கொத்தத் துடித்துக் கொண்டிருக்கும்
ஒரு பாம்பின் பகையுடன்
வாழ்வதை என்னால்
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை
நிழலாக கூடவே பின்தொடர்ந்து
கொண்டிருக்கும் அப்பாம்பு
எப்போது வெளிப்படும் என்று
யாருக்குத் தெரியும்...
நடந்து கொண்டிருக்கும்போது
சாலையின் ஓரத்திலிருக்கும்
ஒரு புதரிலிருந்து திடீரென்று
ஊர்ந்து வரலாம்
படுக்கை விரிப்பின் அடியில்கூட
சுருண்டு படுத்திருந்து கொத்தலாம்
இருளில் நீங்கள் வரும்
நேரம் பார்த்து வாசற்படியின்
ஓரத்தில் பதுங்கிக் காத்திருக்கலாம்
நாம் சாப்பிடும் பாலில்
கொஞ்சம் விஷத்தை துப்பி வைத்திருக்கலாம்
வெளியூர் செல்லும் சமயங்களில்
உங்கள் வாகனத்திலேயே பதுங்கிவந்து
ஆளில்லா நேரத்தில்
திடீரென்று படமெடுத்தாடலாம்
குளிக்கச் செல்லும் போது
தண்ணீரின் உள்ளேகூட நீந்திக் காத்திருக்கலாம்
கொத்தத் துடித்துக் கொண்டிருக்கும்
ஒரு பகையிலிருந்து தப்பிக்க
இங்கே அதிக இடமில்லை
கொத்தத் துடித்துக் கொண்டிருக்கும்
ஒரு பகையுடன் வாழ்வதை
எந்த சுதந்திரமானவனாலும்
நினைத்துக்கூடப் பார்க்க முடியாது
- பி.மணிகண்டன்