தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் மாறாத பற்றுடைய தமிழ் அறிஞர்கள், தமிழின உணர்வாளர்கள் பலர், அதே அளவிற்கு சமயங்களின் மீதும், ஆன்மீகத்தின் மீதும் பற்றுடையவர்களாக உள்ளனர். அதனால் புராண இதிகாசங்களில் காணப்படும் அறிவுக்குப் பொருந்தாத, சமூக வாழ்நிலைக்கு எதிரான பகுதிகள் பலவற்றை அவர்கள் எடுத்துச் சொல்லுவதில்லை. சில வேளைகளில், அதற்கான விரிவுரைகளையும், சமாதானங்களையும் சொல்லி அவற்றை நியாயப்படுத்தி விடுவதும் உண்டு. அந்நிலைகளை மாற்றி, உண்மைகளை உள்ளவாறு எடுத்துரைத்து மக்களிடம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கமே என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் தருமிக்குப் பொற்கிழி வழங்கிய கதை, பிட்டுக்கு மண் சுமந்த கதை, ஒரு ஏழைப் பாண னுக்காக விறகு சுமந்த கதை முதலான பல கதைகளைத் தமிழ்ப் புலவர்கள் மேடைகளிலும், ஏடுகளிலும் எடுத்துக் காட்டுவர். ஆனால் மகா பாதகம் தீர்த்த கதை என்று ஒரு கதை அதே திருவிளையாடல் புராணத்தின் 12 ஆவது படலமாக இடம்பெற் றுள்ளது. அதனைப் புலவர்களும், ஆன்மீக வாதிகளும் பல நேரங்களில் வெளிப்படுத்துவதில்லை. காரணம் அந்தக் கதை அவ்வளவு மோசமானது.

குலோத்துங்க பாண்டியன் ஆட்சிக் காலத்தில், அவந்தி நகரத்தில் வாழ்ந்த ஒரு பார்ப்பனரின் மனைவி மிகவும் அழகானவள். அந்தப் பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் பிறந்த மகன் தாயின் மீதே விருப்பம் கொள்கிறான். தாயும் அதற்கு இணங்குகிறாள். இருவரும் உறவு கொள்கின்றனர். அதனை அறிந்த தந்தை எதிர்க்கின்றார். அவரை அவர் மகனே வெட்டிக் கொன்றுவிடுகிறான். அதனால் அவனுக்குப் பிரம்மஹத்தி தோ­ம் ஏற்பட்டுவிடுகிறது. தந்தையைக் கொன்றதால் அந்தப் பாவம் ஏற்படவில்லை. பார்ப்பனராகிய ஒருவரைக் கொன்றதே பாவத்திற்குக் காரணம் என்கிறது திருவிளையாடல் புராணம். பிறகு அவன் தாயோடு வேற்றூருக்குச் செல்கின்றான். வழியில் அவன் தாயையும், அவனுடைய பொருள்களையும் கள்வர்கள் கவர்ந்து கொள்கின்றனர். இறுதியில், அவன் ஒரு பார்ப்பனன் என்பதால், அவன் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து இறைவன் அவனுக்கு அருள் பாலிக்கின்றார்.

இதுதான் திருவிளையாடல் புராணம் கூறும் கதை. இக்கதை 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் எழுதியுள்ள திருவிளையாடல் புராணத்தில் இடம் பெற்றுள்ளது. அவருக்கு மூன்று நூற்றாண்டுகள் முன்னால் வாழ்ந்த பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதியுள்ள திருவிளையாடல் புராணத்திலும் இதே கதை இதே வடிவில் இடம் பெற்றுள்ளது.

இது ஓர் அளவிற்கு, ஷோஃபாக்ளிஸ் எழுதிய கிரேக்க நாட்டு இலக்கியமான ஈடிபஸ் (Oedipus) நாடகத்தோடு ஒத்துள்ளதாகக் கூறுவர். ஆனால் இரண்டிற்கும் இடையே பெரும் வேறுபாடு உள்ளது. ஈடிபஸ் கதையில், லேயஸ் மன்னனுக்கும், அவன் மனைவி ஜோகாஸ்டாவுக்கும் பிறந்த மகன் தன் தாயையே மணந்து கொள்கிறான் என்பது உண்மைதான். ஆனால், குழந்தையாய் இருக்கும் போதே காட்டில் தூக்கி வீசப்பட்ட அவன், வளர்ந்த பின் இவள்தான் தன் தாய் என்று அறியாமல் மணந்து கொள்கிறான். உண்மையை அறிந்தபின் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். மகன் தன் கண்களைக் குருடாக்கிக் கொள்கிறான். தாயோ தற்கொலை செய்துகொள்கிறாள்.

திருவிளையாடல் புராணத்தில் இந்நிலை எதிர்மாறாக உள்ளது. இருவரும் அறிந்தே உறவு கொள்கின்றனர். அதற்காக எப்பொழுதும் அவர்கள் வருந்தவில்லை. ஆனாலும் அவனுக்கு இறைவன் அருள் பாலிக்கிறார்.

