இந்நூலை எழுதியுள்ள தோழர் டி.ஞானையா,93ஆம் அகவையில் இன்று நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பவர். 70 ஆண்டுகளுக்கு மேலாகப் பொதுவுடைமைக் கட்சியின் உறுப்பினர். சில மாதங்களுக்கு முன் வெளியாகியுள்ள இந்நூலில், அவருடைய பரந்துபட்ட படிப்பையும், கூர்த்த மதியையும், நீண்டகாலப் பட்டறிவையும் நம்மால் காணமுடிகிறது.

பொதுவுடைமையா - பொதுவுரிமையா, எதற்கு முன்னுரிமை என்பதில்தான் பொதுவுடைமை இயக்கத்திற்கும்,திராவிட இயக்கத்திற்கும் நெடுநாள்களாக கருத்து வேறுபாடு நிலவுகின்றது.இந்நூலில் அதற்குரிய விடையைத் தோழர் ஞானையா வெளிப்படுத்தியுள்ளார்.

200 பக்கங்களைக் கொண்டுள்ள இந்நூலில், இந்து மதத்திற்கும், சாதி முறைக்கும் இடையிலான, பிரிக்க முடியாத பிணைப்பு, இந்தியாவில் வருணமே வர்க்கமாக உருமாறி நிற்கும் தன்மை,வருண சாதியை எதிர்த்த புரட்சியாளர்களின் வரலாறு,ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் போராட்டத்திற்கும்,இந்திய தலித் மக்களின் போராட்டத்திற்கும் இடையிலான ஒற்றுமை ஆகிய நான்கு செய்திகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன.இந்நான்கு செய்திகளையும், நெடுநாள் பொதுவுடைமைக் கட்சியில் பணியாற்றி பெரியவர் ஒருவர் எழுதியிருப்பதை, இந்நூலின் குறிப்பிடத்தக்க சிறப்பாகக் கொள்ளலாம்.

ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு தருமம், ஒவ்வொரு வருணத்திற்கும் ஒரு நீதி என்பதே இந்து மதத்தின் அடிப்படை. பார்ப்பான் ஒருவன் கொலை செய்தாலும், அது பெரும் குற்றமில்லை. அவனுக்கு மொட்டையடித்தல் மட்டுமே அதற்கான தண்டனை. ஆனால் சூத்திரன் ஒருவன் தவம் செய்தாலும், அது பெரும் குற்றம். அவனுக்கு மரணதண்டனையே கூட விதிக்கப்படும்.அதனால்தான்,தவம் செய்த சம்பூகன் இராமாயணத்தில் கொல்லப்படுகிறான்.தானே வில்வித்தை கற்றுக்கொண்ட ஏகலைவனின் கட்டைவிரல் மகாபாரதத்தில் வெட்டப்படுகிறது.

இவ்வாறு எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், எண்ணற்ற கடவுளர்கள் இருந்தாலும் இந்துமதம் ஒரே மதமாய் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது?ஒருபுறம் தொன்மையான பழங்குடிகளின் மரபு சார்ந்த இயற்கை வழிபாடும்,மறுபுறம் ஆரிய வேத உபநிடதக் கருத்துகளை ஏற்றுச் செயல்படுவோரின் வழிபாடும் ஒருங்கிணைந்து,ஒரே மதமாய் நிலைத்திருப்பது எப்படி?இந்து மதத்தின் அடிப்படைதான் என்ன?இவைபோன்ற எல்லா வினாக்களுக்கும்,இந்நூல் தரும் ஒரே விடை,“அனைத்து வேறுபாடுகளையும் ஏற்றுக்கொண்ட போதும், சமூக ஏற்றத்தாழ்வு, பிராமணத் தலைமை ஆகிய அடிப்படைகளை விட்டுத்தராமல் சமத்துவத்தை மறுக்கும் பிராமண ஆளுமையே,இந்து மதத்தின் அடிப்படையாக உள்ளன” என்பதுதான்.

