02.09.2011 நாளிட்ட தினமணியில்...

இன்றைய தமிழக அரசும் - இன்றைய சூழலுக்கேற்பச் சித்திரை முதல்நாளை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடுவதை எங்ஙனம் மறுக்கவோ தடுக்கவோ இல்லையோ, அது போலத் தை முதல் நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டையும் அவரவர் விருப்பப்படி கொண்டாட இடம் தந்து, அரசு இரண்டையும் ஆதரிப்பதே முறையாகும்.

- தமிழண்ணல்

*** 

வெற்றெனத் தொடுத்தலாக இருக்கிறது

சத்தியவேல் முருகனார்

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களும் என் மீது மிகுந்த அன்புடையவர். நாங்கள இருவரும் பல களங்களில் ஒன்றாகப் பணியாற்றுகிற வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தைப்புத்தாண்டைப் பற்றிய தமது கருத்தை, தமிழண்ணல் அவர்கள் தினமணியில் எழுதியுள்ளார் ; அதில் எனக்கு உடன்பாடில்லை.

அந்தக் கட்டுரையின் தொடக்கமே ஏதோ ஒரு கட்சி நெடியுடன் தொடங்கியி ருப்பதைக் காண முடிகிறதே ஒழிய, ஒரு தமிழறிஞர் தன்னுடைய துணிவான சிந்தனையை எடுத்து வைத்ததாகத் தெரிய வில்லை. சென்ற அரசின் துதிபாடிகள் என்று ஒரு குற்றச்சாட்டுடன் அவரது கட்டுரை தொடங்குகிறது. ஆனால் சென்ற அரசினுடைய  துதிபாடிகள் என்று  எதிர்க்கட்சியினர் கொடுத்த பட்டியலில் தமிழண்ணல் அவர்கள் பெயரும் இடம் பெற்றிருந்தது  குறிப்பிடத்தக்கது.

இனி, தைப்புத்தாண்டு பற்றிய அவரு டைய கருத்தை ஆய்வு செய்து, விளக்கலாம் என்று முயற்சி மேற்கொள்வோமானால், அவரே மிகுந்த ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை என்றும், மேலோட்டமாகப் பார்த்தாலே போதும் என்றும் கட்டுரையில் குறிப்பிட்டு விட்டதால், தை முதல் நாள் பற்றிய ஆராய்ச்சிகளுக்குள் அவர் செல்ல விரும்பவில்லை என்பது நன்கு புலனாகிறது. எனினும் இதுபற்றிச் சிற்சில ஆய்வுக் கருத்துகளையாவது நான் தராவிட்டால் இதற்குச் சரியான தீர்வு காண முடியாதோ என்று அஞ்சுகிறேன்.

முதலில் ஆண்டுத் தொடக்கம் பற்றி ஒரு தெளிந்த நிலை தமிழ் இனத்தில் இல்லை என்று அவர் கூறியதும், அதே மாதிரி மேலை நாடுகளிலும் நிலைமை இருந்தது என்று கூறியதும் வரலாற்று உண்மை. இது தொடர்பாக எந்தத் தொடர்ஆண்டும் பழங்காலததில் அமைக்கப்படவில்லை என்பதும் உண்மையே. கல்வெட்டுகளின் மூலமாகக் காணும்போது, அந்தந்த அரசர் பதவியேறிய ஆண்டைக் குறித்து, அதிலிருந்து தொடங்கியே ஆண்டு நிகழ்வுகளைப் பொறித்து வைத்திருக்கிறார்கள் என்பதும் உண்மையே. ஆனால் கிறிஸ்து பிறந்த பின்னர், அவருடைய பிறப்பையயாட்டி ஆண்டுகள்  கணக்கிடப்பட்ட போது, உலகமே விழித்துக் கொண்டது. ஏதாவது ஒரு காலக் குறியீட்டை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதின் இன்றியமையாமை உணரப்பட்டது.

