இலங்கையில் சர்வதேசப் போர்விதிகளை மீறி இலங்கை அரசு தாக்குதல் நடத்தியது. மனித உரிமைகள் மீறப்பட்டன. இனப் படுகொலைகள் நடந்தன.

திட்டமிட்டுத் தமிழ் இனத்தை அழிக்க இராணுவத்தைப் பயன்படுத்திய இராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி. அவரை சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் ‡ என்றெல்லாம் எழுந்த உரத்த குரல்களுக்கு எந்த மதிப்பும் இதுவரை கிட்டவில்லை. ஐக்கிய நாடுகள் அவையும் கூட கண்டுகொள்ளவில்லை.

ஈழத்தில் 2009 மே 18ம் நாள் நந்திக்கடலில் நடந்த கொடூரத்தை அடுத்தும் கூட, ஓர் ஆண்டாக மவுனம் காட்டிய ஐ.நா.எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனாலும் உலகத் தமிழ்ச் சமூகம் கொடுத்துவரும் நெருக்கடியால், தவிர்க்க முடியாமல் 13 மாதங்களுக்குப் பிறகு, 2010 ஜுன் 22இல் ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது ஐ.நா. வடகொரியாவிற்கான ஐ.நாவின் சிறப்புத் தூதரும், இந்தோனேசிய முன்னாள் அட்டர்னி ஜென்ரல் மார்சுகி தார்ஸ்மன் தலைமையில், ஆப்பிரிக்க மனித உரிமையாளர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அது.

ஐ.நா.பொதுச்செயலாளர், பான்கிமூன் இக்குழுவை அமைத்தவுடன், சீறிப்பாய்ந்தது சிறிலங்கா அரசு.  “ அந்தக் குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம்  ” என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பிரீஸ் வெளிப்படையாக அறிவித்தார். எங்களை விசாரிக்க அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்றது இலங்கை அரசு.

ஐ.நா.விசாரணைக் குழுவும் இலங்கைக்குள் நுழையாமல், பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று பார்த்து விசாரிக்காமல், அது குறித்து எந்தக் கள ஆய்வும் செய்யாமல், ஏனைய ஆதாரங்களைத் திரட்டி, ஒரு நீண்ட இடைவெளிக்குப்பின்னர் கடந்த ஏப்ரல் 12ஆம்நாள் தன் ஆய்வறிக்கையை ஐ.நா.பொதுச்செயலாளர் பாகிமூனிடம் கொடுத்துவிட்டது. பான்கிமூனும் அவ்வறிக்கையை முறையாக வெளியிடவில்லை. மாறாக ஐக்கிய நாடுகள் அவையில் இருக்கும் இலங்கை அரசுக்கான பிரதிநிதிகளுள் ஒருவரான சவேந்திர செல்வா என்பவரிடம் அறிக்கையின் ஒரு நகலைக் கொடுத்துவிட்டார்.

இலங்கையை ஆளும் இராஜபக்சேவுக்கு ஆதரவாக இருக்கும்  “ தி ஐலேண்ட்  ” என்ற நாளிதழ் இவ்வறிக்கையை வெளியிட்டது. தொடர்ந்து பல ஊடகங்கள் இதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன.

அந்த அறிக்கை, சர்வதேச மனிதநலம் மற்றும் மனித உரிமைச் சட்டத்திற்குப் புறம்பாக, அதை மீறி இலங்கை அரசு செயல்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

வன்னிப் பகுதியில் 2008ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை இராணுவம் மிக அதிக அளவிலான குண்டுகளை வீசி, மிப் பெரும்பாலான மக்களைக் கொன்றுள்ளது. அப்போது தப்பிப் பிழைத்த மக்களை இலங்கை அரசு அமைத்த பாதுகாப்பு வளையங்களுக்குக் கொண்டு சென்றது இராணுவம். இந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்மாட்டோம் என்றும் இலங்கை இராணுவம் உறுதி அளித்தது. அதேசமயம் இப்பகுதியின் தெளிவான வரைபடமும், உளவுத் துறையின் முழுத் தகவல்களும் இராணுவத்திடம் இருந்தது. அப்படி இருந்தும் இந்தப் பாதுகாப்பு வளையப் பகுதியில்  இருந்த மக்கள் மீதும், அங்கிருந்த ஐ.நா. மையமும், உணவு வழங்கும் பகுதியும் சிங்கள இராணுவத்தால் குண்டுகள் வீசி தகர்க்கப்பட்டன என்கிறது அந்த அறிக்கை.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, படுகாயம் அடைந்து குற்றுயிர் குலையுயிருமாய் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்ய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சார்பில், முறையாக இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் தகவல் கொடுத்துவிட்டுக் கடற்கரைப் பகுதியில் நின்று கொண்டிருந்த செஞ்சிலுவைச் சங்கக் கப்பல் மீதும் குண்டுகளை வீசித் தாக்கியுள்ளது இலங்கை இராணுவம் என்ற செய்தி அறிக்கையில் இடம் பெற்றிருக்கிறது.

வன்னிப் பகுதியில் எங்கெங்கு மருத்துவ மனைகள் இருக்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிந்து , அவைகள் அனைத்தையும் குண்டுகள் வீசித் தாக்கியுள்ளது இராணுவம்.