இராஜாராம் மோகன்ராய், தயானந்த சரஸ்வதி போன்றவர்கள், சீர்திருத்தம் பேசினாலும், வேதகால வாழ்க்கைக்குத் திரும்பிப் போவேத சிறப்பு என்று போதித்தனர். தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பிய காந்தியடிகளும்,வருணாசிரம தருமத்தை ஏற்றுக்கொண்டார் என்பதுதானே வரலாறு தரும் செய்தி!

எனவே, இந்துமதம் எவ்வளவு வேண்டுமானாலும் சீர்திருத்தம் பேசும். எல்லாவிதமான நவீனங்களையும் ஏற்றுக்கொள்ளும்.இறை மறுப்பாளர்களைக் கூட முகம் சுளிக்காமல் உள்வாங்கிக் கொள்ளும்.ஆனால் பிராமணத் தலைமையையோ,சாதி அடுக்கின் உறுதிப்பாட்டையோ மட்டும் யாரும் கேள்வி கேட்க அனுமதிக்காது. ஆதலால் சாதி முறை என்பது,இந்து மதத்தின் அடிப்படையோடு இறுக்கிக் கட்டப்பட்டுள்ளது என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகின்றது.

இவ்வருணாசிரம - சாதியக் கட்டுப்பாடுகளைத் தகர்க்கப் போராடியவர்கள் குறித்தும் நூலுள் நிறைய செய்திகள் உள்ளன.

இஸ்லாமியர்கள் வருகை,இந்து மதத்தின் மீது ஒரு தாக்குதலை ஏற்படுத்தியது. ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த அறிவியல் மற்றும் உலக வரலாற்றுச் செய்திகள் இங்குள்ளவர்களிடம் ஒரு புதிய விழிப்புணர்வை உருவாக்கின.சீக்கிய குருமார்கள், வருணாசிரமத்திற்கு எதிராய்த் தங்கள் போர்க்குரலை உயர்த்தினர்.

இவ்வாறு வெளியிலிருந்து வந்த தாக்குதல்கள் ஒருபுறமிருக்க,இந்து மதத்திற்கு உள்ளிருந்தும் புரட்சியாளர்கள் பலர் தோன்றிச் சாதி முறையைத் தகர்க்க முயன்றனர். நவீன வரலாற்றில், மராத்திய மண்ணில் பிறந்த ஜோதிராவ் புலே அவர்களுள் முதலிடம் வகிக்கின்றார். அவரைத் தொடர்ந்து, மராத்தியத்தில் அம்பேத்கர், தமிழ்நாட்டில் பெரியார், அயோத்திதாசப் பண்டிதர்,கேரளாவில் நாராயணகுரு எனப் புரட்சியாளர்களின் வரிசை தொடர்ந்தது.

தங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிய இவர்களை,‘வெள்ளைக்காரனின் அடிவருடிகள்’ என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டுப் பரப்புரை செய்தனர்.

அந்த விமர்சனம் குறித்து,இந்நூலாசிரியர் ஞானையா,ஓர் அழுத்தமான செய்தியை முன்வைக்கிறார்.பிராமணர்கள் ஆங்கிலேயர்களை ஆதரிக்கவில்லையா என்று கேட்கின்றார். இலண்டனில் கல்வி பயின்று, பிரிட்டிஷ் இந்தியாவில் பெரிய அதிகாரிகளாகப் பணியாற்றியவர்களில் 95 சதவீதம் பேர் அவர்கள்தானே? தன்னுடைய ‘ஆனந்தமடம்’ நாவலில், இஸ்லாமியர்களின் வீடுகளைக் கொளுத்திவிட்டு, ‘வந்தே மாதரம்’ பாடலை இந்நுதக்கள் பாடுவதாக எழுதியுள்ள, வங்கத்தைச் சேர்ந்த பங்கிம் சந்தர் சட்டர்ஜி என்னும் பார்ப்பனர் கூட, ஆங்கிலேய அரசில் உயர் அதிகாரியாகப் பணியாற்றியவர்தானே?

இப்படிக் கேள்விகளைத் தொடுக்கும் நூலாசிரியர்,அவர்களின் இரட்டை முகங்களை வெளிப்படுத்துகின்றார். கவிஞர் இளவேனில் எழுதுவது போல, ‘அவர்கள் மான்களோடு சேர்ந்தும் ஓடுவார்கள், புலிகளோடு சேர்ந்தும் துரத்துவார்கள்’ என்பதுதானே நடைமுறை!