அதன் பின்னரே ஆண்டுகளைக் கணக்கிட்டு வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்வது என்பது தொடங்கியது. இந்த நிலையில் தமிழர்களுக்கு என்று ஒரு அடிப்படைக் காலக் குறியீடு வேண்டும் என்பதை உணர்ந்த தமிழறிஞர்கள் ஒன்றுகூடி, மறைமலையடிகள் தலைமையில், திருவள்ளுவர் ஆண்டு என்று ஒரு புதிய ஆண்டுத் தொடக்கக் கணக்கை ஏற்பாடு செய்தார்கள். காரணம், இவ்வாறான அடிப்படை இல்லாத காரணத்தினால், மிகப்பழைய தமிழர்களுடைய நாகரிகம் பண்பாடு மற்றும் வரலாற்று நிகழ்வுகள் இவைகளை நாம் சரியான காலக்கணக்கில் காட்டமுடியாத நிலை இருக்க, அதனால் தமிழர்களுடைய பழைமையை உலகளவில் நிலைநாட்ட முடியாதவர்கள் ஆனோம். இந்தக் குறையை மாற்றி ஒரு புதிய பதிவாகவாவது திருவள்ளுவர் ஆண்டிலிருந்து தொடங்கலாம் என ஏறத்தாழ 500 தமிழறிஞர்கள் ஒருமித்த கருத்துக்கூறி அதைத் தோற்றுவிக்கக் காரணமாயிருந்தனர். அந்தச் சூழலில் ஆண்டுத் தொடக்கம் எந்தத் திங்களில் வைத்துக கொள்ளலாம் என்பது பற்றி ஆராய வேண்டியது கட்டாயமாயிற்று.

அவர்கள் சீரிய முறையில் சங்க இலக்கியங்களை எல்லாம் ஆராய்ந்துதான் தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக அமைக்க பரிந்துரை செய்தார்கள். அந்தப் பரிந்துரைகூட அரசுக்கு விடுத்த பரிந்துரையாக அல்லாமல், தமிழ் மக்களுக்கு விடுத்த பரிந்துரையாகவே அறிவித்தார்கள். தமிழர்களின் அலட்சியப் போக்கால் பல்லாண்டுகள் உறைந்தும், உறங்கியும் கிடந்த இந்த உணர்வு, பீறிட்டு எழுந்து, முதலில் கால அடிப்படைக் கணக்கை ஏற்று திருவள்ளுவர் ஆண்டு என்பதைப் பின்பற்ற அரசே  ஆணையிட்டது. ஆனால் என்ன காரணமோ என்று தெரியாத வகையில் தை மாதம் தமிழ்ப் புத்தாண்டு முதல்நாள் என்று அமைக்க அன்றைய அரசு தவறிவிட்டது.

பல ஆண்டுகள் கழித்து, பாதியில் நின்ற ஒரு மறுமலர்ச்சி முழுமை பெற்று, சென்ற அரசின் ஆட்சிக் காலத்தில் தைப்புத்தாண்டு ஆணையுடன் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழண்ணல் அவர்கள் எதை மறுக்கிறார் அல்லது எதை ஏற்கிறார் என்பது அவரது கட்டுரையில் விளக்கப்படவே இல்லை என்பது மிகப்பெரிய குறை.

அதற்குப் பதிலாக சித்திரை முதல்நாளை தொல்காப்பியர் நாள் என்று புதிதாக இவர் பரிந்துரை செய்வது வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கிறது. ஒன்று சரி என்று சொல்ல வேண்டும் அல்லது தவறு என்று நிருபிக்க வேண்டும். இரண்டும் இல்லாமல், புதிதாகத் தொல்காப்பியர் நாள் என்று ஒரு புதிய சர்ச்சையை எழுப்பி விடுவது, உள்ள சர்ச்சைக்கு உறுதியான பதிலாகாது. இதைத் தமிழண்ணல் போன்ற முதிய தமிழறிஞரிடம் நாம் எதிர்பார்க்கவில்லை.

தொல்காப்பியர் நாளை சித்திரைக்குப் பரிந்துரை செய்வதன் மூலமாக தமிழ்ப்புத்தாண்டு சித்திரைதான்  என்று சொல்ல வருகிறாரா என்பது தெரியவில்லை. அப்படி இருக்குமானால், திருவள்ளுவர் ஆண்டு என்று ஒன்றை வைத்து, அதில் வருகிற பல ஆண்டு வரிசைகளில் ஒரு மாதத்திற்கு தொல்காப்பியரை இணைப்பது அறிந்த காலக்கணக்குக்கூட பொருந்தி வராததாக இருக்கிறது. காரணம், தொல்காப்பியர் இடைச்சங்கக் காலத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருவள்ளுவர் கடைச்சங்கக் காலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தமிழறிஞர்கள் தெளிவாக அறிந்த ஒன்று! எனவே பின்வந்தவர் ஆண்டுக்கணக்கில் முன்வந்தவருடைய திங்கள் அமையும் என்பது அறிவுக்குப் பொருந்தாத ஒன்று.

