இந்தியாவில் உள்ள அனைத்துப் பழைய கோயில்களும் நாட்டை ஆண்ட மன்னர்களால் உருவாக்கப்பட்டன. கோயிலுக்குச் சென்று வணங்குவோர் அளிக்கும் காணிக்கைகளை அரசர்கள், அரசாங்க வருவாயாகப் பெறுவதற் காகவே கோயில்களைத் தாங்களே முன்வந்து வலிய நிறுவினர். ஆக, கோயில்களின் வருமானம் அரசாங்கத்தின் வருமானமாம். அவ்வகையில் சாணக்கியர் காலத்திலேயே கோயில்கள் பொது நிறுவனங்களாக மாறி விட்டன.

அர்த்த சாஸ்திரம் என்ற நூலின் ஆசிரியர் சாணக்கியர் என்ற கெளடில்யர் ஆவார். இவர் 2200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இவர் பார்ப்பனர். இவரை ‘அரசர்களை உருவாக்குபவர்’ என்பர். இவரது ராஜதந்திரத்தை ‘சாணக்கியத்தனம்’ என்றும் பாராட்டுவர். இவரது அர்த்தசாஸ்திரம் மனுஸ்மிருதிக்கும், யஞ்ய வால்கியா ஆகியவற்றிற்கு முன்பே இயற்றப்பட்டதாகும்.

அரசு நிர்வாகத்திலுள்ள நுட்பங்களை, அரசர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரது கடமைகளையும், இராஜதந்திர முறைகளையும் எடுத்தியம்புவதில் சாணக்கியர் ஒரு மிகப்பெரிய மதியூகி என்பர்.

அர்த்த சாஸ்திரத்தில் காணப்படும் கருத்துகள், சாணக்கியர் எந்த அளவிற்கு நேர்மையான பார்ப்பனனாக இருந்தார் என்பதை அறிவிக்கும் சான்றாக அமைந்துள்ளது என்பதை அறியலாம்.

சாணக்கியர், சமய நிறுவனங்களின் கண்காணிப்பாளர்கள் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களுக்குச் சொந்தமான பல்வேறு சொத் துக்களை ஒன்று திரட்டி, அவற்றை அரசனுடைய கருவூலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார்.

அடுத்து சாணக்கியர், அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்குவதற்குப் பல்வேறு வழிமுறைகளைக் கூறுகிறார். இரவில் ஓர் இடத்தில் ஒரு கடவுள் சிலையையோ, பலிபீடத்தையோ அல்லது துறவிகளுக்கான ஒரு புனித இடத்தையோ ஏற்படுத்தி ஒரு கெட்ட சகுணம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி ஊர்வலங்கள், கூட்டங்கள் நடத்தி, தீமையிலிருந்து, பேரழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அதிக நன்கொடைகள் சாமிக்குக் காணிக்கையாகப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார். அரசருடைய நிலைத்த வாழ் விற்குப் பல்வேறு முறைகளில் வருமானத்தைப் பெருக்க சாணக்கியர் கூறுவதாவது :

ஒரு பொய்யான பீதியை மக்களிடையே பரவ விட வேண்டும். ஒரு மரத்தில் கெட்ட ஆவி தோன்றியுள்ளது என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். மன்னனைச் சார்ந்த ஒருவனை ஓரிடத்தில் மறைந்து இருக்கச் செய்து பல குரல்களில் பேய்ச்சத்தம் எழுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். எனவே கோபங்கொண்ட பேயைச் சாந்தப் படுத்துவதற்கும், நாட்டை அமைதியில் கொண்டு வருவதற்கும், பேரழிவிலி ருந்து நாட்டைக் காப்பதற்கும் மக்கள் தயாராக வேண்டும் என்று சாமியார் வேடத்தில் இருக்கும் அரசர்களுடைய ஏவலாளிகள் மக்களிடையே பரப்ப வேண்டும். மக்கள் தாராளமாக வழங்கும் அல்லது கடவுளர்களுக்குச் செலுத்தும் காணிக்கை களால் கெட்ட ஆவி நாட்டைவிட்டு விரட்டப் படுவதாக ஒரு புறத்தில் கூறப்பட வேண்டும். அதே நேரத்தில் அரசருடைய கருவூலம் விரைவாக நிரம்பி விடும். இதுவே அரசினர் வருமானம் பெருக்க சாணக்கியர் கூறும் தந்திரம் ஆகும்.

