கீற்றில் தேட...

1

ஆறுமாதங்களுக்குப்பிறகு உனக்குக்கிடைத்தயிந்த
முதல் விடுமுறையை
எவ்விதம் கொண்டாடுவதென நாம் வகுத்த
இத்திட்டத்தின் வயதும் ஆறுமாதம்.

பேண்டிற்குள் சொருகியே கிடந்த
உன் சட்டையின் கடைசிப்பொத்தான்
சுதந்திரம் பெற்று வெளியுலகைப்பார்க்க
நாற்காலியின் அதிகாரமோ
முடமாய்க்கிடக்கிறது இன்றொரு நாள்.

மதுக்கடைமுன் முதல் ஆளாய் நின்றுகொண்டிருக்கிறோம்
மணித்துளிகளையும் மதுத்துளிகளையும்
துளியும் விரயமாக்காமல்
மிடறுமிடறாய் மிடறுமிடறாய்
பருகிவிடும் முனைப்போடு.

பிறகு
கால்களின் சிறு குழறலோடு
அறைக்குவந்து சேர்ந்ததும்
உள்ளாடை முதற்கொண்டு அத்தனையும் களைந்து
லுங்கிக்குள் வெற்றுடலை நுழைத்துக்கொண்டு
விரலிடுக்கிலிருந்து சாம்பலுதிர புகையுயர
வெகு ஆசுவாசமாய்
சதுரங்கமாடிக்கொண்டிருக்கிறோம்.

எங்கோ நிகழ்ந்து கொண்டிருக்கும்
மெய்யான யுத்தமொன்றின் பிரக்ஞையற்று.

சதுரங்கம் - 2

மௌனம் தீர்ந்துப்போய்
நீங்கள் நகர்த்திய காய்
ஓர் சொல்லென
அடுத்த கட்டத்தின் செவியறைகிறது.

உங்களது பெரு மூச்சை
இசையென முதுகில் சுமந்து
வளைந்தோடுகிறது குதிரை.

பார்வையாளனாய் நின்றுகொண்டிருக்குமெனக்கு
உங்களிருவரின் பலத்தையும் பலவீனத்தையும்
காய் நகர்த்தும் கை காட்டிக்கொடுக்கிறது.

அவர் முன்னேறும்போது அவருக்கும்
நீங்கள் முன்னேறும்போது உங்களுக்கும்
ரெட்டை வேடமணியும் ஆலோசகனாயிருந்து
உங்களதாட்டத்தை
நானாடுவது குறித்து துளியும் வருத்தமில்லை.

இத்தனைப்பேசுகிறாயே
நீ விளையாட வேண்டியதுதானேயென
சிப்பாயொருவன் முணுமுணுப்பது காதில் விழுகிறது.

விளையாட்டு தெரிந்திருப்பது மட்டுமே
விளையாடுவதற்கான தகுதியில்லை.