ஒரு மொழிக்குரிய செவ்வியல் தன்மை பல்வேறு அடிப்படை களைக்கொண்டு நிர்ணயிக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று அம் மொழியில் உள்ள இலக்கிய வளமை. அத்தகைய இலக்கியங்களைப் பாதுகாக்கும் பணி நூலகங்களின் வழியாகவே மேற்கொள்ளப்படு கின்றன. தமிழியல் ஆய்வுக்குரிய தரவுகளைப் பாதுகாக்கும் நூலகங்களில் ஒன்று ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். 1994ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட இந்நூலகம் கோட்டையூரைச் சேர்ந்த ரோஜா முத்தையா என்பவரால் சேகரிக்கப்பட்ட நூல்களைக்கொண்டு தொடங்கப்பட்டது. ரோஜா முத்தையா தொகுத்த நூல்களுக்குப் பின்பும் பல நூல்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. பல துறை நூல்களைக் கொண்டுள்ள இந்நூலகம் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகளுக்கு எவ்வாறு துணைநிற்கின்றது என்பது குறித்து இக்கட்டுரை அமைகிறது. செவ்வியல் இலக்கியங்களாகச் சுட்டப்பெறும் 41 இலக்கியங்களில் (தொல்காப்பியம் தவிர்த்து) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள் ளாயிரம், இறையனார் அகப்பொருளுரை ஆகிய 40 நூல்கள் மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலக்கியங்கள் அச்சாக்கம் பெறத்தொடங்கிய பின்பு தமிழியலின் ஆய்வுப்பரப்பு பல பரிமாணங்களில் விரிவடைந்துள்ளது. ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்த ஓலைச்சுவடிகள் தாள்வடிவில் பலருக்கும் பயன்படும் வகையில் மாற்று வடிவம் பெற்றன. சுவடிகளினின்று இலக்கியங்களின் மூலங்களை மட்டும் தனியாகவும் உரையுடனும் பதிப்பித்துள்ளனர். இப்பதிப்புப் பணி ஓர் இயக்கமாகவே நடை பெற்றது. பதிப்பித்தல் என்பது சுவடிகளில் உள்ளவற்றை அப்படியே பதிப்பிக்கும் இயந்திரத்தனமாக நடைபெறவில்லை. கிடைக்கின்ற பிரதிகளை ஆய்வுக்குட்படுத்தி அவற்றுக்கான வரலாற்றையும் பதிப்புச் சிக்கல்களையும் சேர்த்துப் பதிப்பித்துள்ளனர்.

இலக்கியங்களைப் பதிப்பிக்கும்போது பதிப்பாசிரியர்கள் / உரையாசிரியர்கள் பல ஆய்வுமுறைகளை மேற்கொண்டுள்ளனர். அவற்றுள் ஒன்று மூலபாட ஆய்வு. மூல ஆசிரியர் இயற்றியதாக வழங்கும் பாடத்திற்கும் இன்னவாக அது இருத்தல்கூடும் எனப் பதிப்பாசிரியர் கருதுகின்ற பாடத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்வது மூலபாட ஆய்வு எனப்படுகிறது. இதற்கு ஒரே மூலபாடத்திற்குரிய பல பிரதிகள் அவசியம். கிடைக்கின்ற பிரதிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து பதிப்பித்துள்ளனர். 1892இல் உ.வே.சா. சிலப்பதிகாரத்தைப் பதிப்பிக்கும் முன்பு 23 மூலப்படி களை ஆய்வு செய்துள்ளார். 28 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பைக் கொண்டுவரும்போதும் மேலும் மூன்று கையெழுத்துப் படிகளை ஆய்வு செய்துள்ளார் (1990, பக்: 56). இவ்வாறு பல மூலப்படிகளை ஆய்வுசெய்து பெறப்படும் ‘பதிப்பு’ முக்கியமானது. செவ்வியல் இலக்கியங்களின் பெரும்பாலான முதல் பதிப்புகள் இத்தகைய ஆய்வுமுறைக்கு உட்பட்டே பதிப்பிக்கப்பட்டுள்ளன. பதிப்பு வரலாற்றில் இம்முதற்பதிப்புகள் முக்கியப் பிரதியாகக் கருதப்படுகின்றது. எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

