எப்படியோ பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன! எந்தக் கவிதைச் சூரியனின் எழுச்சி யயாளியைக் கடன் பெற்று, இளம் நட்சத்திரக் கவிஞர்கள் ஆவேசக் கவிதை பாடிக் கொண்டிருந்தார்களோ, அந்தப் பாட்டுப் பரிதியை அருகே சென்று சந்தித்து அளவளாவும் பெருவாய்ப்பு அன்றுதான் எனக்குக் கிட்டியது.

அந்த நாள்தான் 26.01.1962

‘பாண்டியன் பரிசு’ பாவியத்தைத் திரைக் காவியமாக்கிப் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவுடன் பாவேந்தர் அவர்கள் சென்னைத் தியாகராய நகர், இராமன் தெருவில் எண்.10 இல்லத்திற்குக் குடி பெயர்ந்து வந்திருந்தார்.

தமிழகம் முழுமையும் விரவி நின்று, பாமாலை தொடுத்துக் கொண்டிருந்த தமிழ்க் கவிஞர்களை எல்லாம் ஒருங்கே திரட்டி, தமிழ்க் கவிஞர் மன்றம் எனும் பூமாலையில் ஒன்றாக்கிக் காட்ட வேண்டும் என்ற பெருவேட்கையுடன் செயல் திட்டம் வகுத்தார் பாவேந்தர்.

சென்னைச் சட்டக் கல்லூரித் தமிழ் பேரவைத் தலைவனாகப பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கும் ஓர் அழைப்பு வந்தது.

அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு ஏட்டிலும், கலைஞரின் முத்தாரத்திலும், கவியரசர் கண்ணதாசனின் தென்றலிலும், மதியழகனின் தென்னத்திலும், மற்றும் பிற ஏடுகளிலும் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். என் பாடல்களையும் தன் குயில் இதழில் வெளியிட்டு, ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த பாவேந்தரை நேரில் சந்தித்து உரையாடப் போகும் வாய்ப்பை எண்ணி நெஞ்சம் சிலிர்த்துப் போனேன்.

இன்றைய தமிழ்க் கவிஞர் பெருமன்றப் பொதுச்செயலளார் ‘முல்லைச் சரம்’ கவிஞர் பொன்னடியான் அவர்கள் உடனிருந்து ஓடியாடிப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

பேரெழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன், பேராசிரியர் சி.பாலசுப்பிரமணியன், கவிஞர்கள் நாக.முத்தையா, நாரா. நாச்சியப்பன், தமிழழகன், முருகு சுந்தரம், தமிழ்முடி, அமீது, பாரதியாரின் இளையமகள் சகுந்தலா பாரதி என்று பலரும் பாவேந்தரின் திட்டங்களைக் கேட்கக் கூடியிருந்தோம்.

ஒவ்வொருவரும் எழுந்து நின்று எங்களை அறிமுகம் செய்து கொண்டோம்.

பாட்டாளிகளைக் கூட்டியதன் காரணத்தை விரிவாகவும், செறிவாகவும் விளக்கினார் பாவேந்தர்.

‘அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம்’ என்று நம் கூட்டமைப்புக்குப் பெயர் சூட்டலாம் என்றார் அவர்.

 ஐயா என்று மெல்லத் தயக்கத்துடன் நான் பேச முயன்றேன்.

என்ன? எழுந்து தயங்காமல் கேளுங்கள் என்றார் பாவேந்தர்.

“ஐயா, நம் அமைப்புக்கு இவ்வளவு நீளமான பெயர் தேவைதானா? ‘கவிஞர் மன்றம்’ என்றால் போதும் அல்லது ‘தமிழ்க் கவிஞர் மன்றம்’ என்றிருந்தாலும் போதும்; வேண்டுமானால் ‘உலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம்’ என்றுகூட வைத்துக் கொள்ளலாம்; அது ஏன் ‘அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம்’ என்ற நீண்ட பெயரை வைக்க வேண்டும்? இப்படிக் கேட்ப தற்காக என்னை மன்னிக்க வேண்டும்” என்று தாழ்ந்த குரலில் பேசினேன்.