இதில் நாள், மாதம், ஆண்டு, ஞாயிறு போன்றவற்றைப் பற்றி எல்லாம் அவர் கூறியிருக்கிற கருத்துகளும், மேற்கோள்களும் எந்த நோக்கத்திற்காகக் கூறப்பட்டன, எந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காகக் கூறப்பட்டன என்பதெல்லாம் இல்லாமல் அவை வெற்றெனத்தொடுத்தலாக முடிகிறது.

ஆகவே இந்தக் கட்டுரையில் தமிழண்ணல் அவர்கள் புத்தாண்டு பற்றிய தனது கொள்கையைத் தெளிவாக, துணிவாக எடுத்துக் கூறவில்லை என்பதே நமக்குள்ள பெரிய ஆதங்கம். அதற்குப் பதிலாக அவர் கொடுத்துள்ள தொல்காப்பியர் பற்றிய பரிந்துரையும் எந்த அடிப்படையும் இல்லாத காரணத்தினால் மேற்கொள்ளத் தகுதியற்றதாக இருக்கிறது என்பதையும் நான் கூறியே ஆகவேண்டும்.

தமிழனுக்குரிய புத்தாண்டை தமிழறிஞர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்; அய்ந்தாண்டுகளுக்கு ஒரு முறை  மாறி மாறி ஆட்சி ஏறும் அரசுகள் அல்ல என்பதை தமிழர்கள் உலகிற்கு உணர்த்தும் காலம் வந்துவிட்டது. இதுவே நல்ல தருணம் என்று வள்ளலார் கூறியது இங்கு நினைக்கத்தக்கது.

*** 

குறைந்த ஆராய்ச்சியும் தென்படவில்லை

இறைக்குருவனார்

தமிழாண்டு பற்றி, இன்றைய முதலமைச்சர் தன் முனைப்பாகக் கொண்டுவந்த அடாவடிச் சட்ட முன்வரைவு அரசியல் உள்நோக்கம் கொண்டதே தவிர, ஆராய்ச்சியோ சீர்திருத்தமோ குமுக நலமோ தமிழிய உணர்வோ உடையதன்று என்பது வெளிப்படை. அது பற்றிய குளப்படிகள் நிலவும் இற்றைச் சூழலில், முதுபேரறிஞர் அய்யா தமிழண்ணல் அவர்கள், தொல்காப்பியர் நாள் ஒன்றைத் தருக என்று தமிழ்நாட்டரசுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.

தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி, ஆண்டுமானம் தொடர்பான பல புலனங்களை (வி­யங்களை) உள்ளீடாகக் கொண்ட, வருஷாதி நூலிலும் ஐந்திறத்திலும் (பஞ்சாங்கத்திலும்) கூடத் தமிழாண்டு என்ற குறிப்பில்லை. கிரிகேரியன் ஆண்டு இங்கிலீஷ் வரு­ம் என்றும், உகாதி ஆண்டு தெலுங்கு வரு­ம் என்றும் குறிக்கப்படுவதை ஒட்டித் தமிழகத்தில் வழக்கூன்றியிருந்த சக ஆண்டைத் தமிழாண்டு எனக்கொண்டு, மேழ(சித்திரை) முதல் நாளை, தமிழ் வரு­ப் பிறப்பு என்று ஐந்திறத்தில் குறிக்கப்பெற்றுள்ளது என்பது அறியத்தக்கது.

மிகுந்த ஆராய்ச்சியின்றி மேம்போக்காகச் சிலவற்றைக் காண்போம் என்று அண்ணலார் கூறியிருந்தாலும், குறைந்த ஆராய்ச்சியும் அதில் தென்படவில்லை. நம்முன் உள்ள சிக்கல், மேழத்தை முதல் மாதமாகக் கொண்டதும், பிரபவ முதலிய அறுபதாண்டு அளவினதும் ஆகிய, விக்ரம ‡ சாலிவாகன சகம் ஆகிய சுழலாண்டுமானம் சரியா தவறா ‡ கொள்ளலாமா கூடாதா என்பதன்று. சுறவத்தை (தை) முதல் மாதமாகக் கொண்ட திருவள்ளுவர் தொடராண்டே தமிழாண்டாகக் கொள்ளப்பட வேண்டும் என்பதேயாகும். அப்படிக் கொள்ளும்கால் தமிழாண்டின் தொடக்கம் சுறவம் முதல் நாளே என்பதே ஏற்புடைத்து. அண்ணலார் இந்தப் போக்கில் எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். தொல்காப்பியர் நாள் வேண்டுகோளை இப்போது இடை நுழைப்பது புதுக்கரடியாகவே முடியும்!