perarivalan-murugan-santhan

நீதிமன்றத்தின் நோக்கம் குற்றம் செய்த ஒருவர் வாழ்நாள் முழுவதும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதா? அல்லது குற்றம் உணர்ந்து வருந்தி, திருந்தி மறுவாழ்வு பெற வேண்டும் என்பதா?

முன்னதை ஏற்றால், சிறைக்கோட்டம் கறைக் கோட்டம் ஆகிவிடும். பின் சொன்னதை ஏற்றால் சிறைக் கோட்டம் அறக்கோட்டமாக மாறும்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் மரண தண்டனை, உச்ச நீதிமன்றத்தால் வாழ்நாள் தண்டனையாக மாற்றப்பட்டு, தமிழக அரசுக்கு அவர்கள் விடுதலை குறித்து ஒரு வழிகாட்டலும் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஜெயலலிதா உரிய முறையில் செயல்படாமலும், மத்திய அரசுடன் பேசி சுமுகத் தீர்வுக்கு வழிகாண முயலாமலும், மூன்றே நாளில் விடுவிப்பேன் என்று சட்டமன்றத்தில் கூறி, மத்திய அரசுடன் ஒரு மோதல் போக்கை உருவாக்கிச் சிக்கலை ஏற்படுத்தி விட்டார்.

இச்சிக்கலைப் பயன்படுத்திக் கொண்டது மத்திய அரசு. மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடி இவர்களின் விடுதலைக்கு எதிராக அது நடவடிக்கையை மேற்கொண்டது. அதே நிலைப்பாட்டை இப்போது ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க. அரசும் மேற்கொண்டுள்ளது.

மரணதண்டனை வாழ்நாள் தண்டனையாக மாறினாலும், இன்றும் அவர்கள் வாழ்க்கையை இழந்து கொண்டு இருக்கிறார்கள். இருபது ஆண்டுகள் வாழ்நாள் தண்டனை என்பதும், நன்னடத்தைக்காக அதில் 6 ஆண்டுகளைக் குறைக்கலாம் (Remission) என்பதும் மரபு. இம்மரபும் இப்போதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை.

வாழ்நாள் தண்டனை என்பதற்கும் காலவரையறை வேண்டும். சாகும்வரை சிறையில்தான் இருக்க வேண்டும் என்றால், அதற்கு மரண தண்டனையே மேல்.

தண்டனை என்பது செய்த குற்றத்தை உணர்ந்து திருந்துவதற்குத்தான். மீண்டும் அவன் மறுவாழ்வு பெற விடுதலை பெற்றே ஆக வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் செய்யாத குற்றத்திற்காகத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தூக்குக் கயிறு தண்டனையே கொடுமை. அக் கயிறு அறுந்து இனி, வாழ்க்கைக்கான வெளிச்சத்தைப் பார்க்கலாம் என்று இருந்த அவர்களின் நம்பிக்கையை அறுக்க முயல்வது அதனினும் கொடுமை. இது தொடர்பான மத்திய அரசின் அணுகு முறையும், செயலும் ஏற்புடையதல்ல.

மனித நேயத்தை வாயால் பேசுவதும், எழுத்தில் எழுதுவதும் எளிது. செயலில் காட்டுவதே அறம். மூவர் விடுதலையில் மத்திய அரசின் குறுக்கீட்டை விலக்குவது அறத்தினும் அறம்.

Pin It