உச்ச நீதிமன்றத்தைவிட்டு கீழிறங்கி இன்னமும் சமச்சீர்க்கல்வி பள்ளிகளுக்கு வந்தபாடில்லை. பிள்ளைகளின் தவிப்பை அரசு கொஞ்சமும் உணரவில்லை. தன் வறட்டுப் பிடிவாதத்தால் பிள்ளைகளை வாட்டிக் கொண்டிருக்கிறது.

முன்னுக்குப்பின் முரணான இரண்டு வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் முன்வைத்திருக்கிறார்கள். இந்தியத் தரத்திற்கும், உலகத் தரத்திற்கும் சமச்சீர்க் கல்வி பாடத்திட்டம் உகந்ததாக இல்லை என்பது ஒன்று. தமிழக அரசுக்கு சரியான முறையில் சட்ட ஆலோசனை சொல்வதற்கு உரியவர்கள் இல்லாமல் போய்விட்டதால்தான், சட்டத்திருத்தம் என்னும் பிழை நேர்ந்து விட்டது என்பது இன்னொன்று.

இந்தியத் தரம், உலகத் தரம் போன்ற பொத்தாம் பொதுவான சொற்களுக்கெல்லாம் பொருள் என்ன என்பதை, அவர்கள் விளக்கவில்லை. தகுதி, திறமை அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்த பழைய வாதத்தின் புதிய மொழிபெயர்ப்புதான், சமச்சீர்க்கல்வித் திட்டம் தரமாக இல்லை என்று சொல்வது. ஒன்றின் தரத்தையும், தரமின்மையையும் அத்துறை சார்ந்த அறிஞர்கள் முடிவு செய்வதே பொருத்தமானது. ஆனால் கல்வித்துறைக்கே தொடர்பில்லாதவர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்த அரசு, இன்று அத்திட்டம் தரமானதில்லை என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் சொல்கிறது. இந்தப் பாடத்திட்டம் இப்போது பொருந்தாதென்றால், 2004இல் தயாரிக்கப்பட்ட பழையபாடத்திட்டம் மட்டும் எப்படிச் சரியாக இருக்கும் என்று நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு அரசு வழக்கறிஞர், பி.பி.ராவிடமிருந்து எந்த மறுமொழியும் இல்லை.

ஆனாலும் அவர் திருவாய் மலர்ந்தருளிய இன்னொரு செய்தி என்னவென்றால், தமிழக அரசுக்கு சட்ட அறிவுரை சொல்ல யாரும் இல்லை என்பதுதான். இதைவிட ஓர் அரசுக்கு அவமானம் வேறு என்ன இருக்க முடியும்?

இப்படி முரண்பட்ட வாதங்களால், வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. பாடப்புத்தகங்களைக் கொடுப்பதற்கான தேதியை நீதிமன்றம் நீட்டித்துக் கொண்டே போகிறது. ஏறத்தாழ ஒன்றரைக் கோடி பிள்ளைகளின் படிப்பு இன்று நடுத்தெருவில் நிற்கிறது. குறிப்பாக, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் நிலை பரிதாபத்திற்குரியதாக உள்ளது. கேட்டால், சனி, ஞாயிறுகளில் எல்லாம் கூட வகுப்புகள் நடத்திப் பாடத்தை முடித்து விடுவோம் என்கிறார்கள். பாடம் என்பது ஒரே நாளில் திணிக்கக் கூடிய மருந்தன்று. மெள்ள மெள்ள மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டிய அறிவுக்களஞ்சியமே பாடங்கள்.

சமச்சீர்க் கல்விக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், பிறகு 2 முதல் 5 மற்றும் 7 முதல் 10 வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களில் அடித்தல், திருத்தல், கிழித்தல், மறைத்தல் போன்ற வேலையற்ற வேலைகள் தொடங்கும். அவை முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம். இப்படியே போனால் எப்போது பிள்ளைகளுக்குப் பாடங்கள் நடத்தப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

கலைஞரின் ஆட்சியில் சின்னக் குறைகள் தென்பட்டால் கூட, ஒன்றைப் பத்தாக்கி ஊருக்குச் சொன்ன நம் வெகுமக்கள் ஊடகங்கள் இப்போது சாதிக்கும் கள்ள மவுனத்திற்கு என்ன பொருள் என்று காலம் கேள்வி கேட்காமலா போய்விடும்?

Pin It