புனித நீர் பல்வேறு தீமைகளைப் போக்கப் பயன்படும் என்று விளம்பரம் செய்து வசூல் செய்ய வேண்டும். அரசருடைய தோட்டத்தில் உள்ள புனித மரங்களில் காலந்தவறித் தோன்றிய பூக்கள், பழங்கள் கடவுள் வருகையை குறிக்கின்றன என்று மக்களிடம் பரப்பி, அவர்களிடையே பக்தியை வளர்க்க வேண்டும். இவ்வாறு பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் மக்களிடையே நிலைபெறச் செய்வதன் மூலம், அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்க இயலும் என்பது சாணக் கியரின் தந்திர உபாயங்களாகும்.

சாணக்கியர் கூறும் மற்றொரு தந்திரம் பாம்பு பற்றியதாகும் அவர் கூறியது இன்றளவும் நிகழ்ந்துவரும் நடைமுறை உண்மையாகும். பல தலைகளைக் கொண்ட பாம்பு உள்ளது என்று கூறி அதைப்பார்ப்பதற்கு மக்களிடம் பணம் வசூல் செய்ய வேண்டும் என்கிறார்.

ஒரு பொந்தில் பசியால் மயக்கமடைந்த பாம்பைப் படுக்க வைத்துவிடவேண்டும்.. நகராமல் மயக்கத்திலிருக்கும் அப்பாம்மைப் போன்றே, பல தலைகளை அதன் உடல்மீது வரைந்து பல ஓட்டைகள் மூலம் பார்க்கச் செய்து, பாம்பிற்குப்பல தலைகள் உள்ளன என நம்பச் செய்வர். இதை நம்ப மறுக்கும் மக்களில் சிலரின் மீது மயக்க மருந்து கலக்கப்பட்ட நீரைத் தெளித்து மயக்கமடையச் செய்து விடுவர். பல தலை உள்ள நாகத்தை நம்ப மறுத்து, கேள்வி கேட்கும் நபர் கடவுளின் சாபத்திற்குப் பலியாகி உணர்ச்சியற்றவன் ஆனான் என நம்பச் செய்வர். அதைப்போல் அவனைப் பிழைக்கச் செய்ய பரிகாரங்கள் செய்ய வேண்டும் எனக் காரணம் காட்டி பணம் வசூலிப்பர். ஆக அனைத்துக் கோயில் வருமானங்களும் அரசனுடைய கருவூலத்தைச் சென்றடைய வேண்டும். அந்த வருமானத்தில் ஏதேனும் ஊழல் நடப்பதற்குக் காரணமாக யாரேனும் இருந்தால், அவர்கள் சாணக்கியர் காலத்தில் தூக்கிலிடப்பட்டனர் என்பது முக்கிய செய்தியாகும். அக்காலத்தில் கோயில்கள் என்பது அரசர்கள் வருமானம் பெறுவதற்கு நடத்தப்பட்ட நிறுவனங்களாகும்.

கோயில்களும், மதுக்கூடங்களும் பொதுச் சொத்துகளாகும். இந்து வழக்கறிஞர்கள் ‘பொது’ என்ற சொல்லைக் கோயில்களுடன் இணைத்துப் பேசும் போது நான்கு சாதியினர் மட்டுமே கோயிலுக்குள் சென்று வழிபட உரிமை உண்டு என்ற கருத்தில் பேசுகின்றனர். ஆனால் பார்ப்பனர்கள சிற்பங்கள் செய்வதிலோ,கோயில்களை நிர்மாணிப்பதிலோ எவ்விதப் பங்கும் கொள்வதில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாக்ஸ்முல்லர் என்ற ஜெர்மானியர், வேதங்கள் உருவ வழிபாட்டைப் பற்றி எதுவும் கூறவில்லை. உருவ வழிபாடு என்பது பின்னர் தோன்றிய பழக்கமாகும். இது ஒரு சீரழிந்த வழிபாட்டு முறையாகும் என்று கூறுகிறார்.

