இரண்டாண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் நடைபெற்ற, நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டும் காட்சிகளை லண்டன் பிபிசியின் 4ஆவது அலைவரிசை அண்மையில் ஒளிபரப்பியது. பிரித்தானிய அதிபர் கேமரூன் உள்பட, பன்னாட்டு அரசுகளும், உலக மக்களும் அது கண்டு அதிர்ந்து போனார்கள். ஈழத்தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி நெற்றியில் சுடுவதும், நம் தமிழச்சிகளை வல்லுறவுகளுக்கு உள்ளாக்குவதும் குழந்தைகளின் மூளைகள் சிதறச் சுட்டுத்தள்ளுவதுமாக அந்த ஆவணப்படம் நம் வரலாற்றின் கொடிய நாட்களைக் காட்டுகிறது. அப்படத்தின் குறுந்தகடுகளை பல்லாயிரக்கணக்கில் படி எடுத்து,அதில் தன் உரையையும் சேர்த்துக் கொண்டு, ஒவ்வொரு கல்லூரி வாசலாய்ப் போய் நின்று மாணவ மாணவிகளிடம் அதனைக் கொடுத்து வருகிறார் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள். ஈழத்தில் நடந்து கொடுமைகளை நம் இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் அவருடைய பணியைத் தலைவணங்கிப் பாராட்டு கிறோம். ஒவ்வொருவரும் இதுபோன்ற பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.

பாராட்டி வரவேற்கிறோம்

சமச்சீர்க் கல்வியை இவ்வாண்டே நடைமுறைப்படுத்தக் கோரி திராவிடர் கழக மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசு அமைத்த குழுவின் ஒருதலைப் பட்ச அறிக்கையையும் அன்று கொளுத்தினர். அதன் பொருட்டு கைது செய்யப்பட்ட அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இப்போது பிணையில் வெளிவந்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி ஏற்பட்ட பிறகு முதலில் சிறை பார்த்து வந்திருக்கும் அந்த மாணவ வீரர்களைப் பாராட்டி வரவேற்கிறோம். சமச்சீர்க்கல்விக்காக சிறைகளை நிரப்பும் போராட்டம், வரும் நாள்களில் தவிர்க்க இயலாததாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது

Pin It