ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, கல்வியைச் சார்ந்தும் இருக்கிறது.

பார்ப்பனியத்தால் தமிழர்களின் கல்வி தொடக்க காலம் முதல் தடுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்தது என்பது வரலாறு. இப்பொழுது நிலைமை வேறு. ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகும், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உழைப்பாலும் கல்வியை முற்றிலுமாகப் பார்ப்பனியத்தால் தடுக்க முடியவில்லை.

ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளி இறுதியாண்டின் தேர்வு களை எழுதுகிறார்கள். முடிவுகளும் கல்வித் துறையால் வெளியிடப்படுகிறது. அம்முடிவுகளின் போது, முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்கள் படித்த பள்ளிகளையும் நாளிதழ்கள் செய்தியாக வெளியிடுகின்றன.

பெரும்பாலும் இந்தப் பள்ளிகள் மாநகரம், நகரம் சார்ந்த, அதுவும் பிரபலமான பள்ளிகளாகவே இருக்கும். சிற்றூர்களின் பள்ளிகள், அதன் மாணவர்கள் பற்றிய செய்தி களைக் காண்பது அரிதாக இருக்கும்.

அப்படிப்பட்ட சிற்றூர், ஈரோடு மாவட்டம் அந்தியூர். பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. பள்ளியின் தலைமை ஆசிரியராக மட்டுமல்லாமல், மனிதநேயமிக்க மனிதராகவும் இருப்பவர் திரு. சண்முகம் அவர்கள்.

இப்பள்ளியில்பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை மாணவர்களின் கல்வி தொலைந்து விடக்கூடாது என்று அம்மாண வர்களின் கல்வியில் மிகவும் அக்கறை கொண்டவர் திரு. சண்முகம். அவர்களின் கல்விக்கு அனைத்து வகையிலும் உதவிசெய்து மாணவர்களுக்கு உதவியாக நிற்பவர்.

இவரின் உழைப்பால், 2006 -2007 ஆம் ஆண்டுத் தேர்வில் ஈரோடு மாவட்டத்தில், 10 ஆம் வகுப்பில் முதல் மாணவன் இந்தப் பள்ளியில் இருந்து வெற்றிபெற்றார். 12 ஆம் வகுப்பில் இருந்து 2 ஆம் இடத்தைப் பெற்ற மாணவர் இப்பள்ளியில் இருந்து வெற்றி பெற்றார். 2008 - 2009 ஆம் ஆண்டிலும், அடுத்த 2009 - 2010 ஆம் ஆண்டிலும் மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பில் 1 மற்றும் 2 ஆம் இடங்களில் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

குறிப்பாக இப்பள்ளியில் படித்த இரா. நந்தகுமார் என்ற மாணவர் 1200க்கு 1149 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவராக வெற்றியை ஈட்டியுள்ளார். இவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக ஏழை மாணவர். இன்னொரு செய்தி 2007 -2008 ஆம் ஆண்டில் ஈரோட்டில் உள்ள 68 பள்ளிகளில் கல்வியில் சிறந்த படைப்பாற்றல் மிக்க பள்ளி என்ற விருதை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இப்பள்ளி பெற்றுள்ளது என்றால், தலைமை ஆசிரியர் சண்முகத்தின் உழைப்பு கண்முன் தெரிகிறது.

சிந்தனையாலும், செயலாலும், சாதியப் பார்வை இல்லாமல் ஏழை எளிய மாணவர் களின் கல்வியில் உறுதுணையாக இருந்துவரும், தலைமை ஆசிரியர் எவ்வளவு பாராட்டுக் குரியவரோ, அவ்வளவு பாராட்டும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தும் மாணவச் செல்வங் களுக்கும் உரியதாகும் !

பாராட்டுக்குரிய பள்ளி, பாராட்டுக்குரிய தலைமை ஆசிரியர். ஏனையவர்களுக்கு இது முன்னுதாரணம்.

Pin It