இப்புராணக் கதை இப்படி இருக்க, நாம் அனைவரும் அறிந்த ராமாயணக் கிளைக்கதை ஒன்றை இங்கு நினைவுகூர்ந்து, இதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உத்தரகாண்டம் என ஒரு காண்டம் உள்ளது. அக்காண்டத்தின் 73 ‡ 76ஆம் சருக்கங்களில் சம்பூகன் பற்றிய ஒரு செய்தி உள்ளது.

ராமர் அரண்மனையில் மன்னராக வீற்றிருக்கும் போது, வயதான பார்ப்பனர் ஒருவர் உயிரிழந்த தன் மகனின் உடலைத் தூக்கிக் கொண்டு அங்கு வருகின்றார். 14 வயது கூட ஆகாத தன் மகன் இறந்துவிட்டான் என்று கூறி கதறி அழுகின்றார். அதுகண்ட ராமரும், மற்றவர்களும் பதறுகின்றனர். ' ராமா, உன் ஆட்சியில் ஏதோ மகாபாதகம் நடந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த தேசத்தில் குழந்தைகளுக்கு மிருத்யுபயம் உண்டாகுமா? ' என்று அந்தப் பார்ப்பனர் குரல் எழுப்புகின்றார். அப்போது அங்கிருந்த நாரதர், ' உன் ராச்சியத்தில் யாரோ ஒரு சூத்திரன் தவம் செய்கிறான். இந்தப் பிராமணனின் மகன் அகால மரணமடைந்ததற்கு அதுவே காரணம் ' என்று தன் ஞான திருஷ்டியால் கண்டுபிடித்துச் சொல்கிறார்.

உடனே தன் புஷ்பக விமானத்தை வரவழைத்து, அதில் ஏறி ஆயுத பாணியாக ராமர் புறப்படுகின்றார். விந்திய பர்வதத்திற்கு அடுத்த சைவலம் என்ற மலைச்சாரலில், ஒரு ஏரிக்கு அருகில், சம்பூகன் என்னும் ஒரு தபஸ்வி ஒரு மரத்தின் கிளையில் தலைகீழாய்த் தொங்கியபடி கடுந்தவம் புரிந்து கொண்டிருக்கிறார். அவன் அருகில் சென்ற ராமர், ' நீ பிராமணனா, சத்ரியனா அல்லது நான்காம் வருணத்தைச் சேர்ந்தவனா? நிஜத்தைச் சொல் ' என்று கேட்க, அவன், ' மகாராஜா, நான் நான்காம் வருணத்தைச் சேர்ந்தவன். சம்பூகன் என்று எனக்குப் பெயர் ' என விடையளிக்கிறான். உடனே ராமர் வேறு எது குறித்தும் கேட்காமல், மின்னல் வேகத்தில் உறையிலிருந்து தன் வாளை உருவிச் சம்பூகனின் தலையை வெட்டி விடுகிறார். உடனே தேவர்கள் அனைவரும் ' நல்லது நல்லது ' என்று ஆர்ப்பரித்து மகிழ்கின்றனர்.

உத்தரகாண்டச் செய்திகளும், அதில் இடம் பெற்றுள்ள சில வட மொழிச்  சொற்களும், சங்கீத பீஷ்ம, சங்கீத விமர்சகாச்சாரிய, அபிநவ த்யாகப்ரஹ்ம, ஸ்ரீ உ.வே.சி.ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார், பி.ஏ., அவர்களால் மொழிபெயர்க் கப்பட்டுள்ள உத்தரகாண்டம் தமிழ் வசனம் என்னும் நூலில் இருந்து எடுத் தாளப்பட்டுள்ளது.

இப்போது இரு கதைகளிலும் இடம் பெற்றுள்ள மகாபாவங்களை நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். தாயை மணந்து, தந்தையைக் கொன்ற மகாபாதகம் இறைவனால் மன்னிக்கப் படுவதோடு, அவனுக்கு இறைவன் அருளும் கிடைக்கிறது. ஆனால் எந்தக் குற்றமும் புரியாமல் தவம் புரிந்த சம்பூகனைக் கடவுளின் அவதாரமான ராமரோ வாளினால் வெட்டி வீழ்த்துகிறார். எத்தனை பெரிய கயமைத்தனங்களைச் செய்தாலும், அவன் பார்ப்பனனாக இருந்தால் இறைவன் அருள் பாலிப்பார், எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஒரு சூத்திரன் தவம் செய்தால் இறைவன் அவன் தலையைக் கொய்து விடுவார் என்பதுதானே இவ்விரு கதைகளும் நமக்குக் கூறும் நீதி?

இவற்றை எல்லாம் கடந்த எழுபது, எண்பது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் மக்களிடம் விரிவாக எடுத்துச் சொல்லி வருகிறது. இன்னும் தொடர்ந்து சொல்ல வேண்டிய கடமையும், தேவையும் நமக்கு இருக்கின்றன.1

Pin It