அதுமட்டுமல்லாமல் இராணுவத் தாக்குத லால் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு, உணவு, மருந்துப் பொருட்கள், அறுவை சிகிச்சைக்குத் தேவையான கருவிகள் மருந்துகள் எவையும் கிடைக்கவிடாமல், கவனமாகத் தடுத்துவிட்டது இராணுவம்.

போரில் பாதிக்கப்பட்டு அந்தப் பகுதிகளில் சிக்கிக் கிடந்த ஈழத் தமிழ் மக்களின் எண்ணிக் கையை, இலங்கை இராணுவம் வேண்டும் என்றே குறைவாகக் கூறியிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக் கப்பட்டப் பிறகும் கூட, தப்பிப் பிழைத்த மக்களை  (முள்வேலி) பாதுகாப்பு முகாம்களில் அடைத்துவைத்துச் சித்ரவதை செய்துள்ளனர் இராணுவத்தினர் அப்பாவி இளைஞர்களை விடுதலைப் புலிகள் என்று கூறி அழைத்துச் சென்று சித்திரவதை செய்து கொல்வது, பெண்களைப்  பாலியல் வன்கொடுமை செய்து கொல்வது என்னும்  பல்வேறு கொடுமைகளை, மனித உரிமை மீறல்களை இலங்கை இராணுவம் செய்துள்ளதாகக் ஐ.நா.குழு ஆய்வறிக்கை விளக்கமாகச் சொல்லியிருக்கிறது.

பெரும் மனிதக் கொடுமைகள் செய்த இராஜபக்சேவுக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்த போது, தன்னைப் புனிதனாகக் காட்டிக் கொள்ளத் தனக்குத் தானே ஒரு நல்லிணக்க ஆய்வுக் குழுவை அமைத்துக் கொண்டது இலங்கை. அதுகுறித்து இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆய்வுக்குழு, சர்வதேச மனித உரிமைச் சட்டப்படி அமைக்கப்படவில்லை. இறுதிகட்டப் போரில் நடந்த உண்மைகளை அது நியாயமாக விசாரிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களக்குப் பாதுகாப்பும், மரியாதையும் அளிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வில்லை. பான்கிமூன் ‡ இராஜபக்சே கூட்டறிக்கைக்கு எதிராக இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழு பெரும்  தவறு செய்து இருக்கிறது என்றும் ஐ.நா. அறிக்கை கடுமையாகச் சாடி இருக்கிறது.

இதனால் பதற்றமடைந்த இராஜபக்சே, இவ்வறிக்கை மீது எந்த விசாரணையும் நடத்தக் கூடாது என்றும், மீறி விசாரணை நடத்தினால், இலங்கைச் சிங்கள மக்கள் ஐ.நா.வுக்கு எதிராகப் போராடுவார்கள் என்று கூச்சல் போட்டிருக்கிறார். இன்னொரு புறம்  “உறுப்பு நாடு என்ற முறையில் இலங்கையை ஐ.நா.காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரமுள்ள சீனா ‡ ரஷ்யாவின் உதவிகளை நாடுவோம்  ” என்று ஐ.நாவை மிரட்டி இருக்கிறார் ‡ கோத்தபய இராஜபக்சே. இப்படிக் கடுமையாக இலங்கையைக் கண்டித்து கொடுக்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கை என்ன தீர்ப்பு சொல்லியிருக்கிறது?

கொடுமையிலும் பெரிய கொடுமையான சோகம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசு இடைக்கால நிவாரணம் செய்யவேண்டும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், இலங்கை பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவர்களைக் குற்றச் சாடடுக்கு ஆதாரம் இல்லையயனில் விடுதலை செய்ய வேண்டும். போரில் நடந்த மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திட்டங்கள் அமல்படுத்த வேண்டும் என்றெல்லாம் தன் பரிந்துரையை நீட்டுகிறது ஐ.நா.ஆய்வறிக்கை!

இப்போதையத் தகவலின்படி, ஐ.நா.வில் இவ்வறிக்கையை வெளியிட்ட பான்கிமூன், இலங்கை மீது தன்னால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறியுள்ளார். ஆனால் ஐ.நா.பாதுகாப்பு அவை நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியிருக்கிறது. இந்த அறிக்கையின் மூலம் இலங்கை அரசின் சிங்கள இனவெறியும், அதன் தலைவர் இராஜபக்சேவின் அட்டூழியங்களும் அம்பலமாகி விட்டன.

இராஜபக்சே ‡ கோத்தபய இராஜபக்சே இருவரும் போர்க்குற்றவாளிகள் என்று ஐ.நா.அதிகாரப் பூர்வமாக அறிவித்து விட்டது. சர்வதேச நீதிமன்றக் கூண்டில் அவர்களை விசாரிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும்! பொது மன்னிப்பு வழங்கக்கூடாது.

இல்லாவிட்டால் மனித உரிமை ‡ மனித நேயம் எல்லாவற்றையும் அனுராதபுரம் புத்தர் கோயிலுக்கு அடியில் போட்டு புதைத்துவிட வேண்டும் !

Pin It