 “நல்ல கேள்வி கேட்டீர்கள்! உங்கள் வினாவை வரவேற்கின்றேன். ஏன் தெரியுமா இந்தப் பெயர்? இன்றைய அறிவுலகம் எங்கேயோ விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் மனிதன் நிலவு உலகில் சென்று குடியேறலாம்; செவ்வாய்க் கிரகம் சென்று வாழ முற்படலாம்; அப்படிப்பட்ட வேற்று உலகங்களில் எல்லாம் கூட நம் பெருமன்றத்தின் கிளைகள் உருவாகித் தழைக்க வேண்டும் என்ற தொலை நோக்குடன் தான் இப்பொழுதே, அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன்றம் என்று எண்ணிப் பார்த்துப் பெயர் வைத்திருக்கின்றேன்” என்றார்.

கேட்ட கூட்டத்தின் கையயாலி அடங்கப் பல மணித்துளிகள் ஆயின.

 “என்ன? இப்பொழுது ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று பாவேந்தர் அவர்கள் என்னைப் பார்த்து, சனநாயக முறையில் நயமாகக் கேட்ட போது, நான் உவகையின் உச்சிக்கே சென்று தலையசைத்தேன்.

பின்னர், வந்திருந்த கவிஞர்களின் முகவரிகளைப் பதிவு செய்யச் சொன்ன பாவேந்தர், கவிஞர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய தன் இன்றியமையாமையை மிக விரிவாக விளக்கினார்.

 “குயில் ஏடு உங்கள் பாடி வீடு; அதில் எல்லோரும் எழுதுங்கள்” என்று அவர் வழங்கிய ஊக்க உரை, மயில் இறகாக மாறி, வந்திருந்த இளங்கவிஞர்களின் நெஞ்சைத் தொட்டு வருடியது.

அடுத்து, மன்ற நிருவாகிகளையும், செயற் குழுவையும் தேர்ந்தமைக்கும் பெரும் பொறுப் பையும் அவரிடமே ஒப்படைத்தோம்.

அந்தக் கவிஞர் பெருமகன், எளிய கல்லூரி மாணவனான என்னையும் கவிஞர் பெருமன் றத்தின் செயற்குழு உறுப்பினராக இருக்க வேண்டு மென்று இணைத்துக் கொண்டதுதான் என் வாழ்நாளில் நான் பெற்ற பெரும் பேறுகளில் தலைசிறந்தது என்று இன்றும் எண்ணிப் பூரிப்படைகின்றேன்.

பின்னர் பாவேந்தருடன் ஏற்பட்ட நெடிய தொடர்பு தொடர் கதையானது!

சீன எல்லைப்போர் 1962 ஆம் ஆண்டில் முண்டபோது, பாவேந்தர் தலைமை ஏற்க, தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் ஒரு கவியரங்கம் நிகழ்ந்தது. ஒல்லியான உருவத்துடன் கல்லூரி மாணவனாக இருந்த நானும் கவியரங்கில் பாடினேன்.

நான் கூட்டத்தின் எதிரே நின்று கவிதை படித்த போது, சிலர் அதைச் சரியாகச் செவி மடுக்காமல், சள சள வென்று பேசிக் கொண்டி ருந்தார்கள். தலைமையேற்ற பாவேந்தர் சினத்தோடு இடையில் எழுந்து நின்று, “என்ன இப்படிச் சந்தைக் கடையாக்குகிறீர்கள்? இதோ இந்த மாணவர் நல்ல சுவையான வரிகளைப் பாடுவதைக் கவனிக்கவே மாட்டீர்களா?” என்று கடிந்து கொண்டார். கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. நான் படித்துக் கொண்டிருந்த அடிகளை மீண்டும் படிக்கக் கட்டளையிட்டார்.

மறுபடியும் படித்தேன் நான்.

‘சூ’ வென்றே விலங்குகளை விரட்டு வோம் நாம்;

‘சூ’ வருவான் என்பதற்கா இச்சொல் கண்டோம்?

