மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமரவைத்துவிட்டார்கள் என்பதற்காக, அந்த மக்களை வாட்டி வதைப்பது, ஓர் அரசுக்கு அழகல்ல.

கொடுங்கோன்மை ஆட்சியால் துன்பப்பட்டு, அத்துன்பம் பொறுக்க மாட்டாமல் அழுகின்ற மக்களின் கண்ணீர், ஆள்வோரின் ஆட்சியை அழிக்கும் படையாக மாறும் என்கிறார் வள்ளுவர்.

"அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை " ‡ இதுதான் வள்ளுவரின் எச்சரிக்கை.

இந்த எச்சரிக்கையை எதிரொலிப்பது போல, மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், "தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டப் பணியாளர்கள் இந்த ஆட்சியில் நீக்கப்படுகிறார்கள். அங்கு சட்டமன்றத்திற்குட்பட்டுதான் எல்லாம் நடக்கிறதா?" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டி இருக்கிறது. நீதிமன்றம் கண்டனம் அல்லது அறிவுரை கூறுகிறது.

நீதிமன்ற அறிவுரையின் படிதான் ஒவ்வொன்றும் நடக்க வேண்டும் என்றால், அது அரசும் அன்று ஆட்சியும் அன்று.

ஆட்சிக்கு வந்தவுடன் புதிய தலைமைச் செயலகத்தை அகற்ற முனைந்தது இந்த அரசு. இன்று அது நீதிமன்றம் வரை போய்விட்டது.

அடுத்து அனைவருக்கும் சமமான கல்வி என்ற அருமையானச் சமச்சீர்க்கல்வித் திட்டத்தை ஒழிக்க " பிரம்மப்பிரயத்தனம் " செய்த ஜெயா ஆட்சியை இதே உச்சநீதிமன்றம்தான் தடுத்து நிறுத்தியது ‡ சமச்சீர்க் கல்வி தொடர ஆணை பிறப்பித்தது.

கலைஞரால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்தால் உலகில் மிகச் சிறந்த, ஆசியாவின் இரண்டாம் தலைசிறந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சிதைக்கப் பார்த்த தமிழக அரசுக்குத் தடை. அதுவும் நீதிமன்றத்தால்.

இதுபோதாது என்று கலைஞர் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட, ஏழை, எளிய மக்களுக்கு உதவக்கூடிய மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேரை நீக்கிவிட்டது இந்த அரசு. அதற்குத்தான் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய பாலின் விலை இருமடங்காக உயர்த்திவிட்டது. பேருந்துக் கட்டணங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது.

ஜெயா அரசு பொறுப்பேற்றதில் இருந்து, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதும், சென்ற ஆட்சியில் போட்ட நலத்திட்டங்களைக் கைவிடுவதும், ஏழை நடுத்தர மக்களைப் பாதிக்கும் விதத்தில் அரசு அறிவிப்புகளை அறிவிப்பதும்தான் தலையாய நோக்கமாக இருக்கிறது.

இவ்வாட்சி பொறுப்பேற்ற இந்த இடைப்பட்ட ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு மக்கள் நலத் திட்டம், ஒன்றைக் கூடச் செய்துள்ளதா என்ற கேள்வி மக்கள் உள்ளங்களில் எழாமல் இல்லை.

மாற்றம் வேண்டும் என்று யார் பேச்சையோ கேட்டு வாக்களித்த மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்து விட்டார்கள்.

இப்படிப்பட்ட ஆட்சியையா தேர்ந்தெடுத்தோம் என்ற அவர்களின் கண்களில் இன்று கண்ணீர்.

ஆம் ! " ஆற்றாது அழுத கண்ணீர் ". அது " செல்வத்தைத் தேய்க்கும் படை " என்கிறார் வள்ளுவர்.

சிந்திக்க வேண்டாமா ஆட்சியாளர்கள்!

Pin It