக்க முயல்கின்றனர் என்பது நடைமுறை உண்மை.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக, ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவார்களா என்பதே ஊடகங்களின் விவாதப் பொருளாக இருந்தது. இப்போது அவர்கள் அரசியலை நோக்கிச் சில அடிகளை எடுத்து வைத்துள்ளனர் என்பது தெரிகிறது.

அவர்கள் எந்தத் திசையிலிருந்து வருகின்றனர் என்பது முக்கியமன்று. எந்தத் திசை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதே முக்கியமானது. நடிகர் கமலைப் பொறுத்தவரையில்,  வெளிப்படையாகவே இன்றைய தமிழக ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றார். இந்த ஆட்சி நீக்கப்படவேண்டிய ஒன்று என்னும் அளவிற்குத் தன் கருத்தைக் கூறுகின்றார். நடிகர் ரஜினியோ அப்படியெல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. வெளிப்படையாக எதனையும் பேசவும் இல்லை. அவர் அரசியலுக்கு வருவது முடிவாகி விட்டது என்று தமிழருவி மணியன்தான்  மாநாடு கூட்டிச் சொல்கின்றார். அதனை ரஜினி மறுக்கவில்லை. மௌனம் சம்மதம் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போதுதான் பிரதமர் மோடியின் இரண்டு திட்டங்களை ஆதரித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

கமலின் அரசியலில் நமக்கு இரு பெரும் கேள்விகள்  இருக்கின்றன.  ஒன்று, அவர் எந்த  சித்தாந்தத்தையும் முன்னிறுத்தி  அரசியலுக்கு வருவதாகச் சொல்லவில்லை. ஊழல் ஒழிப்பு அரசியல் என்கிறார். இது பொத்தாம் பொதுவானது. இரண்டாவது, தமிழக ஆளுங்கட்சியை நேரடியாகத் தாக்கும் அவர், மத்தியில் உள்ள ஆளுங்கட்சியை மறைமுகமாகக் கூடத் தாக்கவில்லை.

எத்திசை நோக்கினும் ஊழல் மலிந்து கிடக்கும் இன்றைய சூழலில், ஊழல் ஒழிப்பு மிகத் தேவையானதுதான். ஆனால் அது மட்டுமே ஓர் அரசியல் கட்சியின் ஒற்றை நோக்கமாக இருக்க முடியாது. ஒரு பேச்சுக்கு, ஊழலை ஒழித்து விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம், பிறகென்ன செய்வோம் என்று கூற வேண்டாமா?

இந்தியைத் திணிப்பது, மாநிலங்களின் உரிமைகளைப்  பறிப்பது, மத நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற செயல்கள் எல்லாம் நாட்டில் இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொல்ல முடியுமா? இவை குறித்தெல்லாம் எதுவும் பேசாமல், ஊழலை ஒழிப்பது குறித்து மட்டுமே பேசுவது, தெளிவற்ற நோக்கத்தை அல்லது தெளிவான உள்நோக்கத்தைக் காட்டுகின்றது.

மேலும் ஊழல் என்பது வெறுமனே பணம்,  நகை சார்ந்தது மட்டுமில்லை.  சில சாமியார்களை, அரசுக்கு வெளியில் இருக்கும் அதிகார மையங்களாக வைத்துக்  கொண்டு, நாணயமான அரசியலுக்குப் புறம்பாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்குச் சீர்கேடாகவும் நடந்து கொள்வதும் ஊழல்தான். அது குறித்தெல்லாம் கமல் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஊழலை ஒழிக்கப் புறப்பட்ட வீராதி வீரர்களான அன்னா அசாரே, கிரண் பேடி எல்லோரும் இப்போது என்ன ஆனார்கள்? ஒருவர் ஊமையானார், இன்னொருவர் துணை நிலை ஆளுநர் ஆனார்.

ரஜினியின் முதல் கீச்சே (டுவீட்) அவருடைய பாதை எது என்பதை நமக்குச் சொல்லிவிட்டது. மோடியின் தூய்மை இந்தியா அவருக்கு மிகவும் பிடிக்கிறதாம். அடுத்து, பண மதிப்பிழப்புத் திட்டமும் நல்ல திட்டமாம். இந்தியாவின் தூய்மையின்மையை வெறும் துடைப்பம் கொண்டு துடைத்துவிட முடியாது. இந்தியாவின் தூய்மைக்கு இரண்டு துடைப்பங்களும், நான்கு காமராக்களும் போதும்  என்று மோடி நினைக்கிறார். அதனை ரஜினி பாராட்டுகிறார்.

1000, 500 ரூபாய்த் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைக் ‘கறுப்புப் பணம் என்றால் என்ன என்றே அறியாத’  பெரிய மனிதர்கள் எல்லோரும்  பாராட்டுகின்றனர். வெள்ளைப் பணத்தைக் கூடப் பார்க்காத ஏழை, எளிய மக்களே அல்லல் படுகின்றனர். 

எடப்பாடி அரசு என்னும் எடுபிடி அரசை முட்டுக்கொடுத்து மத்திய அரசு காப்பாற்றுவதே, இன்னும் பல அவமானங்கள் அந்த அரசுக்கு ஏற்பட வேண்டும், அதிமுக என்று ஒரு கட்சியே இல்லாமல் போய்விட வேண்டும் என்பதற்காகத்தான். ரஜினி, கமல் போன்றவர்களின் துணையோடு அந்த இடத்தைத் தான் பிடித்துவிட வேண்டும் என்பதே பாஜக வின் திட்டம்.

திட்டம் போடுவதற்கு எல்லோருக்கும் உரிமையிருக்கிறது. ஆனால் வெற்றி பெறுவதற்கு எல்லோருக்கும் வாய்ப்பிருப்பதில்லை! 

Pin It