“காதில் குண்டலம் ஆட, கனத்த சாரீரம் பாட, காய்ச்சிய பால் தொண்டையில் ஓட, கண்கள் கதியற்றுக் கன்னியரை நாட....” இது வேலைக்காரி படத்தில் சாமியார்களைப் பற்றி அண்ணா எழுதிய உரையாடல். 61 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைமை அப்படியேதான் இருக்கிறது. விதவிதமான சாமியார்களும், வகை வகையான ஏமாற்றுதல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. பிடிபட்டவர்கள், இன்னும் பிடிபடாதவர்கள் என்று சாமியார்களில் இரண்டு வகை. இப்பொழுது சிக்கியிருப்பவர் நித்தியானந்தா.

வீட்டுக்கு வந்து ‘ஆசீர்வதித்தால்’ ஒரு இலட்சம் ரூபாய், நிறுவனங்களுக்கு வந்து ‘ஆசியுரை’ வழங்கினால் 11 இலட்சம் ரூபாய் என்று போட்டி போட்டுக் கொட்டிக் கொடுத்து, நித்தியானந்தாவைக் கோடிசுவரர் ஆக்கியவர்கள், அறியாமையில் திளைக்கும் நம் மக்கள்தான். அவர்கள்தான் இப்போது அவர் படத்தைக் கிழித்து, ஆசிரமத்தைத் தாக்கி வெகுண்டு எழுந்துள்ளனர்.

மக்களோடு மக்களாய்ச் சேர்ந்து கொண்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியினரும் நித்தியானந்தாவைத் தாக்கத் தொடங்கியுள்ளனர். இது ஒரு விதமான தற்காப்பு முயற்சி. மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை ஏமாற்றும் மோசடிக்காரர்களை மக்கள் புரிந்து கொண்டு கிளர்ந்து எழுந்துவிடாமல் தடுக்கும் முயற்சி. இவை எல்லாம் கடவுள் பக்தியாலோ, மதத்தினாலோ ஏற்பட்டுவிட்ட தவறுகள் இல்லை, சில தனி மனிதர்களின் பிழைதான் என்று காட்டும் முயற்சி.

இதிலும் கூட நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு கோணம் உள்ளது. நித்தியானந்தா ஆசிரமம் தாக்கப்பட்டதைப் போல, காஞ்சி சங்கராச்சாரியார் குறித்துப் பாலியல் குற்றச்சாட்டும், கொலைக் குற்றச்சாட்டும் எழுந்தபோது, சங்கரமடத்தின் மீது ஒரு சிறு கல் கூட வீசப்படவில்லை. அப்போது இந்து முன்னணியும், இந்து மக்கள் கட்சியும் வாயடைத்துப் போய்த்தான் இருந்தார்கள். மோசடி செய்வதற்குக் கூட மொத்தக் குத்தகை அவாளிடமே இருக்க வேண்டுமென்று நினைக்கிறார்கள் போலும்.

அண்மைக் காலமாக, யோகாசனம், தியானம் போன்றவைகள் பரபரப்பாக விளம்பரம் செய்யப்படுகின்றன. யோகா உடலுக்கும், தியானம் மனத்திற்கும் சில நன்மைகளைச் செய்யக்கூடும். எனினும் அவைதான் ‘சர்வரோக நிவாரணி’ என்பது போல ஒரு தோற்றம் இங்கே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இயந்திரமயமான வாழ்க்கையும், ஏராளமான எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் ஏமாற்றங்களும் மிக விரைவில் விரக்தியை மனிதர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. விரக்தியடைந்த மனிதர்களும், ஆசை நிறைந்த மனிதர்களுமே, சாமியார்களின் மூலதனத்திற்கான கச்சாப் பொருளாக உள்ளனர்.

யோகா, தியானம் போன்றவைகள் இன்று முழுக்க முழுக்க வணிக மயமாகிக் கொண்டிருக்கின்றன. ‘ஸ்வாமிஜி’களும், ‘மகராஜ்’களும் உலகச் சந்தையில் யோகாவைப் பரப்பி, பணம் செய்து கொண்டுள்ளனர். சில ‘மகரி´’கள் சொந்த விமானமே வைத்துள்ளனர். ‘முற்றும் துறந்த’ இவர்கள் அமர்வது தங்க சிம்மாசனத்தில்; அருந்துவது பாதாம்பால்; அழைப்பது நடிகைகளை - அன்றாடம் உபதேசம் செய்வது மட்டும் பிரம்மசரியத்தை!

இந்துத்வா கோட்பாட்டிற்குத் தொடர்புபடுத்தி, இந்து மத வெறியை ஊட்டுவதற்கும் இவர்களுக்கு யோகா பயன்படுகிறது. ஆனால் யோகாவிற்கும், இந்துத்வாவிற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

சித்தர்களில் ஒருவரான பதஞ்சலிதான், இவை குறித்து விளக்கமாகக் கூறியுள்ளவர். இமயம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகரம், தாரணி, தியானம், சமாதி என எட்டுவகை யோகங்களை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.