செவ்வியல் இலக்கியங்களின் முதற்பதிப்புகளில் பெரும்பாலா னவை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளன. மிகப் பழமையான நூல்கள் சிதைவுறக்கூடும் என்பதால் அவற்றை நுண் படம் எடுத்துப் பாதுகாத்து வருகின்றனர். செம்மொழித் தமிழ் நூல்கள் பதிப்புரைத் தொகுப்பு (2009) என்னும் நூலில் கொடுக்கப் பட்டுள்ள முதற்பதிப்பு குறித்த அட்டவணைப்படி செவ்வியல் இலக்கியங்களான 41 நூல்களில் (தொல்காப்பியம் தவிர்த்து) 30 நூல்களுக்கான முதல் பதிப்பு நூல்கள் இந்நூலகத்தில் உள்ளன (காண்க: இணைப்பு). எட்டுத் தொகையில் அகநானூறு தவிர்த்த அனைத்து முதற்பதிப்பு களும் உள்ளன. ஒவ்வொரு இலக்கியத்திற்கும் உள்ள முக்கிய உரைப்பதிப்புகள் உள்ளன.

மூலபாட ஆய்வுக்கும் பதிப்பு வரலாறு குறித்த ஆய்வுக்கும் ஒரு இலக்கியத்தின் பல்வேறு பதிப்புகள் அவசியம். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒவ் வொரு இலக்கியத்தின் ஆரம்பகாலப் பதிப்புகளி லிருந்து இக்காலப் பதிப்பு வரை காணப்படு கின்றன. தன்னிடத்து இல்லாத நூல்கள் பற்றிய அடிப் படைத் தகவல்களை மற்ற நூலகங்களிலிருந்தும் தனிமனிதரிடமுள்ள நூல்களிலிருந்தும் பெற்று அவற்றைப் பதிவு செய்துள்ளனர். இவற்றில் நூல்களின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பாசிரியர் / உரையாசி ரியர் / தொகுப்பாசிரியர், பதிப்பு ஆண்டு, பதிப்பகம், பழைய நூல்களாக இருப்பின் யாருடைய பொருளுதவியால் அச்சிடப்பட் டுள்ளது என்று முகப்புப் பக்கத்தில் உள்ள செய்திகளையும் நூலின் அளவு, பக்கங்கள், நூல் குறித்த சிறுகுறிப்புகளையும் தொகுத்து கணினியில் பதிவுசெய்துள்ளனர். இம்முறை மற்ற நூலகங்களில் பின்பற்றப்படுவதில்லை. இத்தகைய தகவல் சேகரிப்பு பதிப்பாய்வுகளுக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. மேலும் பழைய அச்சுக்கூடங்களைப் பற்றிய ஆய்வுக்கும் இது பயனுடைய தாக இருக்கும்.

 ஒரு நூலுக்கு எத்தனை உரைகள் எழுதப்பட்டன, எந்தெந்த ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்டன என்பவற்றை இல்லாத நூல் களுக்கும் அறிய முடிகின்றது. செவ்வியல் இலக்கியங்களுக்கான பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பதிப்புகள் இந்நூலகத்தில் மிகுதியாக உள்ளன. ஒரே பதிப்பகத்தின் பல மறுபதிப்புகளும் பல பதிப்பகத்தார் பதிப்பித்த பதிப்புகளும் இங்கு உள்ளன. இப் பதிப்புகள் மூலம் ஒவ்வொரு பதிப்பகமும் மேற்கொண்டுள்ள பதிப்பு முறைமைகளையும் எந்தப் பதிப்பு பலமுறை மறுபதிப் பாகியுள்ளன என்ற தகவலையும் அறிய முடிகின்றது. செவ்விலக் கியங்களைப் பதிப்பிப்பதில் எந்தப் பதிப்பகங்கள் முனைப்பாகச் செயல்பட்டுள்ளன, அவர்கள் யாருடைய பதிப்பினைப் பதிப்பித்துள்ளனர் என்ற அரசியலையும் அறிய இத்தகவல்கள் பயன்படு கின்றன.

செவ்விலக்கியங்களுக்கான உரைகள் குறிப்புரைகளாகவும் கண்ணழித்துப் பொருள்கூறும் வகையிலும் விருத்தியுரைகளாக வும் ஆராய்ச்சியுரைகளாகவும் செய்யப்பட்டன. ஒரே நூலுக்குரிய பல உரையாசிரியர்களின் உரைகளையும் தொகுத்து உரைவளம் செய்யப்பட்டன.

