அனைத்து சமூக இயக்கங்கள் போல மாற்று பாலியல்பு சார்ந்த உரிமைக்கான போராட்டத்திலும் கலை வெளிப்பாடுகள் முக்கிய மானவையாக அமைகின்றன. அதிலும் தமது உணர்வுகளை வெளி படுத்த மொழி இல்லாத சூழலில் இக்கலைசார் வெளிப்பாடுகள் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. மேலும் தம்மேல் திணிக்கப்படும் அடையாளப் பெயர்கள் மற்றும் சமூகத்தில் தமக்கென ஓர் இடம் உருவாக்கும் நோக்கத்துடன் தாமே வேறு வழியின்றி தேர்ந்தெடுக்கும் அடையாளப்பெயர்கள் , அப்பெயர் களுடன் கூடி வரும் அடையாளக் குழுக்கள், இவையனைத்தும் பற்றி தம்மிடையேயும் பிற சமூகத்தாரிடையேயும் காணப்படும் இறுக்க மான, பொதுவான வர்ணனைகளுக்குள் இக்கலை வெளிப்பாடுகள் அடங்குவதில்லை. அவைகளைத் தாண்டி ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையின் உண்மைகள், அதனூடே அமையும் இன்ப-துன்பங்கள், இச்சைகள் ஆகியவை இவ்வெளிப்பாட்டில் வெளிக் கொணர வாய்ப்புண்டு. ஏதோ ஒருசில பாலினம் மற்றும் பாலியல்பு கொண்டோர் மட்டுமே இத்தகைய அனுபவங்கள் பற்றி பேசவும் யோசிக்கவும் தேவை உள்ளது என்னும் தவறான கருத்தை உடைத்து, இக்கேள்விகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கேட்கப்பட வேண்டியவை என்றும் அதுவே இக்கருத்துருவாக்கங்களின் நோக்கம் என்பதையும் வெளிப்படுத்த இக்கலை வடிவங்கள் உதவுகின்றன.

இக்கலை வெளிப்பாடுகளின் வலிமை இன்றைய தனி மனித வாழ்க்கை மற்றும் சமூக இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல் வரலாற்றின் ஒரு முக்கிய அங்கமாகவும் விளங்குகின்றன. அதேபோல, இன்று பாலியல்பு பற்றிய கருத்துருவாக்கத்தில் இத்தகைய வெளிப்பாடுகளை சேர்த்துப் படித்தல், நமக்குப் பல முக்கிய கோட்பாடுகளை உணரவும் புரிந்து கொள்ளவும் உதவும். கடந்த சில ஆண்டுகளின் வரலாறானாலும் சரி அதற்கு முந்தைய வரலாறானாலும் சரி, அவற்றை இவ்வெளிப்பாடுகளின்றி காணுதல் முழுநிறைவற்றதாகவே அமையும்.

பாலியல்பு சார் கருத்துருவாக்கமும் அதுபோன்ற மற்ற பெண்ணிய கோட்பாடுகளும் எப்போதும் கருத்துருவாக்க வரையறைகளை மாற்றியமைப்பதில் ஈடுபட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக இக்கருத்துருவாக்கதில் கலைவெளிப்பாடு போன்றவையைக் கொண்டுவருவது ஓர் அங்கமாகும். உணர்ச்சி, அரசியல், அனுபவம் ஆகியவை ஒன்றுடன் ஒன்றினைந்தவை என்பதும் அவைகளை வெளிபடுத்தும் மொழிகள் சொற்களின் ஊடாக மட்டும் அமைவதில்லை என்பதனையும் தெள்ளத் தெளிவாக கூறுவதற்கு கலையும் ஒரு வழியாக அமைகின்றது.

இவ்வனைத்துக் காரணங்களால் மாற்றுவெளியின் இச் சிறப்பிதழில் ஒரு சில கலை வடிவங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

Pin It