முன்னாள் மத்திய அமைச்சர் சாந்திபூ­னின் மகன் பிரசாந்த் பூ­ன். இவர், இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்.

அண்மையில் ஊழலை ஒழிக்க வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பிய அன்னாஅசாரேயின் குழுவில் பிரசாந்த் பூ­னும் ஓர் உறுப்பினர்.

கடந்த 12ஆம் தேதி பிரசாந்த் பூ­ன் உச்சநீதிமன்றத்தில் தன் அலுவலகத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்துக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது, அவரைச் சந்திக்க முன் அனுமதி பெற்றுள்ளதாகக் கூறி, அறைக்குள் நுழைந்த இரு இளைஞர்கள், பிரசாந்த் பூ­னைக் கடுமையாகத் தாக்கிய செய்தியைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

“காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இருப்பது குறித்து அங்குள்ள மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, அவர்கள் பிரிந்து போக நினைத்தால் விட்டுவிடுவோம் ” ‡ என்று அண்மையில் கருத்து தெரிவித்ததற்காகத்தான் இந்த வன்முறைத் தாக்குதல் என்பது அதிர்ச்சியான செய்தி.

இந்த வெறியாட்டத்தை நடத்திய இரு இளைஞர்களும் ஸ்ரீராம் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று செய்தி வெளியாகி யுள்ளது. இது இந்துத்துவ அமைப்புகளின் ஒரு பிரிவு.

காஷ்மீர் மாநிலம் பற்றிக் கருத்துக் கூற யாருக்கும் உரிமை உண்டு. சொல்லப்படும் கருத்து ஏற்புடையதா, ஏற்புடையது அன்றா என்பது வேறு விசயம். ஏற்புடையது அன்று என்றால் அதற்கான மாற்றுக் கருத்தைக் கூறலாம். இது அறிவுடையோர் செயல்.

அகண்ட பாரதம் என்ற இந்துத்துவாவின் சிந்தனையில் அறவழிக்கோ, கருத்து எழுத்து சுதந்திரத்திற்கோ இடம் இருக்க வழியில்லை. வன்முறையும் வெறியாட்டமும் தான் அவர்களின் கொள்கை வழியாக இருக்கிறது. பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா ரயில் எரிப்பு, பெங்களூரில் இளம் பெண்களை ஓட ஓட அடித்தது போன்ற வெறிச்செயல்கள்  இதற்குச் சான்று.

இப்பொழுது உச்சநீதிமன்றத்திலேயே நுழைந்து வழக்கறிஞரைத் தாக்கியிருக்கிறார்கள் என்றால்,  இவர்கள் நீதியை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை நாடும் மக்களும் கவனிக்கிறார்கள். பிரசாந்த் பூ­ன் இந்து வெறியர்களால் தாக்கப்பட்டது கண்டனத்திற்கு உரியது.

வடஇந்தியாவில் மட்டுமில்லை, தமிழகத்திலும் சங் பரிவாரங் களின் வளர்ச்சி இப்படிப்பட்ட விளைவுகளைத்தான் கொண்டு வரும். இருபது நாட்களுக்கு முன்பு, திராவிடர் கழகம், சென்னை விருகம் பாக்கத்தில் நடத்திய பெரியார் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்.சைச் சேர்ந்தவர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியனும் மேடையில் பேசிக்கொண்டு இருந்தபோது, கற்களாலும், குழல் விளக்குகளாலும் தாக்கியதை நாம் அறிவோம். இவையயல்லாம் அவர்களின் பிறவிக் குணம். வன்முறையில் பிறந்து, வன்முறையில் வளர்ந்து, வன்முறையிலேயே வாழ்ந்து வரும் இயக்கம்தான் சங் பரிவார்.

இந்தியாவில் எதிர்க்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால், தப்பித்தவறி ஆளும் கட்சியாக வந்துவிட்டால் கருத்துரிமை என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாதே, தடி கொண்டு தாக்கு என்று சொன்ன முசோலினியின் பாசிசம் எடுத்துள்ள இந்திய வடிவம்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல். இதன் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரின் கடமையாகும்.

Pin It