‘.......இரண்டு வயது குழந்தையைப் பார்த்த நொடியில் ஓர் ஆணின் உறுப்புக்குத் திமிர் வந்து விடும் ஒரு நாட்டில், ஒரு பெண் தன் குழந்தையைப் பிரசவிக்கும் வலிக்கு மட்டும் என்ன மரியாதை கொடுத்து விடப் போகிறீர்கள்?’ - நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடித்தது போல இருக்கிறதல்லவா இந்தக் கேள்வி!

 ஒரு பெண்ணின் உடலை வைத்து இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ள போலியான கற்பிதங் களைப் போட்டு உடைக்கிறது ‘களிமண்ணு’ என்ற மலையாளப் படம். அதில் கதாநாயகியின் உண்மையான பிரசவக் காட்சி இடம் பெற்றுள்ளது. ‘பிரசவம் என்பது புனிதமானது, அதை எப்படிப் படம் பிடித்துக் காட்டலாம்’ என்று சொல்லி எதிர்ப்பவர்களைப் பார்த்து நாயகி ஸ்வேதா மேனன் கேட்கும் கேள்வி தான் இது.

கேள்வியின் உண்மை நம்மைச் சுடுகிறதா இல்லையா? மத அடிப் படைவாதிகளுடைய புனிதத்தின் மீது அடிக்கும் மல நாற்றத்தில், நாடே மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. உலக நாடுகளில் இந்தியாவின் அடையாளமாக, காவிக் கூட்டம் பெருமையோடு தூக்கிப்பிடிக்கும் ஆன்மிக மடங்களான ஆசிரமங்களின் அசிங்கமான பக்கங்கள் நாள்தோறும் தலைப்புச் செய்திகளாகிக் கொண்டி ருக்கின்றன.

72 வயது சாமியார் அஸ்ராம் பாபு. 16 வயது மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்திருக்கிறார். இதுவே கேவலமான செயல். ‘எனக்கு 72 வயது ஆகிவிட்டது. எனவே ஆண்மைத்தன்மை இல்லை. என்னால் கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபட முடியாது’ என்று சொன்னது அதைவிட அசிங்கமானது. அஸ்ராம் பாபு கைது செய்யப்பட்டதும், அவரது ஆதரவாளர்கள்(!) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கேடுகெட்ட பிறவிகளை எதைக் கொண்டு அடிப்பது?

அவருடைய மகன் நாராயன் சாய், ‘என் தந்தை கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்களில் போலீசா ருக்கு ஒத்துழைப்பு அளித்ததைப்போல இனி வருங்காலங்களிலும் ஒத்துழைப் பார். கடந்த காலங்களைப் போல இந்த வழக்கிலும் அவர் வெற்றி பெறுவார்’ என்று பேட்டியளித் துள்ளார். அப்படியானால், சாமியார் அஸ்ராம் பாபு மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகும் ஊருக்கு ஊர் ஆசிரமங்களை நடத்தி வந்திருக்கிறார் என்றால், சாமியார் மட்டுமில்லை, சுற்றி இருக்கிற சமூகமும் சரியில்லை என்றுதானே பொருள்?

இந்த நாட்டில் சிறைக்குப் போய்விட்டு வந்தால், அரசியல் வாதிகள் மட்டுமல்ல, ஆசிரமவாசிகள் கூட புகழ்பெற்றவர்கள் ஆகிவிடுகிறார் கள். ஊடகங்கள் அப்படியே அவர் களைக் கொண்டுபோய் உச்சத்தில் வைத்துவிடுகின்றன. ஏதோ வாரத்திற்கு நான்கு தியானக்கூட்டம், சொற் பொழிவு என்று பிடதி ஆசிரமத்திற் குள்ளேயே அடக்க ஒடுக்கமாக இருந்தவரை, ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்று சொல்லி மெல்ல நகர்த்திக் கொண்டுவந்து வெளியில் விட்டது ஒரு வாரஇதழ். அதில் கிடைத்த புகழ் வெளிச்சத்தில், என்னென்னவோ வெளியில் வந்து, வழக்கு, விசாரணை, சிறை என்று போக, இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில், ‘நித்ய தர்மம்’ சொல்லி, பல குடும்பங்களின் சிக்கல் களைத் தீர்த்து வைத்துக்கொண்டி ருக்கிறார். யாரைச் சொல்கிறேன் தெரிகிறதா? ஆம் அவரேதான்!

மதுரை ஆதீனத்தைப் பிடித்து ஆட்டிய பிடதி சாமியார் நித்தியானந் தாவேதான்!