யோகாசனம் 20 வகைகள் என்று ஒரு சாராரும், 34 வகைகள் என்று இன்னொரு சாராரும் கூறுகின்றனர். இவை உடலுக்குச் சில பயிற்சிகளைத் தருகின்றன. நரம்புகளுக்கும், தசைகளுக்கும் சில புத்துணர்வைத் தருகின்றன. அவ்வளவே. அதனைத் தாண்டி இதற்கும், மதத்திற்கும் ஒட்டுறவு ஏதுமில்லை.

தியானம் என்பது மனக்கட்டுப்பாடு அல்லது மன ஒருமைப்பாட்டிற்குரிய பயிற்சி மட்டுமே. குண்டலினி சக்தியை எழுப்புதல், அட்டமா சித்திகளை அடைவது போன்றவைகளை அறிவியல் உலகம் இன்றுவரை ஏற்கவில்லை.

ஆணின் விந்து என்பது, உயிர் அணுக்களைக் கொண்ட திரவம். பெண்ணின் நாதம் என்பது, சினை முட்டைகளைக் கொண்ட திரவம். இவை ஒன்றுடன் ஒன்று சேரும்போது, மறு உற்பத்திக்கு வழி உண்டாகிறது. இவை இரண்டையும் (விந்து, நாதம்) கட்டுப்படுத்தி, ஒரு மையத்திலிருந்து, இன்னொரு மையத்திற்குக் கொண்டு செல்வதையே குண்டலினி சக்தியை எழுப்புதல் என்கின்றனர். இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. குண்டலினி சக்தி உற்பத்தியாகும் மூலாதாரம், தொப்புளுக்குக் கீழே, சிறுநீர்த் துவாரங்களுக்கு மேலே உள்ளது என்பர். இக்கூற்றே அறிவியலுக்கு முரண்பட்டதாக உள்ளது. அறிவியலின்படி, ஆண்களுக்கு விந்து உற்பத்தியாகும் இடம் விதைப்பைகள்தான். பெண்களுக்கோ, அடிவயிற்றின் இரு புறங்களில் உள்ள சினைப்பைகளிலிருந்துதான் சினை முட்டைகள் உருவாகின்றன.

ஜீவ சமாதி அடைவதற்கு முன், எட்டுவகை யோகம் பயின்றவர்களுக்கு, எட்டு வகை ஆற்றல்கள் (அட்டமாசித்திகள்) வரும் என்பதும் மெய்ப்பிக்கப் படாத ஒன்றுதான். பெரியதைச் சிறியதாக்குவது, சிறியதைப் பெரியதாக்குவது, கனமானதை லேசாக்குவது, லேசானதைக் கனமாக்குவது, நீரிலே நடப்பது,வானிலே பறப்பது, கண்ணுக்குத் தெரியாமல் உலாவுவது, கூடுவிட்டுக் கூடு பாய்வது போன்றவை அனைத்தும் வெறும் அம்புலிமாமா கதைகள்.

இவற்றையயல்லாம் நம்பி, சாமியார்களைத் தேடிச் செல்லும் ஆயிரக்கணக்கான நம் மக்களே, ஆசிரமங்களின் அடித்தளங்கள்.

யோகா, தியானம் போன்றவைகள் கூட உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்குத் தேவை இல்லாதவைகளே. வைட்டமின் மாத்திரைகள் நல்லவை என்பதற்காக, எல்லோருக்கும் கொடுக்க வேண்டியதில்லை. தேவைக்கு ஏற்பத்தான் மருந்து, தேவைப்படுவோருக்கு மட்டும்தான் தியானம், யோகா எல்லாம்!

இந்தத் தெளிவு மக்களுக்கு ஏற்பட்டு விடுமானால், மோசடிச் சாமியார்களிடம் மோசம் போக வேண்டி இருக்காது.

இன்றைய சூழலுக்கு -

- யோகா, தியானம், பக்தி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்கள்

- பக்திப் பரவசத்தில் புத்தியை இழக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்

- சாமியார்களின் ‘செக்ஸ்’ படங்களைத் திரும்பத் திரும்பக் காட்டி வணிகம் வளர்க்கும் ஊடகங்கள்

- அவற்றைப் பார்க்க, முண்டியடித்துக்கொண்டு குறுந்தட்டுகளை 500,600 ரூபாய் கொடுத்து வாங்கும் ரசிகப் பெருமக்கள்

என அனைவருமே காரணமாகின்றனர். “பக்தி வந்தால் புத்தி போகும். புத்தி வந்தால் பக்தி போகும்” என்பார் தந்தை பெரியார். பகுத்தறிவுக் கருத்துகள் முழுவீச்சில் பரப்பப்பட வேண்டும் என்பதே நம் முன்னால் இப்போது உள்ள கடமை !

- சுப.வீரபாண்டியன்

Pin It