இவ்வுரைகள் காலத்திற்கேற்ப மொழி அமைப்பிலும் பொருண் மையிலும் மாறுபட்டன. ஒரு நூலுக்கான பல்வேறு உரைகளைக் காணும்போது இத்தகைய மாறுபாடுகளை உணரமுடியும். எடுத்துக்காட்டாக, திருக்குறளுக்கு எழுதப்பட்ட உரைகள் திருவள்ளுவரைப் பல சமயங்களோடு அடையாளம் காட்டக் கூடியனவாக உள்ளன. இதற்கு திருக்குறள் குறித்த பலருடைய உரைகள் அவசியமாகின்றன. ரோஜா முத்தையா நூலகத்தில் திருக்குறளுக்கு பன்னிரெண்டுக்கு மேற்பட்ட உரையாசிரியர்களின் உரைகள் உள்ளன. அவற்றில் உரைக்கொத்து, உரைவளம் முதலியன பல உரையாசிரியர் உரைகளைக் கொண்டவை. எளிய உரை தொடங்கி ஆராய்ச்சி உரை வரை பல்வேறு உரைகளும் அதற்கான பல்வேறு பதிப்புகளும் உள்ளன. இவை உரைமரபினை விளங்கிக்கொள்ளவும் ஆய்வு செய்யவும் உதவுகின்றன. ஆங்கில மரபுக்கு ஏற்றவாறும் தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் எழுதப்பட்டுள்ளன. 1957இல் டி.கே.சி. அழகியல் அடிப்படையில் முத்தொள்ளாயிரத்துக்கு உரை எழுதியுள்ளார். இதே அடிப்படை யில் 1960இல் ஸ்ரீ கே.இராஜகோபாலாச்சாரியார் சிலப்பதிகார கானல்வரிக்கு உரை எழுதியுள்ளார். இவை தமிழிலக்கியங்களின் உரைவளத்தைக் காட்டவல்லன. உரைமரபுத் திறனாய்வுக்கு இத் தகைய சிறப்பு உரைகள் இந்நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

செவ்வியல் இலக்கியங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு முன்பு இதுவரை நிகழ்ந்துள்ள ஆய்வுகளைக் காண்பது அவசியம். செவ்வியல் இலக்கியங்களில் சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வுகள் இந்நூலகத்தில் உள்ளன. பத்தொன்பதாம் நூற் றாண்டு தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டு வரையிலான ஆய்வு நூல்கள் உள்ளன. இவற்றில் மொழியியல், தொல்லியல் என்று பல துறை சார்ந்த ஆய்வு நூல்கள் அடங்கும். சங்க இலக்கியங் களில் மீன்கள், புள்ளினம், விலங்கினம், ஆடைகள், உணவுப் பொருட்கள் முதலிய பல தலைப்புகளில் நூல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கன.

பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளுக்குச் செவ்வியல் இலக்கி யங்கள் பயன்படுத்தப்படுகின்றன. செவ்வியல் இலக்கியங்களிலும் இவ்வகை ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சங்க கால நாணயங்கள், சங்க கால பிராமிக் கல்வெட்டுக்கள், சங்க கால எழுத்தியல் முதலிய பல தொல்லியல் சார்ந்த நூல்கள் இந்நூலகத் தில் உள்ளன. ‘கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறள்’ என்பது 1975ஆம் ஆண்டு கிஃப்ட் சிரோமணி என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டது. இதில் காலந்தோறும் திருக்குறள் எவ்வாறு எழுதப்பட்டது என்பதைக் கொடுத்துள்ளனர். விஜயநகரமன்னர் காலத் தமிழ்ப்பாணியில் தொடங்கி சோழர் பல்லவர் பாணியில் எழுதப்பட்டு கடைசிப் பகுதியான இன்பத்துப்பால் தமிழ் பிராமி யில் எழுதப்பட்டுள்ளது. இவை, எழுத்துக்கள் காலந்தோறும் எவ்வாறு எழுதப்பட்டன என்பதைக் கல்வெட்டுக்களைப் பார்த்துத் தொகுக்கப்பட்டவை. இவை ஒரே காலத்தில் வெவ்வேறு வகையாக எழுத்துக்கள் எழுதப்பட்டன என்பதைக் காட்டுகின்றன. இதே நூல் 1980இல் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், கல்வெட்டு எழுத்துக்கள் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. கல்வெட்டு எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியை இந்நூலில் அட்டவணைப்படுத்தியுள்ளனர். இது கல்வெட்டுக்களையும் இலக்கியங்களையும் இணைக்கும் ஒரு நூலாக உள்ளது. இந்நூலின் இரண்டு பதிப்புகளும் ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ளது. மேலும் வாக்கிரிபோலி மொழியிலும் (1979) வட்டெழுத்துக்களி லும் (1976) எழுதப்பட்ட திருக்குறள் நூல்களும் இங்கு உள்ளன. இது போன்ற பிற துறைசார் நூல்களும் இந்நூலகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழியல் ஆய்வுக்கான தரவுகளை ஓரிடத்தில் சேகரித்துப் பாதுகாப்பது ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தலையாய நோக்கமாக உள்ளது. சிதையும் நிலையில் உள்ள பழமையான நூல்களை நுண்படமாக்கியும் பாதுகாத்து வருகின்றது. காலங் கடந்து நூல்களைப் பாதுகாக்கும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.செவ்வியல் இலக்கியங்களின் மூலப்பதிப்புகள், உரைப்பதிப்புகள், ஆய்வு நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளைக் கொண்டுள்ள தமிழ்/ஆங்கில இதழ்கள் என்று பல்வேறு பரிமாணங்களில் தரவுகளைச் சேகரித்துப் பாதுகாத்துள்ளனர்.