இவையே அந்த வரிகள். ஆடு, மாடு, கோழிகளை, சூவென்றே விரட்டுவோம்; அந்தச் சூ வென்ற விரட்டும் சொல், பின்னால் சூவென்கின்ற சீன அதிபர் சூயயன்லாயைத் துரத்துதற்கு நாம் முன் கூட்டியே கண்டுபிடித்த சொல்லோ? என்ற இந்த வரிகளை நான் நிறுத்திப் படித்ததவுடன் பாவேந்தர் கையைத் தட்டினார்; கூட்டமும் அவர் வழியில்;கையயாலி செய்தது.

இப்படி இளங் கவிஞர்களுக்கு உற்சாக மெனும் ஊட்டச் சத்தை ஊட்டி ஊட்டி வளர்த்து விட்ட வானளாவிய தாய் உள்ளத்தின் உரிமையா ளர்தான் பாவேந்தர்.

அந்த ஆண்டு, சென்னைச் சட்டக் கல்லூரித் தமிழ்ப் பேரவையின் ஆண்டு விழாவில் வருகை புரிந்து சிறப்புரையாற்ற வேண்டும் என்று பாவேந்தரிடம் சென்று வேண்டினேன். தட்டாமல் பங்கேற்று, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மாரி பொழிந்தார் அப்பெருங்கவிஞர்.

அக்கூட்டத்தின் தலைமை உரையில் நான் இப்படிக் குறிப்பிட்டேன் :

“ஐயா,எப்பக்கம் வந்து புகுந்துவிடும்? இந்தி எத்தனை பட்டாளம் கூட்டி வரும்? என்று பாடினீர்களே, இதோ சட்டமெனும் பட்டாளத் தோடு இப்பக்கம் வந்து இந்திப் பேய் நுழைகிறதே! இக்கொடுமையைத் தடுக்க வழியே இல்லையா?”

என் ஏக்கக் குமுறலைக் கேட்ட பாவேந்தர் கொந்தளிக்கும் எரிமலைபோல் ஆவேசக் குரலில் முழக்கமிட்டார்.

“இப்போது இங்கேயே, அறம் பாடுவது போல் சூளுரையாகச் சொல்கிறேன். அன்னைத் தமிழைப் புறக்கணித்து அன்னிய மொழிக்கு வால்பிடிக்கும் ஆட்சி நிச்சயம் ஒழியும். தமிழாய்ந்த தமிழ் மகன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராய் வருவார்; இக்கவிஞனின் சொல் உண்மையாகப் போவது திண்ணம்”.

அந்தக் கவிச்சிங்கத்தின் வீர முழக்கம் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே உள்ளது.

அதற்குப் பின்னர், பிழம்பு விட்டுக் கனன்றெழுந்த இந்தி எதிர்ப்புப் போருக்குப் பின்னால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி மாறி அறிஞர் அண்ணா முதலமைச்சராய்ப் பொறுப்பேற்றார். தமிழனை இரண்டாம் தரக் குடிமகனாக்கும் இந்தி மொழியின் படையயடுப்புக்கு அரண் போடப்பட்டது. தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளே போதும்; இந்தி மொழி தேவையே இல்லை என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்கச் சட்டம் இயற்றப்பட்டது.

1964 ஆம் ஆண்டில் பாவேந்தர் தான் காதலித்த தமிழ்மண்ணைவிட்டு, விடை பெற்ற போது, பறந்தது பாடும் குயில் என்ற தலைப்பில் நான் எழுதி முரசொலியில் இடம் பெற்ற இரங்கற் பாவில்,

அறுந்ததே இனிய வீணை;

அழகிசை இனிமேல் ஏது?

பறந்ததே புதுவை மைனா.

பாடலில் புதுமை ஏது?

என்று எழுதிய கண்ணீர் வரிகளைப் படித்த அண்ணா அவர்களே என்னிடம் மனம்உருகி அந்தப் பாடல் அடிகளைப் பற்றிப் பேசினார்.

மொத்தத்தில் பாவேந்தரின் சகாப்தம் தமிழிலக்கிய வரலாற்றில் புதிய சரிதம் படைத்த யுகப்புரட்சி என்பதில் எள்ளவும் ஐயமே இல்லை.

வாழ்க அந்தப் புரட்சிக் குயிலின் வாடாத புகழ்!

Pin It