இந்துக் கோயில்கள், இந்துக் கடவுள்கள் புத்தருடைய உருவத்தைச் சார்ந்து உருவாக்கப் பட்டன. ஆக இந்துக் கோயில்களுக்கு, கடவுளுக்கு முன்னோடியாக இருந்தவை புத்த உருவங்களும், புத்த விகாரைகளுமேயாகும். இதை ஜே.சி.கோஸ் என்பவர் தாகூர் சட்ட பிரசங்கத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

பழங்கால ஆட்சியாளர்கள் மக்கள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதை ஆதரித்து ஊக்கப்படுத்தினர். ஏனெனில் அது அரசாங்கத்தின் வருவாயைப் பெருக்குவதற்கு உதவியது. கோயில் வழிபாட்டைக் கவர்ச்சி நிறைந்ததாக ஆக்குவதற்கு அக்கால மன்னர்கள் இசை, நாடகம் போன்ற வற்றைப் புகுத்தினர். நாளடைவில் கோயில் களையும் அதிலுள்ள சாமி சிலைகளையும் பராமரிக்க நிலம் தேவைப்பட்டது. மேலும் புராதன கோயில்களில் அடிமைப் பெண்கள் பணியாற்றினர். கோயில்களில் நடனமாடத் தனிக்கூடங்கள் இருந்தன. சுருங்கக் கூறின் கோயில்கள் சமுதாயக் கூடங்களாக இருந்தன என்றால் மிகையாகாது.

இன்று கோயில்களிலிருந்து பிரித்தெடுக்க முடியாத அளவிற்கு இரண்டறக் கலந்துவிட்ட பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால் சாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டனர் என்பது வியப்பான செய்தியா கும். இது வரலாற்று ரீதியிலும் கதை வழியிலும் உண்மை என்பது நிரூபிக்கப்பட்ட செய்தியாகும்.

அவ்வாறு விலக்கப்பட்ட பார்ப்பனர்களை வங்காளத்தில் தேவலாஸ் என்று அழைத்தனர். சாதியிலிருந்து விலக்கப்பட்டதால் அவர்களுடைய பராமரிப்பிற்கு - ஜீவனாம்சத்திற்குக் கோயில் வருமானத்தைப் பயன்படுத்த வேண்டியதாயிற்று. இக்கோயில்களில் வழிபட்டு வந்த பார்ப்பனர்களின் தோற்றம் சிறப்புள்ளதாக இல்லை. மேலும் அவர்களது நடத்தையும் சிறப்பாக இல்லை.

அக்காலக் கோயில்களின் வரலாற்றை உற்று நோக்குகையில் தெய்வாம்சம் பொருந்தியதாக, பக்தி நிறைந்ததாக, ஒழுக்கம் உள்ளதாகத் தெரியவில்லை. இதனால் மகாத்மா காந்தி, கோயில்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவை விபச்சார இல்லங்களைக் காட்டிலும் எவ்வகையிலும் உயர்ந்தவை அல்ல என்று மனக் குமுறலுடன் குறிப்பிட்டார்.

அபுதுபே என்ற பிரெஞ்சு பாதிரியார் கடந்த நூற்றாண்டில் கோயிலில் கண்டதாகக் கூறியதாவது: பார்ப்பனர்கள் கோயிலிலிருந்த நடன மாதர்களுடன் எந்தவிதமான தொடர்பு கொண்டாலும், திருமணம் ஆகாத பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் கொடுமையாகக் கருதப் படவில்லை. இவர்கள் எத்தகைய கொடுமைக ளையும், சாதாரணமாகக் கருதினர். நடன மாதர் களும், வேசிகளும் காமக் கேளிக்கைக்காகவே பயன் படுத்தப்பட்டு வந்தனர்.

 ஒரு பறையரோ அல்லது சண்டாளரோ அக்கோயிலுக்குள் சென்று வழிபடுவது என்பது பாவம் என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டால், பார்ப்பனர்கள் இந்துக் கோயிலுக்குள் நுழைவதும் உணவருந்துவதும் அதைவிடப் பாவச் செயலாகும்.

Pin It