அம்பேத்கர் நடத்திய இரண்டு முதன்மையான போராட்டங்கள் நூலில் குறிக்கப்பட்டுள்ளன. 1927 டிசம்பர் 25 அன்று அவர் நடத்திய மனுநீதி எரிப்புப் போராட்டம், வருணாசிரமவாதிகளை நடுங்க வைத்தது. அவ்வாறே, 1930இல், நாசிக்கில் உள்ள காலாராம் கோயில் தேரைத் தலித் மக்களைக் கொண்டு இழுக்க வைத்த போராட்டமும், வரலாற்றுச் சிறப்புடையது!

நீண்ட பல வருடங்கள் பொதுவுடைமை இயக்கத்தில் பணியாற்றிய அவர், வருண - சாதி குறித்த இடதுசாரிகளின் நிலைப்பாடு பற்றியும் தன் நூலில் விளக்கியுள்ளார்.

ஆட்சி, அதிகாரம், கல்வி, ஊடகம், நீதித்துறை என அனைத்தும் பார்ப்பனர்கள் கைகளிலே இருந்தன என்று கூறும் அவர், “இடதுசாரிக் கம்யூனிஸ்ட் அமைப்புகளும் கூட அவர்களின் தலைமையில்தான் இயங்கின” என வருத்தத்தோடு எழுதுகின்றார்.

‘1964இல், இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிளவுண்டது. அப்போது, மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்களாக இருந்த 31 பிராமணர்களில் 30 பேர், சிபிஎம்-க்குச் சென்றுவிட்டனர். ஏ.எஸ்.கே. அய்யங்கார் மட்டுமே விதிவிலக்கு’ என்று குறிப்பிடும் அவர், “பிளவுக்குச் சாதி எந்த வகையிலும் காரணமாக அமையாதபோது, இது ஏன் ஏற்பட்டது?” என்று கேட்கின்றார்.

வர்க்கப் பிரச்சினைதான் அடித்தளம்.வருணம்,சாதி போன்றவைகள் எல்லாம் மேற்கட்டுமானங்கள் என்று இடதுசாரிகள் கூறுவதுண்டு. அது குறித்தும், ஓர் வலிவான வாதத்தை முன்வைக்கின்றார். “ஒரு கட்டிடத்தைத் தரை மட்டமாக்க, முதலில் மேல் கட்டுமானத்தை இடிக்க வேண்டும்” என்கிறார்.

மேலும், இந்தியாவில் சாதிகள் பெற்றுள்ள வர்க்கத்தன்மையை, கம்யூனிஸ்ட்டுகள் குறைத்து மதிப்பிட்டுவிட்டனர் என்று கூறுகின்றார். இவ்வரி, இந்தியாவின் அரசியல், சமூக வரலாற்றில் கவனமாகக் குறித்துக் கொள்ளப்பட வேண்டியதாக உள்ளது.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் போராட்டம் குறித்துச் சுருக்கமாகச் சில செய்திகள் காணப்படுகின்றன. அந்தப் போராட்டம், ஆறு கட்டங்களாக வளர்ச்சி அடைந்துள்ளமை சுட்டிக் காட்டப்படுகின்றது. இன்று அவர்கள் சமத்துவம் நோக்கி நடைபோடத் தொடங்கி விட்டனர். ஆனால் நம் நாட்டிலோ, சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவர்கள் இன்னும் வெகுதூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது என்கிறார் ஞானையா.

அண்மையில் வந்துள்ள மிக நல்ல நூல்களில் இதுவும் ஒன்று.இப்புத்தகத்திற்கு நாம் கொடுக்கும் விலை செலவன்று. முதலீடு!

வெளியீடு: விழிகள் பதிப்பகம்
8எம்/139,7ஆம் குறுக்குத் தெரு,
திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,
சென்னை- 41, தொ.பேசி: 94442 65152
விலை: ரூ.150/- 

Pin It