தொல். திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் மட்டும் அல்ல ; அவர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவர்.

ஈழதேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அன்னையார் பார்வதியம்மாள் மறைவையடுத்து, அவரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள திருமாவளவன் 21.02.2011 இரவு விமானம் மூலம் கொழும்பு சென்றுள்ளார்.

கொழும்பு விமான நிலையத்தில் அவரை தடுத்து நிறுத்திய இலங்கை குடிவரவுத்துறை அதிகாரிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுத்ததோடு, வந்த விமானத்திலேயே திரும்பிப் போய்விடுமாறு கூறியுள்ளார்கள்.

தான் வந்த நோக்கத்தைத் தெளிவுபடுத்திய தொல்.திருமாவளவன், “ நான் சமூக விரோதி அல்ல. இந்திய நாடாளுமன்றக் குழுவில் ஓர் உறுப்பினராக வந்து போயிருக்கிறேன். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனக்கு மதிப்பளிக்காவிட்டாலும், இந்திய அரசுக்காவது நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இது இந்திய நாட்டிற்கு நீங்கள் அளிக்கும் பெரும் அவமதிப்பு. இதை நாடாளுமன்றத்தில் உரிமைப் பிரச்சினை ஆக்குவேன் ” என்று விளக்கம்  அளித்துள்ளார்.

குடிவரவு அதிகாரிகள் இதை ஏற்கவில்லை. எனவே எதற்காக அவர்கள் திருப்பி அனுப்புகிறார்கள் என்பதை எழுத்துப் பூர்வமாகக் கேட்டுள்ளார் திருமா. அதையும் மறுத்துவிட்டார்கள் சிங்கள அதிகாரிகள்.

இராஜபக்சேவுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசை இலங்கை மதிக்கவில்லை என்பதற்கு, மீனவர்கள் பிரச்சினையும், தொல்.திருமாவளவனுக்கு நேர்ந்த இந்த அவமானமும் சான்றாகின்றன.

இந்திய இறையாண்மை பற்றிப் பேசும் இந்தியத் தலைவர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானத்தை நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். பிரச்சினை எழுப்ப வேண்டும்.

இந்தியாவை மதிக்காத இலங்கையுடனான தூதரக உறவு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசவேண்டிய தருணம் இது. தொல். திருமாவளவனை அவமதித்த இலங்கை அரசின் நடவடிக்கைக் கடுமையான கண்டனத்திற்கு உரியது !

--------------------------------------------

Pin It