கொலைகார மடாதிபதி அருளாசி வழங்குகிறார்! பெண்ணைக் கெடுத்த சாமியார் அறிவுரை சொல்கிறார்! அடுத்து அஸ்ராம் பாபு சாமியார் என்ன சொல்லப் போகிறாரோ? என்ன இருந்தாலும் வயதில் மூத்தவர் இல்லையா, அருளாசியும், அறிவுரையும் சேர்த்தே வழங்குவார் என்று எதிர்பார்க் கலாம்!

எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்ல முடிகிறது என்று கேட்கிறீர்களா? பாலியல் குற்றங்களின் விசாரணைப் போக்கும், தண்டனை அறிவிப்பையும் பார்க்கும்போது வேறு எப்படிச் சொல்லத் தோன்றும்?

டெல்லி மாணவி பாலியல் வன் கொடுமை வழக்கில், ஆறு பேரில் ஒருவன் சிறையிலேயே தூக்கிட்டுக் கொண்டான். மீதமிருந்த ஐந்து பேரில், ஒருவனுக்கு மட்டும் தண்டனை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வன்கொடுமை நடந்து சுமார் ஏழே மாதங்களில் விசாரணை முடிந்து தீர்ப்பும் வந்துவிட்டதே என்று சற்று ஆறுதல் பட்ட வேளையில், இளம் குற்றவாளி என்று சொல்லி ஒருவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

ஒரு பெண்ணின் உடலின் மீது மிகப்பெரிய வன்முறையை நிகழ்த்திய ஒருவனை சிறார் நீதிமன்றத்தில் விசாரித்து, சிறார் சட்டப்படி தண்டனை வழங்கியது சரியன்று என்பதே பெரும்பாலனவர்களின் கருத்து. நம்முடைய கருத்தும் அதுதான். 18 வயது கூட நிறைவடையாதவன், தன்னைவிட வயதில் மூத்தவர்களுடன் கூட்டு சேர்ந்தது எதன் அடிப்படையில்? இன்று நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதில், பெரியவர்களை விட, இளம் வயதினர், அதிலும் குறிப்பாகப் பள்ளிப்பருவத்துப் பிள்ளைகள்தான் முன்னணியில் உள்ளனர். எனவே அந்த இளம் குற்றவாளி தான் செய்வது எத்தனை கொடுமையான காரியம் என்பதை உணராமல் செய்திருக்க வாய்ப்பில்லை.

இதே போன்றதொரு பாலியல் வழக்கின் மேல் முறையீட்டின் போது, நீதிபதி கியான் சுதா மிஸ்ரா தலைமை யிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், நன்கு ஆராய்ந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் தேவையான சீர்திருத்தங் களைச் செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. குற்றத்தின் கொடிய தன்மையையும், அது ஏற்படுத்திய விளைவுகளையும் கொண்டு, வயதை முன்னிலைப் படுத்தாமல் தண்டனை வழங்குவதே நியாயமாக இருக்கும்.

மும்பையில் பெண் புகைப்பட நிபுணர் கூட்டு வன்புணர்ச்சி செய்யப் பட்ட வழக்கில், குற்றவாளிகள் தூக்கி லிடப்பட வேண்டும் என்ற கோரிக் கைகள் மீண்டும் எழத் தொடங்கி விட்டன. இதே கோரிக்கைகள், மடாதி பதிகளுக்கு எதிராகவோ, சாமியார் களுக்கு எதிராகவோ எழுப்படுவ தில்லை என்பது ஒரு புறம் இருக்கட் டும். உலகளவில் இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு என்ற கருத்து வலுவடைந்து வருகிறது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

இதோ கட்டுரையை முடிக்கும் நேரத்தில், தில்லி மாணவி வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது. நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை என்று விரைவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மரணம் எப்படித் தண்டனையாக முடியும்?-

இவர்கள் வெறும் குற்றவாளிகள் மட்டுமல்லர் மனநோயாளிகளும் கூட. எப்படி என்கிறீர்களா?

இந்த ஆறு பேரின் கொடுஞ் செயலில், பாலுணர்வு மட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. அதையும் தாண்டிய ஒருவிதமான வக்கிரமான மனநிலை தென்படுவதைப் பார்க்க முடிகிறது. இவர்களுக்குக் கொடுக்கும் மரணதண்டனை, இதேபோன்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு ஒருநாளும் அச்சத்தை விளைவிக்காது - குற்றங்கள் நடப்பதையும் தடுக்காது.

இவர்களுக்கு வாழ்நாள் தண்டனை அளிக்கப்படுவதே சரியானது.

Pin It