நூலகத்தின் பார்வைக் கணினியில் உள்ள தகவல்கள் நூலகத்தில் இல்லாத நூல்களுக்கும் சேகரிக்கப்பட்டுள்ளது பல வகையில் பயன்பாடுடையதாக உள்ளது. கணினிமயப்படுத்தப் பட்ட தகவல்கள் ஆசிரியர், நூல்கள், ஆண்டு, பதிப்பகங்கள் என்று பல அடிப்படைத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஒரு ஆசிரியர் பதிப்பித்த / எழுதியுள்ள பிற நூல்களையும் அவற் றின் காலத்தையும் அறிய உதவுகின்றன. இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளன் தரவுகளைத் தேடும் முயற்சியில் நீண்டகாலம் செலவிடவேண்டிய தேவை ஏற்படுகின்றது. இந்நூலகம் மேற்கொள்ளும் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைமைகள் தமிழியல் ஆய்வாளனுக்குரிய பல்வேறு சிக்கல் களைத் தீர்ப்பனவாக உள்ளன. செவ்வியல் இலக்கியங்களில் ஆய்வுமேற்கொள்பவர்களுக்குப் பல துறைசார்ந்து பல பரிமாணங் களிலும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் துணைபுரிவதாக உள்ளது. விடுபட்டுப்போன செவ்வியல் இலக்கியங்களுக்கான முதற்பதிப்புகளையும் இத்தொகுப்பில் சேர்க்க வேண்டிய கடமை இந்நூலகத்திற்கு உள்ளது.

இணைப்பு:

ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள செவ்வியல் இலக்கியங்களின் முதற் பதிப்புகளும் உரைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நூல்கள்       முதற்பதிப்பு   உரைகள்

எட்டுத்தொகை

1. நற்றிணை   1915 5     

2. குறுந்தொகை      1915  6     

3. ஐங்குறுநூறு 1903  5

4. பதிற்றுப்பத்து      1904  4

5. பரிபாடல்   1918  3

6. கலித்தொகை       1887  7

7. புறநானூறு  1894  3

8. அகநானூறு        1933*  4

பத்துப்பாட்டு

9. பத்துப்பாட்டு      1889  5

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

10. திருக்குறள்       1812  12

11. நாலடியார் 1812  12

12. நான்மணிக்கடிகை 1872  5

13. இனியவை நாற்பது       1863*  3

14. இன்னா நாற்பது  1876  4

15. களவழி நாற்பது  1875  4

16. கார் நாற்பது     187_?* 4

17. ஐந்திணை ஐம்பது 1903  2

18. ஐந்திணை எழுபது       1926  2

19. திணைமொழி ஐம்பது     1922*  2

20. திணைமாலை நூற்றைம்பது       1904  2

21. திரிகடுகம் 1868  4

22. சிறுபஞ்சமூலம்    1875  2

23. கைந்நிலை       1961*  1

24. ஆசாரக்கோவை  1883*  4

25. பழமொழி 1917*  3

26. முதுமொழிக்காஞ்சி 189_?* 3

27. ஏலாதி    1887*  2

28. இன்னிலை 1928*  1

பிற

29. சிலப்பதிகாரம்    1872  10

30. மணிமேகலை     1894  5

31. இறையனார் அகப்பொருள்      1883  2

32. முத்தொள்ளாயிரம் 1935*  4

*      ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ளவை. ஆனால் முதல் பதிப்பு இல்லை.

* ஒவ்வொரு நூலுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட உரையாசிரியர்கள் உரை எழுதியுள்ளனர். ஒரு உரையாசிரியர் உரையைப் பல பதிப்பகங்கள் பதிப்பித்துள்ளன. அவ்வாறு பதிப்பிக்கப்பட்ட பல பதிப்புகள் இந்நூலகத்தில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. 

(நஜ்மா சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் நிறைஞர் பட்டம் பெற்றவர். சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழிலக்கியத் துறையில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளார். சிந்துவெளிக் கூறுகளைப் பற்றி சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையத்தில் பயிற்சி பெற்றுவருகிறார்.)

Pin It