நிசப்தத்தின் காலடியில் மண்டியிட்டு
சுவற்றில் சாய்ந்தபடி
எதிரெதிர்த் திசைகளில் அசைந்து
உள்ளும் வெளியுமாய்
பார்த்துக் கொண்டிருக்கின்றன கதவுகள்
கிளைகளை ஊனப்படுத்திய
கோடாரிகள் மன்னிக்கப்பட்டன
உடலின் ஞாபகத்தில் குத்தியிருந்த
பச்சையிலைகளின் கடைசி அலறலையும்
முழுவதுமாக மறந்தாகி விட்டது
பிறிதொருநாள்
உராய்வில் இழந்த சருகுகளையும்
நினைவிலில்லை
வீட்டின் வாசலாக நின்று
விரக்தியில் திரும்பும் ஆண்
ஊர்க்கதை தடம் தேடலில் பெண்..
திறப்புகளுக்கும் மூடல்களுக்கும்
பழகி விட்டது
காதல் துளிர்க்கும் பெண்
முடிச்சுகளையும் நுனியையும்
எதிரொலித்த வீட்டினுள்.
தூசித்துளித் திவாலைகளின் புழுக்கத்தினூடே
நடுத்தண்டில் சில்லிட்டிருந்த
பசுமை தளிர்த்தெழுந்தது ஒருநாள்.
- பொன்.வாசுதேவன்